1101. மாறில் வண்பகட் டேர்பல நெருங்கிட வயல்கள்
சேறு செய்பவர், செந்நெலின் வெண்முளை சிதறி
நாறு வார்ப்பவர், பறிப்பவர், நடுபவ, ரான
வேறு பல்வினை யுடைப்பெருங் கம்பலை
                              மிகுமால்.
 24

     (இ-ள்.) வெளிப்படை. ஒப்பற்ற வளத்தைக் கொடுக்கும்
எருமைக் கடாக்களைப் பூட்டிய பல ஏர்கள் நெருங்கிட
வயல்களைச் சேறு செய்பவர்களும், செந் நெல்லினது வெள்ளிய
முளைகளைச் சிதறிவிதைத்து நாற்று விடுகின்றவர்களும், நாறு
பறிக்கின்றவர்களும், (நாறு) நடுகின்றவர்களுமாகிய வெவ்வேறு
பல உழவின் பகுதிகளாகிய தொழில்களைச் செய்பவர்களுடைய
பெரிய ஆரவாரம்மிகும்.

     (வி-ரை.) மாறில் வண்மை என்றது - ஏரினால் வரும்
ஒப்பற்ற வளம்குறித்தது. "ஏரின் மல்கு வளத்தி னால்வரு
மெல்லை யில்லதோர் செல்வமும்" (441) என்றது காண்க.

     பகட்டு ஏர்பல - பகடு - எருமைக்கடா. இவற்றையே
ஏரிற்பூட்டுவதும் இவற்றாற் பிற உழவுப் பகுதிகளைச்
செய்வித்தலும் பற்றி முன் உரைத்தவை பார்க்க. (74 முதலியன).

     ஏர்பல - உழவு காலத்தில் பல ஏர்களை ஒரு
சேரக்கொண்டு தொழில் செய்யும் தன்மை குறித்தது.

     சேறுசெய்தல் - நாறுவார்த்தல் - (நாறு) பறித்தல் -
நாறுநடுதல் -
இவை உழவின் வெவ்வேறு பகுதிகள். இவை
பலவும் பற்பலஇடங்களில் ஒரு காலத்தேகாண நிகழ்வனவாதலின்
பல்வினையுடைப் பெருங்கம்பலை மிகும் என்றார். இவ்வாறு
ஒருகாலத்தில் சேறு செய்தல் முதல் நெல் அறுத்தல், தூற்றல்,
குவித்தல் வரை உழவு வினைப் பகுதிகள் பலவும் பல
வயல்களிலும் காண நிற்பதும், குறித்த பருவம் என்பதன்றி
எல்லாக் காலத்தும்உழவு வினைகள் செய்ய நிற்பதும்
தொண்டை நன்னாட்டின் நீர்வள நிலவளங்களின் சிறப்பியல்பாம்.

     வெண்முளை சிதறி நாறு வார்ப்பவர் - நாறுவார்த்தல் -
நாற்று விடுதலுக்காக விதை செல்லைத் தூவுதல். வார்த்தல் -
தூவுதல். விதை நெல்லை முன்னர் நீரில் ஊறவைத்து முளை
கிளம்பின பின்னரே நாற்று விடுதற்காக அதனைத் தெளித்துவிடுவது
நன்மை தரும் உழவு வழக்கு என்பதனைக் குறித்தார். சிதறுதல் -
நாறுவிடுதற்குச் சேறுசெய்து அமைத்த நிலத்தில் தூவுதல்.
வெண்முளை - ஊறவைத்த நெல்லின் முளைகிளம்பும் பருவம்
குறித்தது;முளை கிளம்பும்போதுவெள்ளிதாய் இருக்கும். 24