1123. மீளு மோதமுன் கொழித்தவெண் டரளமுங் கமுகின்
பாளை யுக்கவும் விரவலிற் பரத்தியர் பணைமென்
றோளு முத்தியர் மகளிர்மா றாடிமுன் றொகுக்கு
நீளு நெய்தலு மருதமுங் கலந்துள நிலங்கள்.  46

     (இ-ள்.) வெளிப்படை. (அலைகள் முன்புரண்டுவந்து பின்)
மீளும்கடலினால் முன்னே கொழிக்கப்பட்ட வெள்ளிய
முத்துக்களும் கமுகினது உதிர்ந்த பாளையினின்றும் உதிர்ந்த
பூக்களும் கலந்து சேர்வதனால், பரத்தியர்களும்,
பணைத்தெழுந்த மூங்கில்போன்றுயர்ந்த மெல்லிய
தோள்களையுடையஉழத்தியர்களும், மாறுபட்டு அவற்றை
முன்வாரிச் சேர்க்கின்ற நீண்ட நெய்தலும் மருதமுமாகிய
நிலங்கள் கலந்துள்ளன.

     (வி-ரை.) மீளும் ஓதம் - கடலின் அலைகள் புரண்டு
அலைத்துமுன்கரையில் வந்து பரவிப் பின் மீளும் இயல்பு
குறித்தது. முன்வரும்போது முத்துக்களை
வாரிவந்த அலைகள்
அவற்றைக் கரையில் இட்டு மீண்டன. முத்துக்கள்
கனமுடைமையால் பின் செல்லும் அலைநீருடன் மீளாது
நிலத்தில் உதிர்க்கப்பட்டுத் தங்கின என்பதனைக் கொழித்த
வெண்டரளம்
என்றார்

     கமுகின் பாளை உக்கவும் - நெய்தனிலத்தின் அருகேஉள்ள மருதநிலத்திற் கமுகுகள் இருந்தனவாக அவற்றின் பாளைகளினின்றும் உதிர்ந்த பூக்கள் கீழே சிந்தியிருந்தனவும்.

     தரளமும் - பாளை உக்கவும் - மாறாடி முன் தொகுக்கும்
- முத்துக்களும் கமுகம் பாளையின் உதிர்ந்த பூக்களும் ஒன்றுபோல
விளங்குதலின் முறையே இவற்றைப் பிரித்தறிந்து தொகுக்க இயலாது.
நெய்தல் மகளிரும் பண்ணை மகளிரும் அவற்றை எமது எமது
என்று மாறுபட்டுத் தொழில் செய்தனர் என்று குறிக்க மாறாடி
என்றார். கமுகு பூக்கும்போது முத்துப்போல் விளங்குமென்பதுபற்றி,
"எண்ணார் முத்த மீன்று மரகதம் போற்காய்த்துக், கண்ணார் கமுகு
பவளம் பழுக்குங் கலிக்காழி" (குறிஞ்சி - 4) என்ற ஆளுடைய
பிள்ளையார் தேவாரமுங் காண்க. மாறாடி - "மயிற்குலமு
முகிற்குலமு மாறாட மருங்காடும்" (திருநா - புரா - 10) என்றது
காண்க.

     தரளம் - நெய்தலுக்கும், கமுகு - மருதத்துக்கும் உரிய
கருப்பொருள்கள். பரத்தியர் - உழத்தியர் - என்பன முறையே
நெய்தனிலத்தும், மருதநிலத்தும் உள்ள மகளிர் பெயர்.

     ஓதமங் கொழித்த - என்பதும் பாடம். 46