1111. தூய வெண்டுறைப் பரதவர் தொடுப்பன வலைகள்;
சேய நீள்விழிப் பரத்தியர் தொடுப்பன செருந்தி;
ஆய பேரளத் தளவர்க ளளப்பன வுப்பு;
சாயன் மென்னடை யளத்திய ரளப்பன தரளம்.
34

      (இ-ள்.) வெளிப்படை. தூய்மைகளாகிய வெள்ளிய
மணற்றுறையினையுடைய கடற்கரையில் வாழ்கின்ற பரதவர்களால்
(மீன்) வலைகள் தொடுக்கப்படுகின்றன; சிவந்த நீண்ட
கண்களையுடைய பரத்தியர்களாற் செருந்திமலர் மாலைகள்
தொடுக்கப்படுகின்றன; அவ்விடத்தில் பெரிய அளங்களில்
அளவர்களால் உப்பு அளக்கப்படுகின்றன; (மயில் போன்ற)
சாயலையும், (அன்னம் போன்ற) நடையையும் உடைய
அளத்தியர்களால் முத்துக்கள் அளக்கப்படுகின்றன.

     (வி-ரை.) வெண்துறை - வெண்மணலை உடைய
கடற்றுறை என்று இடநோக்கிப் பொருள் கொள்க. மேல்வரும்
பாட்டிற் "படுமணற்கரை" என்பது காண்க. கருமணலும்
சிறுபான்மையுளதாயினும் பெரும்பான்மைபற்றி வெண்மணலைக்
கூறினார். அன்றியும் தொண்டை நாட்டுக் கடற்கரை வெண்மணல்
கொண்டது. தூய - கரைக்கும் தூய்மை மணலினாலாகியது. மணல்
தூய்மையுடையதென்பது வேள்விகளில் வேதிகைகளில் வெண்மணல்
பரப்பி அதன்மேல் எரிவளர்த்தல் வேண்டுமெனச் சிவாகமங்களில்
விதித்தவாற்றானறியப்படும். "புரிநூ லுவர்வேள்விக் களத்திற்புனைந்த
வேதிகைமேன், மணல்வெண் பரப்பினிடையிடையேவளர்த்த செந்தீ
மானுமால்" (நமிநந்தி - புரா - 3) என்றது காண்க. சாந்தி
முதலியவற்றின் பொருட்டு நிறுவிப் பூசிக்கப்படும் நிறைகுடங்களின்
நீரில் இடப்படும் ஐவகைமண் (பஞ்சமிருத்திகை) களில் கடல்மணலும்
ஒன்றென்பர். இனி, வெண்துறை - வெண்மையாகிய
நிறத்தினையுடைய அலைகள் பொருந்திய கடற்றுறை என்றலுமாம்.
"வெண்டலைப் புணரிக் குடகடல்" (புறநா)என்றதும் காண்க.

     தொடுப்பன வலைகள் - வலைகள் - மீன் பிடிக்கும்
வலைகள். தொடுத்தல் - புதிய வலைகளைப் பின்னுதலும்,
பழையவற்றைப் பழுது பார்த்தலுமாம். கடலிற் பெருமீன்கள்
படுதலின் வலைகள் அவ்வப்போது சிதைவுறுவன. ஆதலின்
அவை ஒவ்வொரு நாளும் பழுது பார்க்கப்பட வேண்டுதல்
அத்தொழிற்குரிய செயல். தொடுப்பன - தொடுக்கப்படுவன.
படு
விகுதி தொக்குவந்த செயப்பாட்டு வினைமுற்று.
அளப்பன
என்றதனையும், மேல்வரும் பாட்டில் கொடுப்பன
- குளிப்பன
- என்பவற்றையும் இவ்வாறே கொள்க.

     தொடுப்பன செருந்தி - பரத்தியர்அணிந்துகொள்வதற்காகச்
செருந்தியைத் தொடுப்பர். மீன்விலைப்பரத்தியராயினும் தம்மை
அணிசெய்து கொள்ளும் பழக்க முடையவர்கள் என்பதும், அவ்வாறு
அணிவதில் அந்நிலத்துப் பூவினையே பயன் படுத்திக்கொள்ளு
மியல்புடையவர் என்பதும் குறிப்பு.

     ஆய - அந்நிலத்தின் ஆகிய. அளம் - உப்பளம்.
உப்புவிளைத்துச் சேர்க்குமிடம் அளம் எனப்படும். அளத்தில்
வாழுமக்களுள் ஆண்மக்கள் அளவர் - அளத்தவர் - எனவும்,
பெண்மக்கள் அளத்தியர் எனவும் பெயர் பெறுவர்.

     சாயல் மென்நடை - சாயலுக்கு மயிலையும், நடைக்கு
அன்னத்தையும் உவமித்தல் மரபு. இதனால் அவர்களது
இயற்கையழகினையும், தொடுப்பன செருந்தி என்றதனால்
செயற்கையழகினையும் கூறியவாறு. மேல் வரும் பாட்டில்
"வடுவகிர்க்கண் மங்கையர்" என்றதும், 1115-ல் "விழிக்கயல்"
என்றதும் காண்க. பரதவ சாதியினர் மீனாட்சியம்மையாரைத்
தங்கள் மகளாராய்ப் பெற்று வளர்த்த சரிதத்தை உட்கொண்டு ஆசிரியர் இவ்வாறு சிறப்பித்தனர் போலும்.

     அளப்பன தரளம் - தரளம் - நன்முத்துக்கள். இவை
கடல்படுபொருள்கள்.

     அளப்பன என்ற ஆற்றலான் அவை மிகுதியும் பெறப்படும்
தன்மை குறிக்கப்பட்டது.

     தொடுப்பன வலைகள் - அளப்பன உப்பு என,
வன்மையான தொழில்களை ஆண்பாலரிடத்தும், தொடுப்பன
செருந்தி
- அளப்பன தரளம் என மென்மையும் மேன்மையும்
பட்ட தொழில்களைப் பெண்களிடத்தும் சார்த்திக் கூறிய உண்மை
உய்த்துணர்க. இவ்வாறே மேல்வரும் பாட்டில் கொழுமீன்
கொடுத்தல் - சங்கு குளித்தல் என்னும் வலிய தொழில்களை
நுளையரும்,பவளம் விற்றல், மணற்கேணி குளித்தல் என்பவை
நுளைச்சியரும் செய்தலைக் கூறுதலும் கருதுக. இதனால்
ஆண்பாலரும் பெண்களும் தத்தம் உடல் இயல்புக்கும் மன
இயல்புக்கும் ஏற்ற தொழில்களைச் செய்தலே
முறையாமென்பதனையும் குறித்தவாறு கண்டு கொள்க. 653-ல்
உரைத்தவையும் பார்க்க.

     செருந்தி - நெய்தனிலப் பூ; தரளம் - கடலிற் படுபொருளும்,
உப்பு - நெய்தலின் விளைபொருளும் ஆம். மீன் படுத்தல் -
நெய்தனிலச் செய்தொழில். இவை நெய்தற் கருப்பொருள்கள்.

     சேய நீள் விழி - நெடுந்தூரத்தே நின்ற பொருள்களையும்
கண்டு அளக்கும் தன்மை வாய்ந்த என்ற குறிப்பும் காண்க.
"வியலளக்கரின் விடுந்திமில் வாழ்நர்கள் கொணர்ந்த, கயல ளப்பன
பரத்தியர் வரிநெடுங் கண்கள்" (அதிபத்தர் - புரா - 6) என்றது
காண்க. மென்னடையின் சிறப்புப்பற்றி "ஓதிமம் அசைநடைக் கழிந்து
- மருங்கு நின்றிழி யலமருளும்" (அதிபத்தர் - புரா - 7) என்று
கூறுவதும் இங்கு நினைவு கூர்தற்பாலது.

     மெல்லிடை - என்பதும் பாடம். 34