1107. |
தீது
நீங்கிடத் தீக்காலி யாமவு ணற்கு
நாதர் தாமருள் புரிந்தது; நல்வினைப் பயன்செய்
மாதர் தோன்றிய மரபுடை மறையவர் வல்லம்
பூதி சாதனம் போற்றிய பொற்பினால் விளங்கும்.
30 |
(இ-ள்.)
வெளிப்படை. தீமை நீங்கும்படி தீக்காலி என்கிற
அவுணனுக்கு இறையவர் அருள்புரிந்ததாகிய, நல்வினையின் பயனைச்
செய்கின்ற மாதர்கள் உதித்த மரபினையுடைய வேதியர்களது
பதியாகிய, திருவல்லம் என்ற தலமானது திருநீற்றினையும், அதனுடன்
சேர்ந்த சிவசாதனமாகிய உருத்திராக்கத்தையும் பேணிய அழகினுடன்
விளங்குவதாம்.
(வி-ரை.)
தீதுநீங்கி....அருள் புரிந்தது - மகாவிட்டுணுவின்
சக்கரத்தால் தான் இறக்க நேரிடும் தீங்கு நீங்கும்படி தீக்காலி
என்றஅவுணன் வரங்கிடக்க, அவனுக்கு அத்தீமை அணுகாது காத்து
அருளினர் என்பது தல வரலாறு. தீக்காலி பூசித்துப்
பேறு
பெற்றதனால் இத்தலம் தீக்காலிவல்லம் என்றும் வழங்கும்.
அருள்
புரிந்தது - அருள்புரிதற்கு இடமாகிய.
அருள்புரிந்த- வல்லம் என்று கூட்டுக.
நல்வினைப்
பயன்செய் மாதர் தோன்றிய மரபு -
இவ்வரலாறாவது :- தனக்குப் புத்திரிகளேயன்றிப் புத்திரன் இல்லை
என்றறிந்த ஒரு மறையவன் புத்திரப் பேறு வேண்டிச்சிவபெருமானை
நோக்கித் தவங் கிடந்தான்; அவர் வெளிப்பட்டு "உனக்குப்
புத்திரியே யன்றிப் புத்திரப்பேறு கிடைக்குமாறில்லை" என்று
அருளிச்செய்ய, அவன் அவரை நோக்கி, "ஆயின் அப்புத்திரிகள்
தேவரீருக்குத் திருத்தொண்டு செய்வோராகப் பிறக்க அருள்
செய்யவேண்டு" மென்று வேண்டி அவ்வாறே பெற்று மேன்மை
யடைந்தனன் என்பதாம். இதற்கு இவ்வாறன்றி, மாதர் - அழகு
என்று கொண்டு, நல்வினைப்பயனாகிய சிவபுண்ணியத்தையே
செய்யும் பொற்புத் தோன்றியமரபு என்று பொருள் கொள்வாரு
முண்டு.
மரபுடை
மறையவர் வல்லம் - அந்த மரபினில் வந்த
மறையோர் விளங்கும் திருவல்லம். பழஞ்சரிதத் தொடர்புபற்றிய
சிறப்புக்களை முன்னர்க்கூறிப், பின் பிற வளங்களைக் கூறுவது
ஆசிரியர் மரபு.
மறையவர்
வல்லம் - "விரித்தவன் வேதங்கள் வேறுவேறு"
(1), "அருமறை யாறங்கமானான்" (9), "கற்றவர் திருவல்லம்" (11)
(வியாழக்குறிஞ்சி) என்ற ஆளுடையபிள்ளையாரது இத்தலத்
தேவாரங்கள் காண்க.
திருவல்லம்
- இது தொண்டை நாட்டின் 10-வது திருத்தலம்.
பாலாற்றின் கரையிலுள்ளது. திருவல்லம் என்ற (M.S.M)
இருப்புப்பாதை நிலயத்தினின்றும் வடகிழக்கில் கற்சாலையில் 1/2
நாழிகையளவில் அடையத்தக்கது.
பூதிசாதனர்
- என்பதும் பாடம். 30
|