1116. மருட்கொ டுந்தொழில் மன்னவ னிறக்கிய வரியை
நெருக்கி முன் "திரு வொற்றியூர் நீங்க" வென்                                   றெழுதும்
ஒருத்தர் தம்பெருங் கோயிலி னொருபுறஞ் சூழ்ந்த
திருப்ப ரப்பையு முடையதத் திரைக்கடல் வரைப்பு.
39

     (இ-ள்.) வெளிப்படை. மயக்கத்தினாற் கொடுந்தொழில்
செய்யும் (மாந்தாதா என்னும்) மன்னவன் குறைத்தெழுதிய திட்டம்
வரைந்த எழுத்து வரியை நெருக்கி வரிப்பிளந்து, அதன் முதலின்
"திருவொற்றியூர் நீங்கலாக" என்று எழுத வல்ல ஒருத்தராகிய
சிவபெருமானது பெரியகோயிலின் ஒருபுறத்தில் சூழ்ந்த
திருப்பரப்பிடத்தையும் உடையது அந்த நெய்தனிலத்தின்
வரைப்பாகும்.

     (வி-ரை.) மருட்கொடுந்தொழில்...ஒருத்தர் - இங்குக்
குறித்த வரலாறாவது - அயோத்தியில் அரசுபுரிந்திருந்த மாந்தாதா
என்ற அரசன் நீண்டவயதாய் உடல் தளர்ந்து நடுக்கமும் பிணி
முதலியனவும் மேலிட்டு வருத்த முற்றனன்.அது போழ்து சிலரை
நோக்கி "மிகுந்த மூப்பு நலிவதனால் வருந்தாது விரைவில்
இறக்கும்வகை யாது?" என்று வினாவினான். அவர்கள்
மருளுடைமையால் "முன்செய்துவந்த சிவபுண்ணியங்களுக்குக்
குறைவுசெய்தால் விரைவில் இறந்து போகலாம்" என்றனர். அரசனும்
அவ்வாறே துணிந்து கணக்கனைக் கூவித் தான் முன்பு விதித்து
நடத்திவந்த சிவன் கோயிற் படித்தரத் திட்டங்களை எல்லாம் அரை
வரிசையாக்குறைத்துக் கணக்கு எழுதிவரும்படி உத்தரவிட்டு
அவ்வாறே எழுதிவந்த கணக்கிற் கையெழுத்தும் இட்டு வைத்தனன்.
மறுநாட் பார்க்கும் போது அதில் அந்தவரியை நெருக்கி
வரிப்பிளந்து "திருவொற்றியூர் நீங்கலாக" என்று எழுதியிருந்தது
கண்டு, அரசன், இது திருவொற்றியூர் நகராளும் இறைவன்
றிருவருளேயாகும் என்று தெரிந்து, அங்குப் பெருஞ் சிறப்புக்கள்
செய்து, முதுமையினது வருத்தங்கள் நீங்கிப், பின்னரும் நெடுநாள்
வாழ்ந்து, உய்தியு மடைந்தனன் என்பதாம்.

     மருட்கொடுந் தொழில் - மயக்கத்தினாற் செய்த கொடிய
தொழிலாவது முன் கூறிய வரலாற்றின்படி, உண்மை ஞானமில்லாத
துற்சனவர் சொல்லே கேட்டுச் சிவாலயப் படித்தரத்தைக்
குறைத்தலாம்.

     இறக்கிய வரியை முன் நெருக்கி எழுதும் என்க. "எல்லாச்
சிவாலயங்களிலும் குறைக்க" என்று தொடங்கிய ஏட்டு வரியின்
முதலில் வரிப்பிளந்து, "திருவொற்றி நகர் நீங்கலாக - எல்லாச்
சிவாலயங்களிலும்" என்று நெருக்கித் திருத்தி எழுதிய என்பதாம்.
இறக்கிய - குறைத்தெழுதிய. வரி - ஏட்டுவரி. இறக்குதல் -
குறைத்தல். இறக்கிய - சுமத்திய என்றும், வரி - இறைப்பொருள்
என்றுமுரை கூறுவாருமுளர். அது தவறென்க. ஒருத்தர் -
ஒற்றிநகர்ப் படம்பக்கநாதர். ஒருவரே பதி என்று வேதாகமங்களுள்
எடுத்துச் சொல்லப்பட்ட முழுமுதற் கடவுள். "ஒன்றென்ற தொன்றே
காண் ஒன்றேபதி" என்பது ஞானசாத்திரம், ஒருத்தர் -
தனக்குவமையில்லாதவர் - ஒப்பற்றவர் என்றலுமாம்.

     முன் கூறிய இவ்வரலாற்றை "ஏட்டு வரியில் ஒற்றி நகர் நீங்க
லென்னு மெழுத்தறியு, நாட்ட மலருந் திருநுதலார்" (ஏயர்கோன் -
புரா - 204) என்று பின்னரும் விதந்து பாராட்டியும், இதுபற்றியே
திருவொற்றிநகர் நாதருக்கு எழுத்தறியும் பெருமான் எனப் போந்த
திருப்பெயரினை, "எழுதாதா மறையளித்த
எழுத்தறியும் பெருமானை"
(திருநா - புரா - 335) என்று போற்றியும் ஆசிரியர் காட்டியருளிய
திறமும் காண்க.

     கடல்வரைப்பு கோயிலின் ஒருபுறம் சூழ்ந்த
திருப்பரப்பை உடையது
என்றது அத்திருக்கோயிலின் ஒருபுறமாக
கிழக்கே முன்பக்கதிற் சூழ்ந்த பரந்த இடம் கடற்கரையாகும்
என்றதாம். வரைப்பு - இடம்.

     ஒற்றியூர் - உபமன்னியு மாமுனிவரிடம் சிவதீக்கை பெற்றுப்
பூசித்த வாசுகியைத் தமது திருவுருவிற் சேர்த்தி அமர்த்திக்கொண்டு
அந்த அடையாளங்களுடன் இன்றும் விளங்க வீற்றிருப்பதனால்
சுவாமிக்குப் படம்பக்கநாதர் என்று பெயர் வழங்கும்.

     திருவருளால் ஆளுடையநம்பிகள் சங்கிலியம்மையாரை
மணந்துகொண்டருளிய தலம். சைவசமய பரமாசாரியர்களாகிய
பெருமக்கள் மூவர் முதலிகளுடைய தேவாரமும் பெற்ற
சிறப்புடையது. திருவாரூரும் - காஞ்சிபுரமும்போலவே இத்
திருவொற்றியூரும் சிவனருள் சிறந்த பெருந்தலமாமென்பது
ஆளுடையநம்பிகளது சரிதத்தால் விளக்கப்படும் பெருமையுடையது.
"புவியுட் சிலவோ கம்போலத் திங்கண் முடியா ரளித்ததிரு
வொற்றியூர்" என்று போற்றப்படும் சிறப்புடையது. அறுபான்மும்மை அடியார் திருக்கூட்டத்தினுள் கலியநாயனார் அவதரித்துத்
திருவிளக்குப் பணிசெய்து அருள் பெற்றதலம்.

     பட்டினத்தடிகள் இங்குப் பலநாள் பேறுபெற்றுக்கடற்கரையில்
திருக்கோயிலுக்கு வடகீழ்ப்பக்கத்தில் சிவயோகத்தமர்ந்து சிவலிங்க
உருவமாய் இன்றும் விளங்க வீற்றிருந்தருளும் பெருஞ்சிறப்புடையது.
பதினொராந் திருமுறையில் தொகுக்கப்பட்ட "திருவொற்றியூர்
ஒருபா வொருபஃது" என்ற நூலினாற் பட்டினத்தடிகள் துதித்தருளிய
தலம்.

     திருவொற்றியூர் நிலயத்திலிருந்து கிழக்கே கற்சாலை வழியில்
1/8 நாழிகையளவில் உள்ளது. சென்னையிலிருந்து வடக்கே
கற்சாலை வழி 5 நாழிகையளவில் உள்ளது.

     கடல்வைப்பு - என்பதும் பாடம். 39