1105. |
நீடு
தண்பணை யுடுத்தநீண் மருங்கின; நெல்லின்
கூடு துன்றிய விருக்கைய; விருந்தெதிர் கொள்ளும் பீடு தங்கிய பெருங்குடி மனையறம்
பிறங்கு
மாட மோங்கிய மறுகன; மல்லன்மூ தூர்கள். 28 |
(இ-ள்.)
வெளிப்படை. வளப்பமுடைய பழைய ஊர்கள்,
குளிர்ச்சியையுடைய பெரிய வயல்களாற் சூழப்பட்ட நீண்ட
பக்கங்களையுடையன; நெற்கூடுகள் நெருங்கிய வீடுகளையுடையன;
விருந்தினர்களை எதிர்கொண்டு உபசரிக்கும் பெருமையில்
நிலைத்த பெருங்குடிகள் இல்லறத்தில் விளங்குதற்கிடமாகிய
மாடங்கள் ஓங்கிய வீதிகளையுடையன.
(வி-ரை.)
மூதூர்கள், மருங்கின; இருக்கைய; மறுகன என்க.
பணை
உடுத்த - பணைகளாற் சூழப்பட்ட, பணை
-பண்ணை. உடுத்தல் - சூழ்தல் என்ற பொருளில்
வழங்குவது.
நெல்லின்
கூடு - நெல்லைச் சேமித்து வைக்குமிடம். வைக்கோற் புரியினாலமைத்த குரம்பை.
நெல் - மருதக்
கருப்பொருள். மருத நிலமக்களுக்கு இது முதன்மைபெற்ற
உணவுப்பண்டமாதலின் ஊர்களில் நெற்கூடு
துன்றிய
இருக்கை என்றார். இருக்கை - வீடு; வயலிடங்களில்
நெற்கூடுகள் அமைத்தலுமுண்டு. நெல்லின் கூடு
நிறைந்தமையே விருந்து எதிர்கொள்ளுதற்கு வேண்டும்
பெருஞ் சாதனமாதலின் இதனை முன்வைத்து ஓதினார்.
"நெற்கூடு" கோட்புலி நாயனார் புராணம் பார்க்க. துன்றுதல்
- மிகுதியாக நெருங்கியிருத்தல். நெல்லினைக்
கூடு கட்டி வீடுகளிற் சேமித்தல் மரபு.
மனையறம்
பிறங்கும் மாடம் ஓங்குதல் வீதிகளுக்குச்
சிறப்பு என்று முடித்தது காண்க. பணையில் நெல்
விளைவும்,
நெற்கூடுகளின் உதவியால் விருந்தெதிர் கொள்ளுதலும்
உளவாக,
இவையெல்லாம் இல்லற ஒழுக்கத்தால் நிலைபெறுவன என்பதாம்.
மல்லல்
- நெல்லே யன்றி அதன் வழித்தாய் உளவாகும்
பிற எல்லா வளங்களும் கொள்க. மல்லல் மூதூர் -
சிலநாள்
செழித்துப் பின் மறையும் ஊர்கள் போலன்றி பழைமையாகவரும்
செழிப்புடையன என்பது.
ஊர்
- மருதநிலப் பதிகள் ஊர் எனப்படும். 28
|