1097. வாச மென்மலர் மல்கிய முல்லைசூழ் மருதம்
வீசு தெண்டிரை நதிபல மிக்குயர்ந் தோடிப்
பாச டைத்தடந் தாமரைப் பழனங்கண் மருங்கும்
பூசல் வன்கரைக் குளங்களு மேரியும் புகுவ.
 20

     (இ-ள்.) வெளிப்படை. வாசனையுடைய மெல்லிய மலர்கள்
நிறைந்த முல்லைக்கொடிகளையுடைய முல்லை நிலத்தினை அடுத்த
மருத நிலத்தில், வீசுகின்ற தெள்ளிய அலைகளையுடைய பல நதிகள்
மிக்கு உயர்ந்து ஓடிப், பசிய இலைகளையுடைய பெரிய தாமரைகள்
பூத்தற்கிடமாகிய வயல்களின் பக்கங்களிலும், பறவைகளின் ஒலி
மிகுதியுடைய வலிய கரைகள் பொருந்திய குளங்களிலும் ஏரியிலும்
புகுவன என்க.

     (வி-ரை.) வாசமென்மலர் - இடநோக்கி முல்லை மலர்களைக்
குறித்தது. முல்லை சூழ் மருதம் - முல்லையை அடுத்த மருதநிலம்.
"எல்லையின் புறத்தன முல்லை" (1093) என்றது காண்க.

     வீசுதெண்திரை நதிபல - பாலி - கூவம் - குசஸ்தல ஆறு -
கம்பை - அடையாறு - வேகவதி - செய்யாறு - முதலியன. தெள்திரை - வெள்ளம் வரும் சில நாட்களிலன்றி
ஏனைக்காலமெல்லாம் தெளிந்த தண்ணீரே வருதல் குறிப்பு.

     நதிபல - ஓடி - பழனங்கள் மருங்கும் - குளங்களும் -
ஏரியும் புகுவ என்க.

     மிக்கு உயர்ந்து ஓடி - மிகுதல் - நீர்பெருகுதல்; உயர்தல்
- கரையினுள் அடங்காமல் மேற்கிளம்புதல்; ஓடுதல் - வேகங்
குறித்தது.

     பூசல் வன் கரை - பூசல் - குளக்கரையில் உள் மரங்களில்
அளவில்லாத பறவைகள் கூடிச் செய்யும் பற்பல விதமான ஒலி.
பூசல்
என்பதற்கு இவ்வாறன்றி அலைகள் மோதுகின்ற
என்றுரைத்தனர் முன்னுரைகாரர்கள்.

     குளம் - ஏரி - நாற்புறமும் வலிய கரைகள்
இடப்பட்டனவாய்த், தாமரை முதலியவை பூத்தற்கிடனாய், ஊரினுள்
இருக்கும் சிறிய நீர் நிலைகளாகிய வாவிகள் குளம் எனவும்,
அவ்வாறல்லாது அளவாற் பெரியனவாய் ஊரின் புறத்து
இருப்பனவாய்ப் பெருங் கரைகளால் தண்ணீர் தேக்கப்பட்டுப்
பயிருக்கும் உதவும் பெரு நீநிலைகள் ஏரி எனவும் படும். ஏரிகள்
நீர் நிறைந்தபோது எண்ணிறந்த பறவைகள், நீர்வாழுயிர்கள்,
ஏனையுயிர்கள் இவைகளுக்கும் தாவரவுயிர்களுக்கும் வரைவின்றி
உதவுவன என்பதனை "ஏரி நிறைந்தனைய செல்வன் கண்டாய்"
(திருத்தாண்டகம் - திருமறைக்காடு - 5) என்று உவகை முகத்தால்
அருளினர் அப்பர் சுவாமிகள். தனக்குவமையில்லாதானது
கருணைக்கு உவமையாகக் காட்டத்தக்க பெருமை யுடையது ஏரி
என்பதாம்.

     புகுவ - அணை முதலிய செயற்கை முயற்சிகளாற் றேக்கிப்
புகுத்தலன்றி, இயல்பாய்த், தாமாகவே, புகுவன என்பது குறிப்பு.

     உயர்ந்தோங்கி - என்பதும் பாடம். 20