1104.
|
ஓங்கு
செந்நெலின் புடையன வுயர்கழைக் கரும்பு;
பூங்க ரும்பயன் மிடைவன பூக;மப் பூசுப்
பாங்கு நீள்குலைத் தெங்குபைங் கதலிவண் பலவு
தூங்கு தீங்கனிச் சூதநீள் வேலிய சோலை. 27 |
(இ-ள்.)
வெளிப்படை. ஓங்கிவளரும் செந்நெற் பயிரின்
பக்கத்தில் உயர்ந்த கழைக்கரும்பு உள்ளன; அந்த அழகிய
கரும்புகளின் அயலில் நெருக்கமாகிய கமுகுகள் உள்ளன; அந்தக்
கமுகுகளின் பக்கத்தில் நீண்ட குலைகளையுடைய தென்னைகளும்,
பசியகாய்களையுடைய வாழைகளும், வளப்பம் பொருந்திய பலா
மரங்களும், தொங்குகின்ற இனிய பழங்களையுடைய
மாமரங்களுமாய்ப் பொருந்திய நீண்ட வேலியை யுடையன
சோலைகள்.
(வி-ரை.)
ஓங்கு செந்நெல் - ஓங்கு - சின்னாளில்
மேலுயர்ந்து வளரும் நெற் பயிரின் வளர்ச்சியையும்,
செழிப்புடைய நெல்உயர்ந்தும் புடைபரந்தும் வளரும்
வளர்ச்சியையும் குறித்தது. செந்நெலின் சிறப்புப்பற்றி முன்
உரைத்தவை பார்க்க. நெல் -இங்குச் செந்நெற்பயிர்
குறித்து
நின்றது.
உயர்
கழைக்கரும்பு - இது கரும்பின் ஒருவகை குறித்தது.
"கழைக்கரும்பு" (67) என்ற விடத்துரைத்தவை பார்க்க. உயர்
-
என்றதனால் கணுக்களினிடை உள்ள பகுதி நீண்டிருத்தலும்,
கரும்பு நீண்டு வளர்ந்திருத்தலும் குறிக்கப்பட்டது.
கழைக்கரும்பு- ஒரு பொருட் பன்மொழி என்றனர்
முன்னுரைகாரர்கள்.
மிடைவன
பூகம் - கமுகமரங்களை நெருங்கப் பயிரிடும்
தன்மை குறிக்கப்பட்டது.
நீள்
குலைத்தெங்கு - தென்னையின் குலை நீண்டிருத்தலால்
காய்களின் செறிவும் செழிப்பு மிகுதியும் குறிக்கப்பட்டன.
நீண்டதென்னை என்றலுமாம்.
வண்
பலவு - பலாவின் வண்மையாவது பெரும்
பழங்களையுடைமை, ஒரு பழத்தில் பல சுளைகளையுடைமையால்
பலருக்கும் ஒரே காலத்தில் உணவாகும் தன்மை, வேரினுள்ளும்
மரம் முழுமையும் காய்த்துப் பலன் உதவுதல், காயும் பழமும்
உணவாகுதல், பழம்வெடித்துச் சாறுபாய்தல் முதலியன.
"வண்பலவின்" (1044) என்ற விடத்துரைத்தவையும் பார்க்க.
தூங்கு
தீங்கனிச் சூதம் - மாங்கனிகள் நீண்டகாம்புகளுடன்
மரக்கிளைகளில் தொங்கு மியல்புடையன. தீங்கனி என்றனால்
கனி
இனிய சுவையுடைத்தாதலும், காய்
அவ்வாறின்றிப்
புளிப்புடைத்தாதலும் குறிப்பாம். திரோதான சத்திக்கும் அருட்
சக்திக்கும் முறையே மாங்காயினையும் மாங்கனியினையும்உவமித்துக்
கூறுவன ஞான சாத்திரங்கள். இங்ஙனம் தன்மை யணிச்சுவைபடக்
கூறியது காண்க.
கதலி
- பலவு - சூதம் - இவை முக்கனிகளாதலும் அறிக.
"முக்கனியின் சாறொழுகிச் சேறுலரா நீள்வயல்சூழ் முதுகுன்றமே"
என்பது ஆளுடைய பிள்ளையார் திருவாக்கு.
சோலை
வலிய - சோலைகள் - தென்னை, கதலி, பலா, மா
என்ற இவற்றை வேலியாக உடையன. வேலி என்பது இம்மரங்கள்
நெல் வயலியையும் கரும்புப் பயிர்களையும் சுற்றி வெளிப்புறத்தில்
வேலிபோல அமைந்துள்ளன என்பதாம். இவ்வாறன்றி இம்மரங்கள்
நிலத்தின் இடைநடுவில் இருப்பின் இவற்றின் நிழலகப்பட்டு
ஏனைப்பயிர்கள் பயன்தரா வென்க.
நெல் - கரும்பு
- பூகம் - தெங்கு - கதலி - பலா - மா
இவை மருதநிலக் கருப்பொருள்களுள் உணாவுக்குரியனவாதல்
காண்க. 27
|