1099.
|
பிள்ளை
தைவரப் பெருகுபால் சொரிமுலைத்
தாய்போன்
மள்ளர் வேனிலின் மணற்றிடர் பிசைந்துகை வருட
வெள்ள நீரிரு மருங்குகால் வழிமிதந் தேறிப்
பள்ள நீள்வயற் பருமடை யுடைப்பது பாலி. 22 |
(இ-ள்.)
பாலி - பாலாறு; பிள்ளை...தாய்போல் - மகவு தன்
கையினாற்றடவிடப் பெருகும் பால் சொரிகின்ற தனங்களையுடைய
தாயினைப் போல; மள்ளர்....கைவருட - உழவர்கள் வேனிற்
காலத்தில் மணல்மேடுகளைப் பிசைந்து காலுண்டாக்கி ஒழுங்குசெய்ய;
வெள்ளநீர்...ஏறி - ஊறிப் பெருகுகின்ற நீர் இருபக்கங்களிலும்
கால்வாய்களின் வழியே மிதந்து மேலேறிப்போய்;
பள்ளநீள்...உடைப்பது - பள்ள நிலத்திலுள்ள நீண்ட வயல்களின்
பரிய மடைகளை உடைப்பது.
(வி-ரை.)
பிள்ளை தடவப் பால்சொரியும் முலையினையுடைய
தாயின் செய்தியை, மணற்றிடர் பிசைந்து கை வருட நீர் சுரக்கும்
பாலியின் செய்திக்கு உவமித்தார்.
பாலி
- பாலாறு என்ற பெயருக்கேற்பக் கூறிய பால் சொரியும்
உவமை நயத்தை நோக்குக.
பிள்ளை...போல்
- குழவி கை வருடி வாய்வைத்தபோது பால்
சுரந்தும், அல்லாத காலங்களிற் பால்கரந்தும் இருப்பது தாய்
முலையின் இயல்பு. அவ்வாறே, தம்மை ஊட்டும் தாய்போற் கண்டு மள்ளர் வேண்டி மணற்றிடர்
பிசைந்து கைவருட நீர் சுரந்தும்,
அல்லாதபோது நீர் உட்கரந்தும் உள்ளது பாலாறு என்பதாயிற்று.
வேண்டுங் காலமறியாது வேண்டாதபோதும் எஞ்ஞான்றும் நீர் பெருக ஓடிக்கொண்டிருக்கும்
ஏனைப் பேரியாறுகள் எப்போதும்
பாலொழுகும் நோய்த் தன்மைகொண்ட முலைத் தாயைப்போல
(அந்நோய் நீக்கம்பெறும் அவசியம்) உள்ளவை என்றது குறிப்பாம்.
இதனால் எப்போதும் நீர் பெருக்கும்பெருநதிகளும் மேல் நீரின்றி
மணற்பரப்பாய்க் கண்டு உள் நீர் ஊறும் பாலாற்றுக்கிணையில்லன
என்று தன்மையணியில் வைத்து உயர்வு நவிற்சி பெறக் காட்டியது ஆசிரியரது உண்மை பிறழாத்
தெய்வக் கவிமாண்பாகும்.1
வெள்ளநீர்...பருமடை
உடைப்பது - மணற்றிடர் பிசைந்து
இவ்வாறு தோண்டுகாலில் வரும் ஊற்று நீரேயாயினும் அது பெருகிச்
சென்று பள்ளத்தில் உள்ள வயற் பகுதிகளிற் சேரும்போது செழித்துப்
பெருக்கெடுத்துப் பாய்ந்து பரிய மடையையும் உடைக்கவல்லதாகும்
என்பது. வெள்ளநீர் - என்றதனால் கீழ்ப்
போகப்போக
நீர்ப்பெருக்குளதாகும் இயல்பும், இருமருங்கு என்றதனால்
பாலாறு
இருகரையும் செழிக்கப்பாயும் இயல்பும், மிதந்துஏரி என்றதனால்
மெல்ல ஓடிச்சேர்ந்து உயரத்தில் ஏறிப்பாயும் இயல்பும்,
பள்ளநீர்வயல் - என்றதனால் இத்தன்மையும் யனும் ஆற்றின்
பகுதிக்குப் பள்ளத்தில், உள்ள வயல்களுக்கே உளதாகும் இயல்பும்,
வயல்கள் நீண்டு பெரியனவாயிருக்குமியல்பும், பருமடை
என்றதனால்
அந்நீரின் பெருக்கினைத் தடுத்து வழிப்படுத்தப் பரியமடைகள்
வேண்டப்படும் இயல்பும் தன்மையணியில் வைத்துக் கூறிய
கவிநயம் காண்க. "பள்ள மடையாய்" (சிறுத் - புரா - 4) என்றது
காண்க. இக்காட்சிகள் இன்றும் உள்ளனவாய்ப் பாலாற்றின் பல
பகுதிகளிலும் காணத்தக்கன. வேனிலில் - கை வருட என்றதனால்
ஏனைக்காலங்களில் இயல்பாகவே சென்று பாயும்
என்பது குறிப்பு. 22
1. இது பற்றி
எனது சேக்கிழார் 136, 137 பக்கங்களில்
உரைத்தவை பார்க்க.
|