(இ-ள்.)
வெளிப்படை. நுளையர்களால், கொடிய
வினையாகியகொலைத் தொழிலினைச் செய்து கொணரப்பட்டுக்
கொழுமீன்கள் கொடுக்கப்படுவன; நுளைச்சியர்களால் மணற்கரையிற்
படுகின்ற பவளங்கள் விற்கப்படுகின்றன; (சகரர்களால்) தோண்டப்
பட்டதென்னும் கடலில் துறையவர்களால் சங்குகள்
குளித்தெடுக்கப்படுகின்றன; அவர்களுடைய மாவடுவின் பிளப்பினைப்
போன்ற வடிவுடைய கண்களையுடைய பெண்களால் மணற்கேணி
குளிக்கப்படுவன.
(வி-ரை.)
நுளையர்கள் கொடுவினைத் தொழிலாற்
கொடுப்பன என்க. கொடு வினை -
கொலை. நீரினுள்ளே
கொழுத்து செழித்து வாழும் மீன்களைப் படுத்துக் கொல்லுதல்
பற்றிக் கொடுவினை என்றார்.
கொடுவினைத்
தொழில் - மீன் பிடிக்கும் தொழிலை
எண்ணும்போது கருணை உருவாகிய ஆசிரியரது திருவுள்ளம்
பதைக்கின்றது. "பரிவுறத் தடிந்த பன்மீன்" (73) என்று முன்னர்க்
கூறியதும் காண்க. புலால் உண்பவரில் ஒரு சாரார், மக்கள்
கையாற கொலை செய்யப் பெறுதலின் ஆடு கோழி முதலியவற்றின்
இறைச்சியே புலால் எனப்படும் என்றும், அவ்வாறு கொலை
செய்யப்படாமல் மீன்கள் தாமாக இறந்துபடப் பெறப்படுதலின் மீன்
உணவு புலாலுண்பதாகா தென்றும் கூறித், தாம் செய்யும் தகாத
செயலுக்கு உட்கொள்ளும் தகாத உணவுக்கு ஒரு நியாயம்
கற்பிக்கமுயல்வர். "ஊண் துறமின்! உயிர்கொலை நீங்குமின்!"
என்றுபதேசித்த புத்தர் வழியினரென்று சொல்லும் பௌத்தரும்,
வடநாட்டிலும் மேற்குநாட்டிலும் மறையவரும் இக்கருத்துக்கொண்டு
மீனுணவு கொண்டமைவாராயினர். "கழிக் கரைப்படு மீன்கவர்
வாரமண் அழிப்பர்", "கழிக்கரை மீன் கவர்வார்" என்று
இக்கருத்துப்பற்றியே, கருணைப்போர்வை மேற்கொண்ட பௌத்தரது
கருணையின்மையினை எடுத்துரைத்தருளினர் ஆளுடையபிள்ளையார்.
நீரினுள் வாழும் மீன் முதலிய பிராணிகளை அவற்றின் உயிர்
வாழ்வுக்கு இன்றியமையாத பூதமாகிய நீரினின்றும் பிரித்து
எடுத்தலாகிய செயலே அவற்றைக் கொலை செய்தலாகும். நிலத்தில்
வாழும் நம்போன்ற உயிர்களுக்குக் காற்று
இன்றியமையாதிருத்தல்போல மீன் முதலாக நீர் வாழ்வனவாகிய
பிராணிகள் உயிருடன் வாழ்வதற்கு நீர் இன்றியமையாததாகும்.
Element என்பது நவீனர். மனிதனைக் காற்றில்லாமற் செய்து
இறக்கும்படி செய்துவிட்டால் அது கொலையாகா தென்பாரு
முண்டோ! இது பற்றிக் கொலை மறுத்தலில் ஸ்ரீ சாந்தலிங்க
சுவாமிகள் உரைத்தவைகளையும் பார்க்க.
தொழில் - சீவனத்துக்குரிய மரபுத் தொழில் என்ற பொருளில்
வந்தது. கொடுவினைத்தொழில் என்று இங்கு
இதனை
எடுத்துக்காட்டியது பரதவர் கையிற்பட்டு இறந்தும், அதனைஉண்ணும்
மாக்களின் வாய்ப்பட்டு ஒழிந்தும் கழியும் பிராணிகளிடத்தும்,
இக்கொடுமை செய்து இம்மையிலும் கேடடைந்து மறுமையிலும் நகரம்
புகும் மக்களிடத்தும் ஆசிரியர் கொண்ட கருணையைக்
காட்டுகின்றது.
கொடுப்பன
- கொணர்ந்து கொடுக்கப்படுவன. தேடிக்
கொடுப்பன என்க. கடலினுட்சென்று மீன்வலைப் படுத்துக் காணர்தல்
நுளையர் தொழிலும், அவற்றை விலைப்படுத்துதல் நுளைச்சியர்
தொழிலுமாம். "கழிக்கயல் விலைசெய்" (1115) என்று கூறுதல் காண்க.
இது இயல்பும் வழக்குமாம். "திமில் வாழ்நர்கள் கொணர்ந்த,
கயல ளப்பன பரத்தியர் வரிநெடுங் கண்கள்"(அதிபத்தர் - புரா - 6)
என்பதும், அதுபற்றி எனது சேக்கிழார் 131-135 பக்கங்களில்
உரைத்தவையும் பார்க்க. இவ்வாறன்றிக் கொடுப்பன என்பதற்கு
விற்கப்படுவன என்றுரைத்தனர் முன்னுரைகாரர்கள். கொழுமீன்
-
ஓர் சாதிமீன். (திருக்கோவை 188 உரை).
மணற்
கரைப்படும் - பவளம் - நுளைச்சியர் கொடுப்பன
- என்க. கடலகத்துக் குளித்தெடுக்கப்படும் முத்துக்கள் போலன்றிப்,
பவளக் கொடிகள் கரையில் படர்ந்தும் ஒதுக்கப்பட்டும்
கிடைப்பனவற்றை நுளைச்சியர் தேடிக் கொணர்ந்து பண்படுத்தி
விற்பர் என்பது. "துறைக்கொண்ட செம்பவள மிருளகற்றுஞ் சோதித்
தொன்மயிலை" என்ற திருத்தொண்டத் தொகையும் காண்க.
துறையவர்
கடற் சங்கு குளிப்பன என்க. சங்கு குளித்தல்
என்பது கடலினுள் மூழ்கி அதனடியிலிருக்கும் சங்குகளை
வாரியெடுத்துக் கொணரும் தொழிலுக்கு மரபுப்
பெயராய் வழங்குவது.
குளிப்பன - குளித்தெடுக்கப்படுவன. முத்துக்
குளித்தல் என்பது
காண்க.
குளிப்பன
மணற்கேணி - பரத்தியர் மணற்கேணியிற்குளிப்பர் என்பதாம். மணற்கேணி
- நெய்தனிலத்தின் நீர்நிலை. பரத்தியரது
உடல் அழகும் அணிநலனும் முன்னர்க் கூறப்பட்டன. குளிப்பன
என்ற இதனால் நுளைச்சியர் உடலைத் தூய்தாக வைத்துக்கொள்ளு
மியல்வுடையார் என்பதும் குறிக்கப்பட்டது.
வடுவகிர்க்கண்
மங்கையர் - கண்களின் இயற்கையழகினைக் கூறுவதுடன் அவர்கள் பவளம், மணி,
மீன் முதலியனவாய்த் தாம்
விற்கும் கடல்படு பொருள்களாகிய பண்டங்களின் விலையினை
நிச்சயிக்கும் கூரிய கண்ணுடையர் என்பதும் குறிக்கப்பட்டது.
"கயலளப்பன" (அதி - புரா - 6) என்றது காண்க.
துறையர்
- நுளையர் - நெய்தனில மக்களுள் ஆண்பாலார்.
நுளைச்சியர் - அந்நிலப் பெண்கள். மீன்
- பவளம் அந்நிலக்
கருப்பொருள்கள். சங்கு குளித்தல் - அந்நிலச்
செய்தி. 35