1117. மெய்த ரும்புகழ்த் திருமயி லாபுரி விரைசூழ்
மொய்த யங்குதண் பொழிற்றிரு வான்மியூர்
                                 முதலாப்
பைத ரும்பணி யணிந்தவர் பதியெனைப் பலவால்;

நெய்த லெய்தமுன் செய்தவந் நிறைதவஞ் சிறிதோ?

                                       40

      (இ-ள்.) வெளிப்படை. உண்மையை நிலைநாட்டித்தரும்
புகழினையுடைய திருமயிலாபுரியும், மணம் சூழ்கின்ற மலர்கள்
நெருங்கிய குளிர்ந்த சோலைகள் சூழ்ந்த திருவான்மியூரும்,
முதலாகப், பைபொருந்திய பாம்பினை அணியாக அணிந்த
சிவபெருமான் வீற்றிருக்கும் திருத்தலங்கள் இன்னும்பல
அங்குள்ளன; இவற்றையெல்லாம் தன்னிடத்திற் பொருந்தப்
பெறுதற்கு அந்நெய்தனிலமானது செய்த அந்த நிறைதவம்
சிறிதாமோ? (ஆகாது)

     (வி-ரை.) மெய்தரும்புகழ் - மெய் - உண்மை."மண்ணினிற்
பிறந்தார் பெறும்பயன்" ஆவன, அரன் வழிபாடும் அடியார்
பூசையுமேயாம் என்ற உண்மை. தருதல் - இவையே உண்மை
என்றதனை நிலைநாட்டிக். காட்டித்தருதல். "உண்மையாமெனில்
உலகர் முன் வருக" என நிலையிட்டு உரைத்ததற்கேற்ப எலும்பே
பெண்ணாக வந்த சரிதம் இத்தலத்தின் பெருமை குறிப்பதாம் என்பது
கருத்து. மெய் - உடம்பு என்று கொண்டு, எலும்பினையேஉடம்பாகக்
கண்டு ஆக்கி உயிரையும் உட்புகப் பொருத்திக்கொடுத்த புகழ்
என்று விசேடமுரைப்பாருமுண்டு.

     மொய் - அலரும் பருவத்து அரும்புகள். தயங்குதல் -மிகுந்து
விளங்குதல்.

     பை தரும் பணி - பணி - பாம்பு. பாம்பு
நச்சுப்பையினையுடைய தென்றதாம். "பையஞ் சுடர்விடு நாகம்"
(ஆரூர்) என்றது அப்பர்சுவாமிகளது திருவாக்கும். பணி -
பணத்தையுடையது. பணம் - படம்.

     எனைப்பல - இன்னும் பல. பல - பலவுள்ளன. உள்ளனஎன்ற
பயனிலை வருவிக்க. எய்த - அத்தலங்கள் தன்னகத்தே
பொருந்தியிருக்க.

     அந்நிறைதவம் -- சிறந்த தலங்களைத் தன்னிடம்
பொருந்தப் பெற்ற அளவுக்கு அந்த எனப் பண்டறிசுட்டு.

     நிறைதவம் - கருதியபேறு தவத்தால் நிறைவாக்கப் பெறுதலில்
நிறை என்றார். நிறை - நிறைவு செய்யும்.

     சிறிதோ? - ஓகார வினா எதிர்மறை குறித்தது. சிறிதன்று
என்க.

     மயிலாபுரி - இத்தொண்டை நாட்டு 24-வது தலம். இது
மயிலாப்பு - எனவும் மயிலை எனவும் வழங்கும்.
"மயிலாப்பிலுள்ளார்", "புன்னையங் கானன் மடமயிலை" என்ற தேவார ஆட்சிகள் காண்க. அம்மையார் மயிலுருவாகிப் புன்னையின்கீழ்
இறைவனைப் பூசித்த காரணம்பற்றி இப்பெயர் பெற்றது. புன்னை
மரமும் அதன்கீழ் அம்மையார் மயிலுருவுடன் பூசித்த திருவுருவமும்
இன்றும் காணப்பெறுவன. இராமர் பூசித்துப் பேறுபெற்று ஐப்பசி
ஒணத்தில் திருவிழாக் கொண்டாடினர் என்றது தலபுராணம். "ஐப்பசி
ஒண விழாவும்" (2) என்ற ஆளுடைய பிள்ளையாரது இத்தலத்
தேவாரங் காண்க. ஆளுடையபிள்ளயார் (பூம்பாவையாரது)
எலும்பைப் பெண்ணாக்கித் தந்த சிறப்புடையது. அவர்தம் புராணம்
1034 முதல் 1120 வரை திருப்பாட்டுக்கள் பார்க்க. இவ்விழா
பிரமோற்சவத்தில் 8-ம் திருநாளில் இன்றும் கொண்டாடப்
பெறுகின்றது. இத்திருவுருவங்கள் கோயிலினுள் மேலைக்
கோபுரவாயிலுக்கு வடபுறம் உள்ளன. அறுபான்மும்மை
நாயன்மார்களுள் வாயிலார் நாயினார் அருள் பெற்ற தலம். இவர்
கோயில் அம்மையாரின் கோயிலுக்கு எதிரில் தென்புறம்
திருமதிலையடுத்து உள்ளது. திருக்குறள் பாடியருளிய
திருவள்ளுவர் அவதரித்துப் பேறு பெற்ற தலம். மேற்குமுகமான
சந்நிதி. சுவாமிபெயர் கபாலீசர் என்பது பதிகத்துக் காண்க.
சென்னக்குத் தெற்கே கற்சாலை வழி 4 நாழிகையளவில்
அடையத்தக்கது.

     திருவான்மியூர் - தொண்டை நாட்டின் 25-வது தலம்.இதுவும்
மேற்குமுகமான சந்நிதி. வான்மீக மகாமுனிவருக்கு அருளிய
காரணத்தால் இப்பெயர் பெற்றது. தேவர்கள் கடல் கடைந்து பெற்ற
அமுதத்தாற் சிவலிங்கந்தாபித்துப் பூசித்த்தனால் சுவாமி மருந்தீசர்
என வழங்கப்பெறுவர். "சென்றார் தம்மிடர்தீர் திருவான்மியூர் "
(ஆளுடைய பிள்ளையார் - கௌசிகம் 11), "வாதை தீர்த்திடும்
வான்மியூ ரீசனே" (8) "வாட்டந் தீர்த்திடும்"(9) (அப்பர் சுவாமிகள்
குறுந்தொகை) என்ற தேவாரங்களும், "திருவான்மியூர் மருந்தைச்
சேர்ந்து" (திருநா - புரா - 331), "பிறவி மருந்தான பெருந்தகை"
(திருஞான - புரா - 1123) என்ற மாபுராணத் திருவாக்குக்களும்
காண்க. அப்பர் சுவாமிகள் திருக்கழுக்குன்றத்தினின்றும் போந்து
இங்கு வந்து தரிசித்துத் திருமயிலாபுரி திருவொற்றியூர் சென்றருளினர். ஆளுடையபிள்ளையார் திருவொற்றியூரினின்றும்இங்குப்
போந்தருளினர். சுவாமியின் மூலலிங்கத் திருவுருவம் பால்
வெண்ணீற்றின் வரிகளையுடைய சுயம்பு. சுவாமிபெயர்
பால்வண்ணநாதர்.

     இது திருமயிலாபுரியினின்றும் தென்கிழக்கில் கற்சாலையில்
4 நாழிகையளவில் அடையத்தக்கது. போக்கு வரவு வசதிகளும்
மோட்டார் பஸ் முதலியனவும் உண்டு. 40