1109. விரும்பு மேன்மையென் பகர்வது? விரிதிரை நதிகள்
அருங்க ரைப்பயில் சிவாலய மனேகமு மணைந்து
பருங்கை யானையை யுரித்தவ ரிருந்தவப் பாசூர்
மருங்கு சூழ்தவம் புரிந்ததன் றோ மற்ற மருதம்.
32

     (இ-ள்.) வெளிப்படை. விரியும் அலைகளையுடைய நதிகளின்
அரிய கரைகளிற் பயிலுதலையுடைய அநேகம் சிவாலயங்களையும்
அணையப்பெற்று, பெரியகையினையுடைய யானையை உரித்த
சிவபெருமான் விரும்பி வீற்றிருந்த திருப்பாசூரினையும் பக்கத்திற்
சூழும் தவத்தினைச் செய்ததன்றோ அந்த மருதநிலம்? ஆதலின்
(எல்லாராலும்) விரும்பப்படுகின்ற அதனது மேன்மையைப் பற்றி
எடுத்துச் சொல்ல வேண்டியது வேறென்னவுள்ளது? (ஒன்றுமில்லை).

     (வி-ரை.)மற்ற மருதம் - சிவாலயம் அநேகமும் அணைந்து
- திருப்பாசூர் - மருங்கு சூழ் தவம் புரிந்ததன்றோ? மேன்மை
(வேறு) என்பகர்வது? என்று கூட்டிப் பொருள் கொள்க.

     நதிகள் அருங்கரைப் பயில் சிவாலயம் அனேகம் -
பாலாற்றினைப் போன்ற பல ஆறுகள் அந்நாட்டில் உள்ளன;
அவற்றின் கரைகளில் அநேகம் சிவாலயங்களும் உண்டு என்க.
அருங்கரை - அருமையாவது அங்குப் பல சிவாலயங்களும்
இருத்தல்.

     பயில் - மக்கள் தேற்றம்பெற உணர்ந்து (வழிபட) உள்ள.

     தவம் புரிந்தது - சிவாலயம் அநேகம் அணைவதற்கும்,பாசூர்
மருங்கு சூழ்வதற்கும் நிலம் முன்னை நாளில் தவம் செய்திருக்க
வேண்டும் என்பதாம்.

     விரும்பும் மேன்மை என் பகர்வது? - மக்கள்விரும்பத்தக்க
மேன்மைகளுள் இதுவே மிகச் சிறந்த மேன்மைஎன்பது குறிப்பு.
திருப்பாசூரின் பெருஞ் சிறப்பினையும் அறிவித்தபடி.

     பாசூர் - தொண்டை நாட்டின் 16-வது தலம். சுவாமி
மூங்கிலினடியில் முளைத்தெழுந்தமையால் இப்பெயர் எய்தியது.
சந்திரன் பூசித்து அருள்பெற்ற தலமென்பது "அந்திக்
கோன்றனக் கேயருள் செய்திடும்" என்ற திருக்குறுந் தொகையாலும்,
கரிகால் வளவன்மீது சமணர் ஏவிய பாம்பைச் சுவாமி தடுத்துப்
பிடித்துஆட்டி யருளினர் என்ற தலவரலாறு"பாம்பு மாட்டுவர்
பாசூ ரடிகளே" என்ற திருக்குறுந்தொகையாலும் அறிவிக்கப்பட்டன.
இத்தலம் திருவள்ளூர் நிலயத்திலிருந்து வடக்கே கற்சாலையில்2 1/2
நாழிகையளவில் உள்ள திருவள்ளூரை அடைந்து, அங்கு
நின்றும் மேற்கே கற்சாலையில் 2 நாழிகையளவில்
அடையத்தக்கது. 32