1100. |
அனைய
வாகிய நதிபரந் தகன்பணை மருங்கின்
கனைநெ டும்புன னிறைந்துதிண் கரைப்பெருங்
குளங்கள்
புனையி ருங்கடி மதகுவாய் திறந்திடப் புறம்போய்
வினைஞ ரார்ப்பொலி யெடுப்பநீர் வழங்குவ
வியன்கால்.23
|
(இ-ள்.)
வெளிப்படை. அத்தன்மையான நதிகள் பரத்தலால்
வயல்களின் பக்கங்களில் ஒலிசெய்கின்ற நீண்டபுனல் நிறைந்து,
திண்ணிய கரையையுடைய பெருங் குளங்களுட் சேர்ந்து, அவற்றிற்
கட்டப்பட்ட பெருங்காவலுடைய மதகுவாய்கள் திறந்துவிட
அவ்வாய்களின் மூலம் வெளியேபோய், மள்ளர்கள் நீர்வரவு கண்டு
ஆரவாரம் செய்யும் ஒலிமிகும்படி இடமகன்ற கால்வாய்களின்
வழியே நீரினை வழங்குவன.
(வி-ரை.)
அனையவாகிய நதி - 1099-ல் கூறிய பல
நதிகளுள்ளே சிறந்த பாலாற்றின் பெருமை மேலிரண்டு
பாட்டுக்களாற் கூறிய ஆசிரியர், அதுபோன்ற ஏனை நதிகளின்
சிறப்பினை இப்பாட்டாற் கூறுகின்றார். ஆற்றின் நீர் நேரே
வயல்களிற் பாய்வதும், குளங்களுட் புகுந்து தேக்கப்பட்டு
மதகுகளின் வழிக் கால்வாய்களால் வயல்களிற் பாய்வதும்
ஆக நீர்பாசன வசதி யிருவகைப்படும். அவற்றுள் ஏனை
நதிகள் பாலாறுபோல நேரே வயல்களுட் சென்று பாயாமல்,
குளங்களை நிரப்பி அங்கு நின்றும் மதகு - கால்வாய் - இவற்றின்மூலம் வயல்களில் சென்று
பாய்வன என்பதாம்.
நேரே தான் கொடுத்துவக்கும்
வள்ளல்போலப் பாலாறும்,
தன்பொருளைப் பிறர்பாற் கொடுத்துச் சேமஞ்செய்து அவர்கள்
விரும்பியபடி அவர்கள் மூலம் கொடுக்கும் கொடையாளிபோல
ஏனை நதிகளும் உள்ளன என்ற இந்தக் குறிப்பினால்
பாலாற்றின் சிறப்புக் கூறியதுமாயிற்று.
புனை
இருங் கடி மதகு வாய்திறந்திட - வெள்ள நீரைத்
தேக்கிவைத்து வேண்டிய போது வேண்டிய அளவு வேண்டிய
நிலங்களுக்குள் புக விடுவதற்கு ஏரிக்கரைகளில் திண்ணிய பெரிய
காவல்பெற்ற மதகுகள் வேண்டப்படுவன. பெருநீர்த் தேக்கத்தினால்
கூடும் கனத்தைத் தாங்குவதற்குத் தக்க வலிமையும் காவலும்
வேண்டப்படுவதனால் இருங் கடிமதகு என்றார். இது மனிதர்
நினைந்து மேற்கொண்ட பெருமுயற்சியால் வகுக்கப்படுதலின் புனை
என்றார்... திறக்கவும் அடைக்கவும் ஏற்றபடி அமைக்கப்படுவதென்ற
குறிப்புப்பட வாய்திறந்திட என்றார்.
நதிகள் பரந்து
- புனல்நிறைந்து - குளங்கள் புகுந்து -
மதகுவாய் திறந்திடப் - புறம்போய் - ஒலிஎடுப்பக் - கால் (வழி) -
நீர் வழங்குவ எனக் கூட்டி முடிக்க.
கனைநெடும்புனல்
- பெருநீர்ப்பெருக்கு இரைச்சலுடன்
வருதல் குறித்தது.
திண்கரைப்
பெருங்குளங்கள் - (சிறையிட்ட) தேக்கப்பட்ட
நீர் உடைத்துக் கொண்டு போகாதபடி இடப்பட்டவையாதலின்
திண்ணியகரை என்றார். பெருங்குளங்கள் - பாசன ஏரிகள்.
மதகுவாய்
திறந்திடப் புறம்போய் - குளத்தில் சிறைப்பட்ட
நீர் மதகுவாய் திறக்க வெளியிற் போய். "மாமத கூடுபோய், மண்டுநீர்
வயலுட்புக" (60) என்றது காண்க. இதற்கு இவ்வாறன்றி, மதகுகளும்
கரைகளும் உடைத்துக்கொள்ளும்படி என்று முன் உரைகாரர்கள்
உரைத்தவை பொருந்தாமை யறிக.
வினைஞர்
- இடநோக்கி உழவரைக் குறித்தது. ஆர்ப்பொலி
எடுப்ப - "மள்ளர் குரைத்த கையோ சைபோய், அண்டர்
வானத்தி னப்புறஞ் சாருமால்" (60) என்று இதன் சிறப்புக் கூறியது
காண்க.
வழங்குவ
- வேண்டிய அளவு வயல்களுக்குக் கொடுப்பன.
வியன்கால் - இடம் அகன்ற கால்களின் வழி.
வழி என்றது
தொக்கது.
இப்பாட்டிற்கு
இவ்வாறன்றி. நதி - பாலாறு என்று கொண்டு,
பாலாற்றின் மிக்க நீர் நிறைந்து குளங்களும் மதகுகளும்
உடைத்துக்கொள்ளும்படி சென்று கால்வாய்கள் நீரைத்
கொடுக்கின்றன என்றுரைத்தனர் முன் உரைகாரர்கள்.
குளங்கள் என்றதை
எழுவாயாக்கிப், பாலாறு பாய்தலால்
புனல் நிறையக் குளங்கள் நீர் வழங்குவ என்று கூட்டி முடித்து
உரை கூறுவர் இராமநாதச் செட்டியார்.
கரைப்பொரும்
- என்பதும் பாடம். 23
|