1098. துங்க மாதவன் சுரபியின் திருமுலை சொரிபால்
பொங்கு தீர்த்தமாய் நந்திமால் வரைமிசைப்
                              போந்தே
அங்க ணித்திலஞ் சந்தன மகிலொடு மணிகள்
பங்க யத்தட நிறைப்பவந் திழிவது பாலி.
21

     (இ-ள்.) வெளிப்படை. உயர்ந்த தவத்தையுடைய வசிட்ட
முனிவனிடமிருக்கும் காமதேனுவினுடைய திருமுலை சொரிந்த
பாலானது,
பெருகுகின்ற தீர்த்தமாக உருப்பட்டு
நந்திமலையினின்றும் போந்தே, அவ்விடத்துள்ள முத்துக்களையும்,
சந்தனம் அகில் முதலியவற்றோடு, மணிகளையும் கொண்டுவந்து
தாமரைத் தடாகங்களில் நிறைக்கும்படி கீழ் இறங்கி
ஓடிவருகின்றது. பாலியாறு எனப்படும்.

      (வி-ரை.) பாலி - மேற்கூறிய பல நதிகளுள் ஒன்று பாலாறு.
அது சிறப்புடையதாதலின் அதனை இப்பாட்டாலும் வரும்பாட்டாலும்
கூறுகின்றார். இப்பாட்டினாற் பாலி (ஆறு) என்ற பெயரின்
காரணத்தையும் அதன் வரலாற்றுச் சிறப்பினையும் கூறுகின்றார்.
நாட்டுச் சிறப்பிலும் நகரச்சிறப்பிலும் இவ்வாறே முதலிற் பழஞ்சரிதத்
தொடர்பு காட்டிச் சிறப்பித்து, அதன்பின் இந்நாட் சிறப்புக் கூறியது
காண்க.

     துங்கமாதவன் - வசிட்ட முனிவன். துங்கம் - பெருமை.
துங்கம் - மா - ஒருபொருட்பன்மொழி மிகுதி குறித்தது.

     பாலி - பால், பொங்கு தீர்த்தமாய்ப் பெருகிப், போந்தே,
இழிவதனால் இப்பெயர் பெற்றதென்று பெயர்க் காரணங்
கூறியவாறு. இப்பெயர்க்கேற்ற சிறப்பு விளங்கும் தன்மையினையே
மேல்வரும் பாட்டினுந் தொடர்ந்து கூறுதல் காண்க.

     நித்திலம்....பாலி - "சந்தன வேருங் காரகிற் குறடுஞ்
தண்மயிற் பீலியும்.....சுமந்து கொண்டுந்தி, வந்திழிபாலி"
(வடதிருமுல்லைவாயில் - தக்கேசி - 5) என்ற ஆளுடைய
நம்பிகள் தேவாரம் இங்கு நினைவு கூர்தற்பாலது.

     சுரபியின் திருமுலை சொரிபால் நந்திவரை
மிசைப்போந்த
வரலாறு :- ஒரு காலத்தில் நந்திமலையின்மேல்
வசிட்டர் தவஞ்செய்திருந்தனர். அவரது ஆச்சிரமத்தில் ஏவல்
செய்துகொண்டிருக்கும் காமதேனு சிவபெருமானது இடபதேவரைக்
கண்டு விருப்பங்கொண்டது. அதனை முனிவர் அறிந்து ஒரு
தருப்பையினை எடுத்துஎறிய அத்தருப்பை ஓர் இளங்கன்றாகியது.
அதனைக் கண்டு மனத்துள் அன்புபெருக உருகிக் காமதேனு
பாலினை மலைமீது பொழியவே, அதுவே தீர்த்தமாய்ப் போந்து
பாலாறெனப் பெருகிற்று என்பதாம். "கழிந்த பற்றுடை வசிட்டன
திருக்கையாக் கவிஞர், மொழிந்த நந்தியம் பெருவரை" (9)
என்றும், "வாலிதாகிய குணத்தினன் வசிட்டனென் றுரைக்குஞ்,
சீல மாமுனி படைத்ததோர் தேனுவின் றீம்பால், சால நீடியே
தொல்லைநாட் படர்ந்திடு தன்மை" (11) என்றும் வரும்
கந்தபுராணம் ஆற்றுப்படலங் காண்க.

     பொங்கு நீத்தமாய் - என்பதும் பாடம். 21

.