1114. |
காயல்
வண்கரைப் புரைநெறி யடைப்பன கனிமுட்
சேய தண்ணறுஞ் செழுமுகை செறியுமுண்
டகங்கள்;
ஆய நுண்மணல் வெண்மையை மறைப்பன வன்னந் தாய முன்றுறைச் சூழல்சூழ் ஞாழலின் றாது.
37 |
(இ-ள்.)
வெளிப்படை. கழிக்கானல்களின் வளப்பமிக்க
கரைகளிற் குற்றமுடைய சிறுவழிகளை, முதிர்ந்த முட்களையுடைய
சிவந்த குளிர்ந்த மணம் பொருந்திய செழித்த அரும்புகள் நிறைந்த
முள்ளிச்செடிகள் அடைப்பன; அவ்விடத்தில் உள்ள நுண்மணலின்
வெண்மையை அன்னங்கள் தாவி விளையாடும் முன்கரையின்
சூழலினைச் சூழ்ந்து முளைத்துள்ள ஞாழல் மலர்களின்
பூந்தாதுக்கள் மறைப்பன.
(வி-ரை.)
காயல் - உப்பளம் என்றலுமாம். வண்கரை
-
வண்மையாவது கடல்படு வளங்கள் யாவும் பிறநாட்டு வளங்களும்
வந்துகூடிக் கிடைத்தற் கிடமாதல்.
கரைப்
புரை நெறி - கரையில் உடைப்பும் துவாரங்களும்
உள்ள சிறு வழிகள். கரையில் அலைகளால் அரித்து அழிக்கப்பட்ட
பிளவுகளையும் துவாரங்களையும் நீர் முள்ளிச் செடிகள் மறைத்து
நிற்றல் இயற்கை. முண்டகம் - தாழையென்றும்,
கனிமுள் -
மெல்லிய முள் என்றும், அடைப்பன - மூடுவதற்குப்
பயன்படுவன
- மூடுவன - என்றும் கொண்டு உரைப்பாருமுண்டு. "கண்டகங்காள்
முண்டகங்கள் கைதைகாள்" என்ற தேவாரத்தால் முண்டகம்
வேறென்பதறியப்படும்.
சேய
முண்டகம் - தூரத்திலிருந்து வந்த தாமரை
என்றுரைப்பாரு முண்டு. அவர்கள் நெய்தனிலம் மருதநிலத்தை
அடுத்திருப்பதனால் ஆறுகளும் ஓடைகளும் தாமரைகளை வாரி
வருதலும் கூடும் என்றும் - "கமல வண்டலர் கைதை" (242) என
முன்னுரைத்தவை காண்க என்றும் கூறுவர்.
ஆய
- அக்கடற்கரையில் உள்ள. நுண்மணல்
வெண்மையினை ஞாழலின்தாது மறைப்பன என்பது
வெண்பரப்பு முழுமையும் மறையும்படி ஞாழலின் பூந்தாதுக்கள்
நிறைந்தன என்பதாம். அவ்விடத்து ஞாழல்களின் மிகுதி
குறித்தது.
ஞாழல்
- கடல்சார்ந்த இடங்களில் மிகுதியும் உளதாகும்
ஒருவகைச் செடி. நெய்தற் கருப்பொருள்களுள் ஒன்று; புலிநகக்
கொன்றை என்பாருமுண்டு.
அன்னம்
- சிறுபான்மை நெய்தனிலத்திற் பயிலும்பறவைகளுள்
ஒன்று. முன்றுறை - துறையின் முன் பக்கம்.
இல்முன் என்பது
முன்றில் என வருவது போலக் கொள்க. சூழல் -
சூழ்ந்துள்ள இடம்.
கயல்முள்
- என்பதும் பாடம். 37
|