1113. |
சுழிப்பு
னற்கட லோதமுன் சூழ்ந்துகொண் டணிய
வழிக்க ரைப்பொதிப் பொன்னவிழ்ப் பனமலர்ப்
புன்னை; விழிக்கு நெய்தலின் விரைமலர்க்
கட்சுரும்
புண்ணக்
கழிக்க ரைப்பொதி சோறவிழ்ப் பனமடற் கைதை. 36 |
(இ-ள்.)
வெளிப்படை. சுழிகளுடன் கூடிய நீரையுடைய
கடல்நீரினாற் சூழ்ந்து கொள்ளப்பட்ட பக்கத்தில் உள்ள
வழிக்கரையில் பொதிந்த பொன்னினைப் புன்னை மலர்கள்
பொதியவிழ்த்துக் கொடுப்பன; அலர்கின்ற நெய்தல் மலர்களில்
தங்கிய வண்டுகள் உண்ணும்படி கழிக்கரையில்
நீண்டமடல்களையுடைய தாழை பொதிசோற்றை அவிழ்த்துக்
கொடுப்பன.
(வி-ரை.)
சுழிப்புனல் - சுழித்துவரும்
அலைகளையுடைய
நீர். சுழித்தல் - சுருண்டு வருதல் குறித்தது.
சுழி -நீர்ச்சுழிகள் -
கடற்கரையில் இருத்தல் அரிது.
கொண்ட
அணிய என்பது கொண்டணிய என
நின்றது.
ஓதம்
முன் சூழ்ந்துகொண்ட அணிய வழிக்கரை என்றது
அலைகள் முன்பக்கம் வந்து பரவத்தக்கதாகிய கடல் விளிம்பில்
உள்ள வழிக்கரையில் என்பதாம்.
புன்னை
- கடல் வழிக்கரையில் செல்வார்க்கு நிழல்
தரும்படி அமைவன.
புன்னை
பொதி பொன் அவிழ்ப்பன என்க. பொதிப்
பொன் அவிழ்த்தலாவது புன்னை முகைகள் விரிந்து உள்ளே
பொதிந்து மூடியதுபோல் வைத்திருந்த மஞ்சணிறமுள்ள தாதுக்களை
உதிர்ப்பன என்பதாம். "கரும்புனைவெண் முத்தரும்பிப்பொன்மலர்ந்து
பவளக் கவின்காட்டுங் கடிபொழில்சூழ் கலயநல்லூர் காணே"
(ஆளுடைய நம்பிகள்), "புன்னை வெண்கிழி யிற்பவ ளம்புரை
பூந்தராய்" (ஆளுடைய பிள்ளையார்) என்ற தேவாரங்களும், பிறவும்
காண்க.
விழிக்கும்
- மலரும். நெய்தல் - கருங்குவளை;
இந்தப்பூ
மலர்தல் கண் விழிப்பது போன்றிருப்பதென்பது கருத்து.
மலர்க்கட்
சுரும்பு - மலரில் வாழும் வண்டுகள் கண் -
ஏழுனுருபு. கண்போன்ற கரிய சுரும்பு என்றலுமாம். கள்ளை
உண்ண என்று உரை கூறுதல் பொருந்தாதென்க.
பொதி
சோறு அவிழ்ப்பன மடல் கைதை - மடற்கைதை
- நீண்ட மடல்களாகிய (இலைகளை) இதழ்களை உடைய தாழை.
பொதி சோறு அவிழ்ப்பன - தாழை மலர்களில்
உள்ளிருக்கும்
சோறு என்ற பகுதிகள்வெளியில் தெரியும்படி
மடல் விரிந்து
அலர்வன என்பதாம். சுரும்பு உண்ணச் சோறு அவிழ்ப்பன -
வண்டுகள் வந்து படிந்து தேனுண்டு மகரந்தங்களைக் கொள்ள
மலர்வன. "வண்டலர் கைதை, துன்று நீறுபுனை மேனிய வாகித்
தூய நீறுபுனை தொண்டர்களென்னச், சென்று சென்றுமுரல்கின்றன"
(242) எனத் தாழைப்பூவில் வண்டுகள் படிவதனை முன்னர்
உரைத்தது காண்க.
வழிக்கரையிற்
செல்வார்க்கு உதவியாகப் புன்னை பொன்
கொடுக்க, அதனைக் கண்டு தாழை, (பொன்
தந்தால் அது
பசிமாற்றாது - ஆதலின் நாம் கழிக்கரையில்
வாழ்வார்க்கு உடனே
பசியாற உண்ணும் சோறு கொடுப்போம் என்று) தம்மிடமுள்ள பொதி
சோற்றை அவிழ்ப்பன என்று ஈரிடத்தும் சுவைமிக்க தற்குறிப்பேற்ற
அணிநலம்படக் கூறிய கவிநயம் காண்க.
பொதி
சோறு - கட்டுச்சோறு; பொதிப் பொன் -
பொன்
முடிப்பு. இங்குப் பொதி என்ற சொற்சிலேடைப்
பொருளும், வழிக்கரை
- கழிக்கரை என்ற சொல்லாற்றற்
குறிப்பும் காண்க.
புன்னை
- நெய்தனிலக் கருப்பொருளாகிய மரம். "மட்டிட்ட
புன்னையங்கானன் மடமயிலை" (ஆளுடைய பிள்ளையார் தேவாரம்).
நெய்தலும் கைதையும் நெய்தனிலத்துக் கருப்பொருள்களாகிய
பூ.
கழிக்கடைப்
பொதி - என்பதும் பாடம். 36
|