1120. புணர்ந்த வானிரைப் புறவிடைக் குறுமுயல்,
                               பொருப்பின்
அணைந்த வான்மதி முயலினை யினமென
                                 வணைந்து
மணங்கொள் கொல்லையின் வரகுபோர் மஞ்சன
                                வரைக்கார்
இணைந்து முல்லையுங் குறிஞ்சியுங் கலப்பன
                            வெங்கும்.
43

     (இ-ள்.) வெளிப்படை. பசுக்கூட்டங்களையுடைய முல்லைப்
புறவிலிருந்த குறுமுயல் மலையுச்சியிற் சேர்ந்த முழுமதியினிடத்தே
முயற்கறையை நோக்கி அது தனது இனமாகிய முயல் என்று கருதி
அங்கு அணைவதனாலும், மணம் பொருந்திய முல்லை
நிலத்திலிருக்கும் வரகுபோர்களை, மலைகளை மஞ்சனஞ்செய்யும்
நீரையுடைய மேகங்கள் சேர்வதனாலும், முல்லையும் குறிஞ்சியும்
கலப்பனவாகிய புணர் நிலங்கள் எங்கும் உள்ளன.

     (வி-ரை.) ஆனிரை - குறுமுயல் - முல்லைநிலக் கருப்பொருள்கள்.

     குறுமுயல் பொருப்பின் அணைந்தும் என்க.
முல்லையினின்றும் முயல் மலைமேல் ஏறியபடியால் முல்லையுங்
குறிஞ்சியும் கலந்தது என்பதாம்.

     மதி முயலினை இளம் என அணைந்து என்பது
தற்குறிப்பேற்றம்.

     கொல்லை - முல்லைநிலம். மணங்கொள என்றது
முல்லைநிலத்தின் நிறைந்த முல்லை முதலிய பூக்களிற்கூடிய
மணங்குறித்தது. வரகு - முல்லைக் கருப்பொருள்; முல்லைக்
காடுகளில் விளைபொருள். வரகு போர் - கார் இணைந்தும்என்றது
வரகு போர்கு்ளை மிக உயரமாகக் குவித்தலும் அடுக்குதலும்
குறித்தது. வரகுபோர் - "ஒற்றிடை யினமிகா மொழியுமா ருளவே,
அத்திறத் தில்லை வல்லெழுத்து மிகலே"(தொல் - எழுத் - குற் - 7)
என்றபடி வல்லொற்றுமிகாது வந்தது.

     வரை மஞ்சனக்கார் என்க. மலையை மஞ்சனம் செய்யும்
நீரையுடைய மேகம். மேகம் குறிஞ்சிக்குரியது. மலைகளை
மஞ்சனம் செய்யும் கார்
என்ற பொருட் பொருத்தமும் காண்க.
"பூட்டு கார்முகந் தன்னொடுந் தோன்றிய புயல்வா, யூட்டு தண்புன
னந்தியங் கிரிமிசை யுகுத்தல், வேட்டு வக்குலத் திண்ணனார்
மஞ்சனம் விமலற், காட்டு கின்றதோர் தனிச்செயல்
போன்றுளதன்றே" (ஆற்றுப்படலம் - 6) என்ற கந்தபுராணமும்,
"அடுத்தருண கிரியானே யுனக்குவிண்ணீ ரலதுபுன லாட்டு
வாரார்" (திருமலைச்சருக்கம் - 83) என்ற அருணாசல புராணமும்
இக்கருத்தைத் தழுவியனவதால் காண்க.

     மலையில் தவழும் மேகம், மலையை அடுத்து வரகு போரும்
மலைபோன் றுயர்ந்திருத்தலின் அதனில் இணைந்தது என்றதனால்
குறிஞ்சியும் முல்லையும் கலந்தது காண்க. "ஈடு பெருக்கிய
போர்களின் மேக மிளைத்தேற" (926) என்றதும் நினைவுகூர்க.

     அணைந்தும் - இணைந்தும் - கலப்பன - என்க.

     மஞ்சென - என்பதும் பாடம். 43