1108.
|
அருவி
தந்தசெம் மணிகளும் புறவிலாய் மலரும்
பருவி யோடைக ணிறைந்திழி பாலியின் கரையின்
மருவு கங்கைவாழ் சடையவர் மகிழ்ந்தமாற்
பேறாம்
பொருவில் கோயிலுஞ் சூழ்ந்ததப் புறம்பணை
மருதம். 31
|
(இ-ள்.)
வெளிப்படை. அந்தப் புறம்பணை மருதநிலமானது
குறிஞ்சி நிலத்தின் மலைச்சாரலிலிருந்து வருகின்ற அருவிகள்
கொழித்து வருகின்ற சிவந்த இரத்தினங்களும், குறிஞ்சியை அடுத்த
முல்லை நிலத்தினின்றும் வாரிக்கொண்டு வரப்பட்ட மலர்களும்
கலந்து ஓடைகளில் நிறைந்து கீழே இழிந்து வருகின்ற பாலாற்றின்
கரையில், பொருந்திய கங்கை வாழ்கின்ற சடையினையுடைய
சிவபெருமான் மகிழ்ந்து வீற்றிருக்கும் திருமாற்பேறு
என்னும்
ஒப்பற்ற திருக்கோயிலினையும் சூழப்பெற்றது.
(வி-ரை.)
அருவி - குறிஞ்சியின் மலைகளிலிருந்து வருகின்ற
என்பது இசை யெச்சம். அருவியும் செம்மணிகளும் குறிஞ்சிக்
கருப்பொருள்கள். மணிகளையும் மலர்களையும்கொண்டு, தலவழிபாடு
செய்யப் பாலாறு இத்தலத்தின்வழிச் செல்கின்றது
என்ற
குறிப்பும்காண்க. "வம்பு லாமலர் நீரால் வழிபட்டு" (57) என்றது
முதலியவை காண்க.
புறவு
- முல்லைப்புறவு. மலர் - முல்லைக்கருப்பொருள்.பருவி
- கலந்து.
ஓடைகள்
- நீர் ஓடுதல் அறாதவை. ஓடைகளின்கண்;ஏழனுருபு
தொக்கது. கோயிலும் - இரண்டனுருபு தொக்கது.
புறம்பணை மருதம்
- கோயிலும் - சூழ்ந்தது என முடிக்க.
கோயிலையும் என இரண்டனுருபு விரிக்க.
மாற்பேறு
- திருமால் பூசித்துச் சக்கரப்பேறு பெற்ற
காரணத்தால் இப்பெயர் பெற்றது. திருமால் இங்குச் சுவாமியின்
திருமுன்னர் நின்று தரிசித்துக் கொண்டிருக்கும் கோலத்துடன்
இருப்பதும் காண்க. "மன்னிய மாலொடு சோமன் பணிசெய" (11)
(ஆளுடைய பிள்ளையார்), "பெருமாற் றிண்படை வேண்டிநற்
பூம்புனல், வருமாற் றின்மலர் கொண்டு வழிபடும்"
(திருக்குறுந்தொகை) என்ற இத்தலத் தேவாரங்கள் காண்க.
இது தொண்டை
நாட்டின் 11-வது தலம். பளூர் என்ற
நிலயத்திலிருந்து தென் மேற்கே மட்சாலையில் 2 நாழிகையளவில்
அடையத்தக்கது.
பூம்பணை மருதம்
- என்பதும் பாடம். 31
|