பசிய பயிர் - வானம்;
செந்தாமரை - மதியைச் சுற்றிய
செந்நிறமுடைய பரிவேடம்; அதனிடையில் சங்கு - முழுமதி;
போன்றன என்க.
தளை
- வரம்பு. நீரினையும் எரு முதலிய உரங்களையும்
வயலினின்றும் வெளிப் போகாமல் தடுத்து நிறுத்துதலால்
வரம்புகள் தளை எனப்பட்டன. "சிறைவான் புனல்" (திருக்கோவை)
என்பதுங் காண்க.
பணை
எழுந்த செந்தாமரை - இதுபற்றி முன் உரைத்தவை
பார்க்க. எழுந்த - தாமரைக்கொடி முளைத்தெழுந்ததனையும்,அதன்
பூக்களின் தண்டு உயர எழுந்து நிற்பதனையும் குறித்தது.
தாமரைத்
தவிசு - தவிசு - இருக்கை, படுக்கையிடம்;
சேர்க்கை. "செறியிதழ்த் தாமரைத் தவிசிற் றிகழ்ந்தோங்கு
மிலைக்குடைக்கீழ்" (மேகரா - குறி - வீழி - 2) என்றும்,
"சேற்றெழந்த மலர்க்கமலச் செஞ்சாலி கதிர்வீச,
வீற்றிருந்த"
(பழந்தக்க - தோணிபுரம் - 6) என்றும் வரும்
ஆளுடையபிள்ளையார் தேவாரங்களும் காண்க.
சூல்
இளைத்தவளை என்க. சூல்கொண்டதனால்
அயர்வடைந்த சங்கு. கண்படுதற்குக் காரணங் கூறியவாறு.
விளைத்த
பாசொளி - மயிர் விளைந்து முற்றியதனால்
விளங்கும் பசியநிறம். இதனால் நட்ட நெற்பயிர் இடைக்காலத்துள்
முதிர்ந்து பச்சையாய் விளங்கிய நிலையும் குறிக்கப்பட்டது காண்க.
ஊர்கோள்
- பரிவேடம். ஊர்கோள் வளைத்த -
ஊர்கோளினால் வளைக்கப்பட்ட. தச்சனாற் கட்டப்பட்ட
என்புழிப்போல, வினைமுதற்பொருளில் வந்த மூன்றனுருபும்,
படுவிகுதியும் தொக்குநின்றன. இங்கு ஊர்கோள் என்றது
ஓரோர்காலம் முழுமதியைச் சூழ்ந்துகாணும் சிவந்த
கதிர்ப்படலத் தொகுதியை.
மாமதி
- முழுமதி. நீர்மருதவைப்பினிடத்துக்
கண்படுவனவாகிய சூல் வளைகள் - போன்றுள என்க.
வளை - சாதியொருமையாதலின் பன்மைவினை கொண்டது.
நீள்
வைப்பு - என்பதும் பாடம். 26