1110. பூம ரும்புனல் வயற்களம் பாடிய பொருநர்
தாம ருங்கிளை யுடன்றட மென்மலர் மிலைந்து
மாம ருங்குதண் ணீழலின் மருதயாழ் முரலுங்
காமர் தண்பணைப் புறத்தது கருங்கழி நெய்தல்.
33

     (இ-ள்.) வெளிப்படை. பூக்கள் பொருந்தும் நீர் நிறைந்த
வயற்களத்தைக் குறித்து மருதப் பண்ணைப் பாடுகின்ற
பொருநர்கள் தங்களுடைய அருமையாகிய சுற்றத்தார்களுடன்
கூடித் தடங்களிற் பூத்த மெல்லிய மலர்களைச் சூடிக் கொண்டு
மாமரங்களினருகில் குளிர்ந்த நீழலிலிருந்து மருதயாழினை
முரல்கின்ற அழகிய குளிர்ந்த வயல் நிலத்தின் புறத்திலே
கரியகழிகளையுடைய நெய்தனிலம் உள்ளது.

     (வி-ரை.) பூமரும்புனல் வயற்களம் - வயல்களிலும்
நீர்வளமிகுதியால் தாமரை முதலியன பூக்கும் மரும் -
மருவும். செய்யும் என்றும் பெயரெச்சத்தில் உயிர் மெய்
நீங்கியது.

     களம்பாடுதல் என்பது பொருநர்கள் நெற்களத்தின்சிறப்பினை
எடுத்துச் சிறப்பித்துப் பாடுதல், களம் உழவின் சிறந்தபகுதிகள்
நிகழுமிடம். நெற்போர்க்களம். பொருநர் - புகழ்ந்து பாடுவோர்.
அவர் போர்க்களம் பாடுவோர். ஏர்க்களம் பாடுவோர் -
பரணிபாடுவோர் எனப் பலதிறப்படுவர். இங்குக் கூறிய பொருநர் -
வயற்களம் பாடுவோர். வயற்களம் பாடிய - பிறிதினியைபு நீக்கிய
விசேடணம்.

      களம் பாடிய பொருநர் மலர்மிலைந்து - நீழலில் -
யாழ்முரலும் - பணை
என்க. பண்களைமிடற்றுப் பாடலாகப்
பாடிய பின்னர் அதற்குத் தக்கபடி யாழினையும் மிழற்றுவர்.
இங்கு மாமரத்தின்கீழ் மருதப்பண் பாடிய பொருநர்
மருதயாழினையும் உடன்மிழற்றினர். யாழ்முரலுதல் என்பது
மரபு வழக்கு. மருதயாழ் -மருத நிலத்து யாழ். மா -
மருதத்தின்மரம், இவை மருதக்கருப்பொருள்.

     பணைப் புறத்தது - வயல்களின் புறத்தே உள்ளது. நெய்தல்
பணையின் புறத்தே உள்ளது என்க. பணை - பண்னை. நெய்தல்
கூறத் தோற்றுவாய் செய்தவாறு. 33