1094. பிளவு கொண்டதண் மதிநுதற் பேதைய
                              ரெயிற்றைக்
களவு கொண்டது தளவெனக் களவலர் தூற்றும்;
அளவு கண்டவர் குழனிறங் கனியுமக் களவைத்
தளவு கண்டெதிர் சிரிப்பன தமக்குமுண் டென்று.
17

     (இ-ள்.) பிளவு ....... தூற்றும் - பிளவுபட்ட குளிர்ச்சி
பொருந்திய மதியை ஒத்த நெற்றியினையுடைய இடைச்சியர்களது
பற்களினழகை முல்லை யரும்புகள் களவு கொண்டன என்று
களாச்செடிகள் அலர்தூற்றுவன; அளவு கண்டு...என்று - (அதனை)
அளவையினால் முல்லை அறிந்து, அவ்விடைச்சியரது கூந்தலின்
நிறம்போலக் கனிந்த அந்தக்களவினைத் "தமக்கும் அதுவுண்டு"
என்று சிரிப்பன.

     (வி-ரை.) இப்பாட்டுத் தன்மையணியும், உயர்வுநவிற்சியும்,
தற்குறிப்பேற்றமும் சிலேடையும் விரவிய கலவையணி நயம்படக்
கூறப்பட்டதாம்.

     பிளவுகொண்ட மதி - இருபிளவாகப் பிளந்தது போன்ற
வடிவுடைய மூன்றாம் பிறை. மதிநுதல் - மதிபோன்ற நெற்றி.
மெய்பற்றிவந்த உவமம்.

     பேதையர் - இடநோக்கி இடைச்சியரைக் குறித்தது.

     எயிற்றைத் தளவு களவுகொண்டது என்க. எயிறு -
எயிற்றின் வடிவம் நிறம் முதலியன; ஆகுபெயர்.

     எயிற்றைக் களவு கொள்ளுதல் என்றது அதன் அழகைக்
கவர்ந்துகொண்டு அதுபோல விளங்குதல். இடைச்சியர்களின்
பற்கள் முல்லை யரும்புகள்போலவுள்ளன என்பது கருத்து.

     களவு அலர் தூற்றும் - அலர் தூற்றுதல் - பழித்தலுக்கும்
மலர்கள் சிந்துதலுக்கும் சிலேடைபடக் கூறினார். களவு - களாச்செடி
(களாமரம் எனினுமாம்).

     அளவு கண்டு - அளவையினால் அறிந்து. அலர்
தூற்றுதலினால் அதன் உள்ளுறையைக் கருதலளவையினால்
கண்டு என்பது குறிப்பு. தூற்றும் - தூற்றுகின்ற எனப்

     பெயரெச்சமாகக் கொண்டு, அளவு - தன்மை என்று
கொண்டு, தூற்றும் தன்மை என்றுரைப்பினு மமையும்.
அலர்தூற்றல் - பலரறியப் பழிசொல்லுதல்.

     அவர் குழல் நிறம்கனியும் - அவர் - அவ்விடைச்சியர்;
குழல்நிறம் - குழலின் நிறம்போன்ற கருமை நிறம். கனியும் -
குழனிற முடையனவாகப் பழுக்கும். களாப்பழம் கருமையுடையது.
"களங்கனியைக் காரெனச் செய்தாருமில்" - நாலடி. "காக்கையிற்
கரிது களம்பழம்" என்று உதாரணமாக எடுத்துக் கூறுவதும்
காண்க. கருமை நிறமே உருவமாகப் பழுத்தது போலும் என்பதாம்.
களா - கள - களவு. "குறியதன் கீழாக் குறுகலு மதனோ டுகர
மேற்றலும்" என்ற விதிப்படி களா என்பது களவு என்று வந்தது.
நிலா - நிலவு என்பதுபோல. "வண்ண நீடிய மைக்குழம் பாமென்று"
(455), "இழுது மையிருட் கிருளென" (திருஞான - புரா - 678)
முதலியவை காண்க.

     அக்களவை - அலர்தூற்றும் என்று களவுக்
குரைத்ததுபோல,இங்கும் அந்தக் களாமரத்தினை என்றும், அந்தக்
களவினை - திருட்டுத்தனத்தை - என்றும் இருபொருள்படக்கூறின
சுவை காண்க.

      - அவ்வாறு அலர்தூற்றிய . - என முன்னறி சுட்டு.

     எதிர் சிரிப்பன - எதிர் - அந்த அலர் தூற்றுதலுக்கு
எதிராக; சிரிப்பன - மலர்கின்றன. முல்லை மலர்தல் சிரித்தல்
போலாகும் என்பது.

     "தமக்கும் உண்டு என்று சிரிப்பன" வௌவிய அந்தக்
களவுத்தன்மை அலர் தூற்றும் தமக்கும் உண்டு என்ற
கருத்துடன் சிரிப்பன.

     எயிறு தளவின் தன்மைத்து - குழல் களவின்
தன்மைத்து
என்பன தன்மையணிக்குறிப்பு. கனிவு குழனிறங்
களியும்
- என்பது உயர்வுநவிற்சி. அலர் தூற்றல் - சிரித்தல் -
இவை களவு கொண்டது தற்குறிப்பேற்றமும் சிலேடையும்.

     ஓரிடத்திலே வெவ்வேறு பொருள்களைத் திருடிய இருவர்
ஒருவரை யொருவர் அலர் தூற்றிக்கொள்ளும் சுவைபட
உரைப்பது இத்திருப்பாட்டு.

     முல்லைக் கருப்பொருள்களும் களா அதற்குரிய மரமும்,
முல்லை - பூவுமாம்.

     தளவு - கொடிக்கும் பூவுக்கும், களவு - மரத்துக்கும்
(செடிக்கும்) பழத்துக்கும் முதல்சினை யொற்றுமை பற்றிக் கூறினார். களவு அலர் தூற்றும்போது அரும்பாயிருந்த முல்லை, அது
கண்டபின்சிரிப்பதுபோல அலர்ந்தது என்று முன்பின் கால ஒழுங்கு
காணும்படி, பின்வைத்த வைப்புமுறையும் காண்க. 17