1095. மங்கை யர்க்குவாள் விழியிணை தோற்றமான்
                                குலங்கள்
எங்கு; மற்றவ ரிடைக்கிடை மலர்க்கொடி யெங்கும்;
அங்கண் "முல்லையின் றெய்வ" மென் றருந்தமி
                             ழுரைக்குஞ்
செங்கண் மாறொழுஞ் சிவன்மகிழ் திருமுல்லை
                                 வாயில்.
 18

     (இ-ள்.) அங்கண் - அந்த முல்லை நிலத்தில்;
மங்கையர்க்கு...குலங்கள் எங்கும் - இடைச்சியர்களின் வாள்
போன்ற விழியிணைகளுக்குத் தோல்வியடைந்த மான் கூட்டங்கள்
எங்கும் உள்ளன; மற்றவர்..கொடி எங்கும் - மற்று
அவ்விடைச்சியரின் இடைகளுக்குத் தோற்ற (முல்லை) பூங்கொடிகள்
எங்குமுள்ளன; முல்லையின்...திருமுல்லைவாயில் - முல்லை
நிலத்துக்குரிய தெய்வமென்று அரிய தமிழ்ப்பொருளிலக்கணத்தில்
உரைக்கப்படுகின்ற செங்கண்ணுடைய திருமால் பூசித்த
சிவபெருமான் மகிழ்ந்து வீற்றிருக்கும் திருமுல்லைவாயில்
என்றதலம் உள்ளது.

     (வி-ரை.) அங்கண், மான்குலங்கள் எங்கும் உள்ளன;
மலர்கொடி எங்கும் உள்ளன; திருமுல்லைவாயில் உள்ளது
என்று பயனிலைகளை விரித்துரைத்துக் கொள்க.

      மங்கையர் வாள் விழியிணைக்கு - என்க. இங்கும்
நான்காம் வேற்றுமை உருபு விரித்துக்கொள்க. விழியிணைக்குத்
தோற்ற
லாவது அவ்விழிகள் போன்ற அழகும் மருண்ட
பார்வையும் தம் கண்களுக்கில்லாமை.

     இடைக்கு இடை கொடி - என்றதும் அவ்வாறே கொள்க.
இடைதல் - தோல்வியுற்று உடைதல். இவையிரண்டும் உயர்வு
நவிற்சியும் தற்குறிப்பேற்றமுமாம்.

     மலர்க்கொடி - இடநோக்கி முல்லைக்கொடியினைக் குறித்தது.
முல்லைக் கொடிகளின் துவண்டு வளைந்திருக்கும் தன்மை காண்க.

     முல்லையின் தெய்வம் என்று அருந்தமிழ் உரைக்கும்
செங்கண்மால்
- நானிலத்துக்கும் அவ்வநிலத்துக்குரிய தெய்வம்
உண்டு. அதனைப் பொருளிலக்கணம் "மாயோன் மேய காடுறை
யுலகமும்,
சேயோன் மேய பெருமணமைவரை யுலகமும், வேந்தன்
மேய தீம்புன லுலகமும், வருணன் மேய லுலகமும், முல்லை
குறிஞ்சி மருத நெய்தலெனச், சொல்லிய முறையாற் சொல்லவும்
படுமே" (தொல் - அகத் - 5) என்று அறிவிக்கின்றது. முல்லைக்
கருப்பொருள்களுள், உரிய தெய்வம் திருமால் என்பது
அறிவிக்கப்பட்டபடியாம். அருந்தமிழ் அரியதாகிய தமிழ்ப்
பொருளிலக்கணம். அருமையாவது இவ்விலக்கண அமைதி
வேறு எந்த மொழிக்கும் இல்லாமை. தமிழ் - தமிழ்ப்
பொருளிலக்கணத்துக்கு வந்தது. ஆகுபெயர்.

     மால்தொழும் சிவன் - மால்தான் தெய்வமாக ஆட்சிபுரியும்
உரிமைகொண்ட முல்லைநிலத்தில் தனக்குப் பெருமானாகச் சிவனை
வழிபடுகின்றார் என்ற சிறப்புப்படக் கூறினார். முல்லையின்
தெய்வமென்று உரைக்கும்
- என்ற இலேசினாலும் குறிப்பினாலும்
முல்லை முதலாகிய அவ்வநிலத்துக்குரிய தெய்வமிதுவிது
என்றுரைப்பது உபசாரமே என்பதும், அத்தெய்வங்களை அங்கங்கும்
நிறுவி அத்தெய்வங்கட்குத் தெய்வமாய் ஆட்சிபுரிபவர்
சிவபெருமானே என்பதும் அவரே முழுமுதல்வர் என்பதும்
கருதலளவையாற் பெறவைத்தார். முல்லையின்
தெய்வமென்றுரைக்கும் மால்தொழும்
என்ற கருத்துமிது.

     சிவன் என்றதனால் முழுமுதற் கடவுள் என்பது பெறவைத்தார்.
"சிவனெனு நாமந் தனக்கே யுடைய செம்மேனி யெம்மான்",
"பரமுதலாயதேவர் சிவனாயமூர்த்தி" என்ற அப்பர் சுவாமிகளின்
திருவாக்குக்கள் காண்க.

     சிவன் மகிழ் திருமுல்லைவாயில் சிவன் எங்கும்
நிறைந்துள்ளவராயினும் திருமுல்லைவாயிலில் சிறந்த விளக்கத்தோடு
வீற்றிருப்பார் என்பார் மகிழ் என்றார். சிவபெருமான்
முல்லைக்கொடியின் கீழ் எழுந்தருளியிருத்தலால் முல்லைவாயில்
எனப் பெயர்பெற்றது. சோழநாட்டில் சீகாழிக்கருகில் உள்ள
இப்பெயர்பெற்ற தலத்தினின்றும் பிரித்துணரத், தொண்டை
நாட்டிலுள்ள இது, வடதிருமுல்லைவாயில் என்று வழங்கப்பெறும்.
"சொல்லரும் புகழான் றொண்டைமான் களிற்றைச் சூழ்கொடி
முல்லையாற் கட்டிட், டெல்லையி லின்ப மவன்பெற
வெளிப்பட்டருளிய விறைவனே யென்று, நல்லவர் பரவுந்
திருமுல்லை வாயி னாதனே!" (தக்கேசி-10) என்ற ஆளுடைய
நம்பிகள் தேவாரம் இந்தச் சரிதத்தினையும் பெயர்க்காரணத்தையும்
விளக்குதல் காண்க. இத்தலத்தில் ஒருகாலம் தொண்டைமான்
யானையேறிச் செல்லும்போது அவனது யானையின் காலில்
முல்லைக்கொடிகள் சுற்றி அதனை மேற்செல்லவொட்டாது
தடுத்துவிட்டன; அவன் முல்லைக்கொடிகளை வாளினால் வெட்ட,
அது அந்த முல்லைவனத்தில் மறைந்திருந்த நாயகரின் திருமேனியில்
பட்டு இறைவர் வெளிப்பட்டனர். அந்தச் சுவடு இன்றும்
காணத்தக்கது.

     இத்தலம் அம்பத்தூர் என்ற (M.S.M.Ry.) இருப்புப்பாதை
நிலையத்தினின்றும் வடமேற்கே மட்சாலையில் 3 நாழிகை
யளவில் அடையத்தக்கது.

     குறிப்பு :- இப்பாட்டிற்கு மேலே குறித்தபடியன்றித்,
திருமுல்லைவாயிலில் எங்கும் மான் கூட்டங்களும் கொடிகளும்
உள்ளன என்று கூட்டி வினைமுடிபு கொண்டு உரைத்தனர் முன்
உரைகாரர்கள். இராமநாதச் செட்டியார் உரைக் குறிப்பினைப்
பின்பற்றி இங்கு மேற்கண்டவாறு கூட்டி உரைக்கப்பட்டது. 18