1106. தொல்லை நான்மறை முதற்பெருங் கலையொலி
                                   துவன்றி
யில்ல றம்புரிந் தாகுதி வேள்வியி லெழுந்த
மல்கு திண்புகை மழைதரு முகிற்குலம் பரப்புஞ்
செல்வ மோங்கிய திருமறை யவர்செழும் பதிகள்.
29

     (இ-ள்.) வெளிப்படை. திருமறையோர்களது செழும் ஊர்கள்.
பழைமையாகிய நான்கு வேதங்கள் முதலிய பெருமையுடைய
கலைகளை. ஓதுகின்ற ஒலி மிகுந்து இல்லறத்திற் புரிந்த
ஆகுதிகளுடன் கூடிய வேள்விகளில் எழுந்த திண்மையுடைய
புகையானது மழையினைத் தரும் முகிற் கூட்டங்களைப் பரப்புகின்ற
செல்வத்தால் மிகுந்தன.

     (வி-ரை.) உழவினால்வரும் வளங்களையும்,
அவ்வளங்களாலுயர்ந்து மனையறம் பிறங்கும் பெருங்குடிகளையும்,
முன்னர்க் கூறிய ஆசிரியர், அவ்வாறு உள்ள வூர்களுட் சிறந்து
விளங்குவனவும் மறையவர்களுக்குச் சிறப்பாயுரியனவுமாகிய
ஊர்களை விதந்து வேறுஎடுத்துக் கூறுகின்றார்; அந்த மறையவர்
செழும்பதி
களுட் சிறந்த திருவல்லத்தினை மேல்வரும்பாட்டிற்
றொடர்ந்து கூறும்முறையும் காண்க.

     இவற்றை வேறு பிரித்து விதந்து கூறுவதற்குக் காரணம்
முன்கூறிய உழவு வளங்களுக்கும் இல்லறத்துக்கும் இன்றியமையாத
துணையாய் நிற்கின்றமையால் முதன்மைபெற்ற மழைக்குக்
காரணமாகிய வேள்விகளை அவர்கள் செய்பவர் என்பதாம்;
அதனை வேள்விப்புகை மழைதரும் முகிற்குலம் என்றதனாற்
குறிப்பித்தார்.

     தொல்லை - பழைமை. மறைகளின் தொன்மையாவது
உலகங்களைப் படைத்த போதே உலகத்துயிர்கள் உய்யும்
வழியினையும் உடனே வகுத்து மறைகளை இறைவன் அருளினர்
என்றதனாலாம். "அசரசர பேதமான யாவையும் வகுத்து மறையாகி
நூலையும் வகுத்து என்று இதனை விளக்கினர் தாயுமானார்.
முதற்றோன்றிய நாத தத்துவத்திற்றோன்றியதாதலின் தொல்லை
நான்மறை
என்றார் என்பதும் பொருந்தும்.

     மறைமுதற் பெருங்கலை - முதன்மை பெற்ற வேதங்களும்
அவை முதலாகக் கணிக்கப்படும் ஆறங்கம் முதலிய
பெருங்கலைகளும். ஒலி - இவற்றைப் பயிலும்ஒலி.

     வேள்வியில் எழுந்த - புகை - மழைதரும் முகிற்குலம்
பரப்பும்
என்றது வேள்விகள் மழைக்குக் காரணமாவன என்றதாம்.
"வானளிப்பன வேள்வியின் வளர்தீ" (1032) என்றதும்
அங்குரைத்தவையும் பார்க்க. "வேள்வி நற்பயன் வீழ்புனலாவது"
(திருஞான - புரா - 822) என்றது காண்க. 81-ல்
உரைத்தவை காண்க.

     இல்லறம் புரிந்த ஆகுதி வேள்வியில் - இல்லறத்திற்
புரிந்த வேள்வி என்க. புரிந்த - என்ற பெயரெச்சத்தி னீற்றகரம்
கெட்டுப், புரிந்தாகுதி என நின்றது. துவன்றி - மிகாநிற்ப -
மிகப்பெற்று.

     புரிந்து (அதிற் செய்யப்படும்) ஆகுதி என்று விரித்தலும்
ஒன்று.

     முகில் பரப்பும் செல்வம் - உலகத்துக்கு உயிராகிய எல்லா
வளங்கட்கும் காரணமாகிய மழையினைச் செய்யும் செல்வமே
சிறந்தது என எடுத்துக்காட்டியபடி.
திருமறையவர் - இங்குத் திரு
என்பதனை "முகிற்குலம்பரப்பும் செல்வம்" என விளக்கியவாறும்
காண்க.

     செழும்பதிகள் - செழுமை - உலகம் செழிக்கும்
மழைதருதலாலும், அதற்குச் சாதனமாகிய வேள்விகளுக் கிருப்பிட
மாதலாலும், அதற்குச் சாதனமாகி இல்லறச் சிறப்பாலும் உளதாம்.

     பதிகள் ஓங்கிய என்க. ஓங்கிய - அன் பெறாத அகரவீற்று
வினைமுற்று. இவ்வாறன்றி இதனைப் பெயரெச்சமாகக் கொண்டு,
ஓங்கிய பதிகள் உள்ளன. என்றுரைப்பார் முன்னுரைகாரர்கள்.
பதிகளுள் என்று உருபு தொக்கதாகக் கொண்டு தொடர்புபடுத்தி,
மேல்வரும் பாட்டுடன் கூட்டிப் - பதிகளுள் - மறையவர் வல்லம் -
விளங்கும் என்று முடிப்பர் இராமநாதச் செட்டியார்.

     தண்புகை - என்பதும் பாடம். 29