1121. |
கவரு மீன்குவை
கழியவர் கானவர்க் களித்துச்
சிவலுஞ் சேவலும் மாறியுஞ், சிறுகழிச் சியர்க
ளவரை யேனலுக் கெயிற்றியர் பவளமுத் தளந்து
முவரி நெய்தலுங் கானமுங் கலந்துள வொழுக்கம்.
44
|
(இ-ள்.) வெளிப்படை.
பரதவர்கள், தாங்கள் கவரும் மீன்
குவியல்களை இடையர்களுக்குக் கொடுத்துப் பண்டமாற்று
வகையால் அவர்களிடமிருந்து கவுதாரியையும் சேவலையும்
கொள்வதாலும், நெய்தனிலச் சிறுமியர்கள் தாம் இடைச்சியர்பாற்
கொள்ளும் அவரைக்கும் திணைக்கும் ஈடாகப் பவளத்தையும்
முத்துக்களையும் அளந்து கொடுத்தலினாலும், கடலைச்சார்ந்த
நெய்தனிலமும் முல்லை நிலமும் என்ற இரண்டும் ஒழுக்கத்தாற்
கலந்துள்ளன.
(வி-ரை.)
மீன்குவை - நெய்தற்பொருள். கழியவர் -
கழியருகிலும் கடலருகிலும் வாழ்பவர் - பரதவர். கானவர்
-
இடநோக்கிக் காடுறைபவர்களாகிய இடையர்களைக் குறித்தது.
கழிச்சியர் - நெய்தனிலப் பெண்கள். சிவல்
- கவுதாரி.
சிவல் - சேவல் - இவை முல்லைநிலக்
கருப்பொருள்கள்.
சேவல் - கானங்கோழி.
எயிற்றியரின்
அவரை ஏனலுக்கு என்க. அவரையும்
ஏனலும் முல்லைப் பொருள்களும், பவளமும் முத்தும் நெய்தனிலப்
பொருள்களுமாம். முத்துக்கள் ஏனைக் குறிஞ்சியிலும் மருதத்தினும்
சிறுபான்மை படுமாயினும் பெரும்பான்மை பற்றி நெய்தலுக்கே
உரியன.
உவரி -
கடல். உவர்ப்புள்ள நீர் கொண்டதனால் இப்பெயர்
கொண்டது. கானம் - காடு; முல்லைப்பகுதி.
இப்பாட்டால் முல்லை
குறிஞ்சிகளின் செய்தி பற்றிய கலப்புக்கூறுதலின் கலந்துளஓழக்கம்
என்றார் என்பாருமுண்டு.
முன்பாட்டில் முல்லையும் குறிஞ்சியும் புணர்நிலத்தினை
அந்திலப் பொருள்கள் இயற்கையிற்கூடும் சேர்க்கைபற்றிக்
கூறினார். இப்பாட்டில் நெய்தலும் கானலும் சேர்வதனை
வாணிகமுறைப் பண்டமாற்றுவகையால் அந்நிலப்பொருள்கள்
கலக்கும் சேர்க்கைபற்றிக் கூறினார்.
மீன் கொடுத்துச் சிவலும் சேவலும் கொள்ளுதல்
இருதிறத்தும்
ஆண்பாலார் தொழிலும், பவளமும்முத்தும் கொடுத்து அவரையும்
ஏனலும் கொள்ளுதல் பெண்பாலார் (சிறுமியர்) தொழிலும் ஆவன
எனக் காட்டிய நயமும் கண்டு கொள்க. 1113, 1114ல் உரைத்தவையும்
பார்க்க. 44
|