1126. ஆன தொன்னக ரம்பிகை தம்பெரு மானை
மான வர்ச்சனை யாலொரு காலத்து வழிபட்
டூன மில்லற மனேகமு முலகுய்ய வைத்த
மேன்மை பூண்டவப் பெருமையை யறிந்தவா
                            விளம்பில்,
49

     1126. (இ-ள்.) வெளிப்படை. இவ்வண்ணம் ஆயின
தொன்மையுடைய காஞ்சிமாநகரம், உமையம்மையார் தமது
நாயகராகிய சிவபெருமானைப் பெருமையுடைய பூசனையினால்
ஒரு காலத்தில் வழிபாடு செய்து உலகம் உய்யும்படி குற்றமில்லாத
அனேக அறங்களையும் நிலைபெற வைத்த மேன்மை பூண்டதாகிய
அந்தப் பெருமையை அறிந்தபடி சொல்லப் புகுந்தால். 49
  

     1126. (வி-ரை.) ஆன - முன்னே உரைத்த சிறப்புடைய
வாயின.

     தொன்னகர் - "எவ்வுலகங்களுமுள்ளது" என முன் பாட்டிற்
கூறினமையின் தொன்மை புலப்படுமாறறிக.

     மான அருச்சனை - பெருமையுடைய பூசை. சிவாகமங்களுள்
விதித்த முறைகள் எல்லாம் ஒன்றுங் குறையாமல் இயற்றும்
பூசையாதலின் இவ்வாறு கூறினார். மானம் - பெருமை. அர்ச்சனை
- பூசை; வழிபாடு. "நீமொழிந்த ஆகமத்தின் இயல்பினாலுனை
யருச்சனை புரிய" (1129), "எய்த ஆகம விதியெலாஞ் செய்தாள்"
(1137) என்பன காண்க.

     ஒருகாலத்து - முன்பு இராதாதேவியாராலும், பின்பு
பார்வதியாராலும் அருச்சனை செய்யப்பட்டமையால் இவ்வாறு
கூறினார் என இங்கு விசேடவுரை காண்பர் ஆலாலசுந்தரம்
பிள்ளை; "முதிர மங்கை தவஞ்செய்த காலமே முன்பு மங்கை
தவஞ்செய்த காலமே" (திருவியமகம் - கச்சிஏகம்பம்) என்ற
ஆளுடைய பிள்ளையார் திருவாக்கையும் ஆதரவு காட்டுவர்.

     ஊனம் இல் அறம் அனேகமும் - "எல்லா அறமும்"
(1146), "முப்பதோடிரண்டறம் புரக்கும்" (1148) என்றபடி எல்லா
அறங்களையும் எப்போதும் அம்மையார் உயிர்களின் துன்ப
நீங்கும்படி செய்தருள்கின்றார் என்பது.

     உலகு உய்ய வைத்த - அறஞ்செய்வார் அச்செயற்குரிய
பயன்களை எய்துவர். இங்கு அம்மையார் அருட்கருவிருத்தி உலக
முய்யும்பொருட்டே அறங்களையும் சிவபூசையினையும் வைத்தனர்
என்பதாம். வைத்த - என்றும் நிலவும்படி அமைத்த.

     விளம்பில் - சொல்வோமாகில் என்று தொடங்கிக்கொண்டு
அச்சரிதத்தை 1129 முதல் 1148 வரை 20 திருப்பாட்டுக்களால்
கூறுகின்றார்.விளம்பில் - சொல்வோமாகில் என்ற வினையெச்சம்,
விளம்பிய அச்சரித முடிபாகிய "அறம்புரக்கும்" (1148) என்றதனோடு
முடிகின்றது. 49