1119. மலைவி ழிப்பன வெனவயற் சேல்வரைப் பாறைத்
தலையு கைப்பவுந், தளைச்செறு விடைநெடுங்
                                   கருமான்
கலைகு திப்பன கரும்பகட் டேர்நிகர்ப் பவுமாய்
அலைபு னற்பணை குறிஞ்சியோ டணைவன
                                  வனேகம்.
42

     (இ-ள்.) வெளிப்படை. மலைகள் கண்ணைத் திறந்து
பார்க்கின்றன என்று சொல்லத்தக்கதாய், வயல்களினுள்ள
சேல்மீன்கள் மலைகளின் பாறைகளிடத்துப் பாய்ந்து புரள்வனவும்,
ரம்புகளையுடைய வயல்களினிடையே, - ஏரிற்பூட்டிய கரிய
எருமைகள் போகின்றன என்று சொல்லும்படி கருமான் கலைகள்
குதித்துப் போவனவும் ஆகி, அலைகள் பொருந்திய நீரினையுடைய
வயல்கள் குறிஞ்சி நிலப்பகுதியுடன் கூடிய இடங்கள் அனேகம்
உள்ளன.

     (வி-ரை.) மலைவிழிப்பன என - மலைப்பாறைகளில்
அடுத்துள்ள வயலிலிருந்த சேல் மீன்கள் பாய்ந்து புரளுதல் அந்த
மலைகள் கண்ணைத் திறந்து பார்ப்பன போல இருந்தன என்பது.
சேல் - மருதநிலக்கருப்பொருள். வரைப்பாறை - குறிஞ்சி.
பாறைகளில் சேல்கள் பாய்ந்து புரளத்தக்கதாய் வயல்களும்
மலைப்பாறைகளும் அடுத்தடுத்துக் கூடிய நிலமாதலின் பணை
குறிஞ்சியோடு
அணைவன என்றார்.

     தளை - வரம்பு. செறு - வயல். இவைமருத நிலப்பகுதி.
செறு
- என்பது அறுவா நாட்டு வழக்கு. "செறுவி னிற்செழுங்
கமல மோங்கு" (நம்பிகள் - திருப்புகலூர் - 11), "செறுவிற் பூத்த
சேயிதழ்த் தாமரை" (புறநா. 397). நெடும் கருமான்கலை -
கருமான்
- குறிஞ்சிக்கருப்பொருள். மான் - முல்லைக்
கருப்பொருளாயினும், கருமான் குறிஞ்சிக் கருப்பொருளாம்
என்பது இராமநாதச் செட்டியார் குறிப்புரை.

     பகட்டு ஏர் நிகர்ப்ப - பருமையாலும், கரியநிறத்தினாலும்,
தடித்து நீண்ட கொம்பினாலும் கருமான்கலை எருமையை
நிகர்த்தது என்க. மெய்யும் உருவும் பற்றி வந்த உவமம் சேல்மீன்
விழிபோன்றது எனறது மெய்பற்றி வந்த உவமம். பகடு - மருதக்
கருப்பொருள். பகட்டேர் செலுத்திச் செறுவீனிற் றொழில் செய்தல்
மருதநிலச் செய்தி. "பெரும்பகட்டேர் இனப்பண்ணை
யுழும்பண்ணை" (திருநா - புரா - 3).

     தளைச் செறுவிடை ஏர்க் கரும்பகடு எனக் - கருமான் கலை
குதிப்பனவுமாய் - என்று கூட்டிப் பொருள் கொள்க.

     அனேகம் - தொண்டை நாட்டில் மலையும் வயலுமாக
அடுத்திருக்கக் காணும் இடங்கள் எண்ணிறந்தன என்பது.

     இதனால் மருதம் குறிஞ்சியுடனும், குறிஞ்சி மருதத்துடனும்.
புணர்ந்த புணர் நிலன் கூறப்பட்டது. 42