1118. |
கோடு
கொண்டெழுந் திரைக்கடற் பவளமென்
கொழுந்து
மாடு மொய்வரைச் சந்தனச் சினைமிசை வளரும்
நீடு நெய்தலுங் குறிஞ்சியும் புணர்நிலம் பலவால்
ஆடு நீள்கொடி மாடமா மல்லையே யனைய. 41 |
(இ-ள்.)
கோடு...நீலம் - சங்குகளைத் தம்மிடத்துக்கொண்டு
மேற் கிளம்புகின்ற அலைகளையுடைய கடலிற் படர்கின்று
பவளக்கொடியின் மெல்லிய கொழுந்துகள் பக்கத்தில் நெருங்கிய
சந்தன மரங்களின் கிளைகளில் வளர்தற்கிடமாகிய நீடிய
நெய்தலும் குறிஞ்சியும் கூடிய திணைமயங்கும் புணர்நிலங்களும்;
ஆடும் நீள்கொடி....அனைய - ஆடுகின்ற நீண்ட
கொடிகளையுடைய மாடங்கள் விளங்கும் மாமல்லை நகரம்
போன்றவை; பல - பலவாம். (ஆல் -அசை).
(வி-ரை.)
குறிஞ்சி - பாலை - முல்லை - மருதம் - நெய்தல்
என்ற ஐந்திணைகளையும் அவ்வவற்றுக்குரிய முதற்பொருள்
கருப்பொருள்களுடன் முறையே அவ்வவற்றில் விளங்கும் சிவ
தலங்களின் சிறப்புடன் சார்த்திக் கூறிவந்த ஆசிரியர், இனி
அம்முறையே அவை ஒன்றோடொன்று கூடிய புணர்நிலங்களை
வகுத்து நாட்டுவளங் கூறத் தொடங்குகின்றார். திணைகள் கூடிய
நிலங்களின் ஒழுக்கத்தைத் திணைமயக்கம்
என்பது மரபு.
மயங்குதல் - கூடுதல் - கலத்தல் - என்ற பொருளில் வந்தது.
இவ்வாறு புணர்நிலங்கள், குறிஞ்சியினுடன் நெய்தல்
- மருதம் -
முல்லை என்பன முறையே தனித்தனி கூடுவதனால் மூன்றும்,
அவற்றை அடுத்து முல்லையினுடன் நெய்தலும்
-மருதமும்
அவ்வாறே கூடுவதனால் இரண்டும், மருதத்துடன்
நெய்தல்
கூடுவதனால் ஒன்றும் ஆக ஆறு வகைப்படும்.1
அவற்றுள் முதற்கண்,
நெய்தலுங் குறிஞ்சியுங் கூடிய
திணைமயக்கத்தினை இப்பாட்டாற் கூறுகின்றார். இவ்வாறே
ஏனைய புணர்நிலம் ஐந்தினையும் அம்முறையே மேல்வரும்
ஐந்து பாட்டுக்களாற் கூறும் அமைதி கண்டுகொள்க.
கோடுகொண்டு
எழும்திரை - கோடு - சங்கு. "கோடுவாய்
வைத்து" (திருமுருகு). அலைகள் சுருண்டு மேற்கிளம்பும்போது, நீரின்
கீழிருந்த சங்குகளை வாரிக்கொண்டு உயர்கின்றன என்க.
கடற்பவள
மென்கொழுந்து - கடலில் விளையும்
பவளக்கொடியின் கொழுந்து. பவளங்கள் கொடிபோலப் படர்வன.
இவை, கொடி படர்வனபோலப் பவளப் பூச்சி என்னும் ஒருவகைப்
பூச்சிகளால் தொடர்ந்து கட்டப்படுவதனாற் கொடி போல்வன.
பவளக்கொழுந்து
சந்தனச் சினைமிசை வளரும் என்றது
சந்தன மரக்கிளைகளைப் பற்றுக்கோடாக வைத்துக் கொடிபோலப்
பவளப்பூச்சிகள் பவளக் கூடுகட்டிச் செல்லும் இயல்பு குறித்தது.
வரைச்
சந்தனச்சினை - சந்தனம் குறிஞ்சி நிலத்தின்
கருப்பொருளாகிய மரம். "சந்தமா ரகிலொடு" என்ற
திருக்காளத்தித் தேவாரம் காண்க.
நெய்தலும்
குறிஞ்சியும் புணர் நிலம் - நெய்தற்
கருப்பொருளாகிய பவளம் குறிஞ்சிப் பொருளாகிய
சந்தனத்தின்மேல் வளர்வதனால் அம்முறையிற் கூறினார்.
(மலை) மேலதாகிய
குறிஞ்சியினின்றும் போந்து (கடல்)
கீழதாகிய நெய்தல் வரை அம்முறை கீழிறங்கி நிலவளம்
வகுத்துவந்த ஆசிரியர், இனிப் புணர்நிலங்களை வகுக்கும்போது கீழிருந்து மேலே செல்லும்
முறைபற்றி நெய்தலும் குறிஞ்சியும்
என அம்முறையிற் றொடங்கிக் கூறுகின்றார். பிறவும் இவ்வாறே
கண்டு கொள்க.
புணர்
நிலம் - இரண்டுநிலப் பொருளும் கூடி மயங்கிய
நிலப்பகுதி. இப் பாட்டிற் குறிக்கப்பட்டன கடற்கரையைச்
சார்ந்திருக்கும் மலைப்பகுதிகள். இவ்வாறு மயங்கிவருவதனை
"எந்நில மருங்கிற் பூவும் புள்ளும், அந்நிலம் பொழுதொடு வாராவாயினும், வந்த நிலத்தின்
பயத்த வாகும்" (அகத் - 19)
என்று விதி கூறி அமைவுபடுத்தினர் தொல்காப்பியர்.
மாமல்லையே
அனைய - புணர்நிலம் - பல என்றுகூட்டுக.
இது "கடன்மல்லபுரம்" எனவும், மாமல்லபுரம் எனவும் வழங்கும்.
மாமல்லபுரம் என்பது மாவலிபுரம் என்றும், மல்லைஎன்றும்
மருவியதுபோலும். மாவலிபால் மண்ணிரந்து அவனைச் சங்கரித்த
திருமாலிருந்த தலமாதலின் வைணவர்களும் இதனைத் தங்களுடைய
பெருந் தலங்களுள் ஒன்றாகக் கொண்டாடுகின்றனர். "பிணங்க ளிடு
காட்டிற் பிஞ்ஞகனொடு......கடன்மல்லை" என்பது திருவாய்மொழி.
இங்குள்ள திருமால் மாவலி மிண்டன் என்று வழங்கப்படுவர்.இது
வாமனாவதார நிகழ்ச்சியின்பின் திருமால் சிவபூசை செய்த தலம்
என்பர். இங்குச் சந்தனமரத்தினாற் சமைக்கப்பட்ட கருப்பக்கிருக
மண்டபத்தில் சிவபெருமான் எழுந்தருளியுள்ளமை "சந்தனச்
சினைமிசைப் பவளமென் கொழுந்து வளரும்" என்றதன் உண்மையை
விளக்கி நிற்றல் குறிக்கத்தக்கது.
இங்குள்ள கோயில்களும்,
சிவாலயத்திற்குரிய ஐந்து தேர்களும்
(இவற்றைப் பஞ்சபாண்டவர் தேர் என்பது சாமானிய வழக்கு)
மலைப்பக்கமுள்ள ஒவ்வோர் கற்களில் குடைந்து எடுக்கப்பட்டன.
சென்னைப் பிரதேசத்தில் ஆலயத்திருப்பணிகளுக்கு வரும் கற்கள்
இங்கிருந்தே எடுக்கப்படுவன. இது கடற்கரையில் உள்ள
மலையாதலின் நெய்தலும் குறிஞ்சியும் புணர்நிலம் என்றார்.
பல
என்றதனால் இத்தகைய புணர்நிலங்கள் தொண்டைநாட்டுக்
கடற்கரையில் பலவாம் என்பதும் குறிக்கப்பட்டது.
மல்லை - இத்தலம்
திருக்கழுக்குன்றத்திலிருந்து கிழக்கே
கற்சாலைவழி 9 நாழிகையளவில் உள்ளது.
திருக்கழுக்குன்றத்திற்குவழி 1091-ன்கீழ்ப் பார்க்க. 41
1. கால வேறுபாட்டால்
முல்லையுங் குறிஞ்சியும் முறைமையிற் றிரிந்த பாலை
எனப்பட்டது வேறு (1092 பார்க்க.)
|