1127. (வி-ரை.)
வெள்ளிமால்வரைக் கயிலை - உலகில்
உள்ள மலைகளுள்ளே பெரியதாகிய வெள்ளிமலையின் உயர்ந்த
கொடிமுடிகளுட் சிறந்து விளங்குவதாம் கயிலை என்பது. இதற்கு
நொடித்தான்மலை என்று பெயர் வழங்குவர். நொடித்தல் -
அழித்தல்; நொடித்தான் - அழித்தலைச் செய்தவன். "ஊழிதோ றூழி
முற்றும் முயர் பொன்னொடித் தான்மலை" என்ற ஆளுடையநம்பிகள்
தேவாரமும் காண்க. "பனிமால்வரை" (11) என்றவிடத் துரைத்தனவும்,
திருமலைச் சிறப்பில் உரைத்தனவும் பார்க்க. வெள்ளிமலையாகிய
கயிலை என்பாருமுண்டு.
வீற்றிருந் தருளுதலாவது
- ஆகமங்களை உபதேசம் செய்யும்
முறையில் ஆசாரியராகச் சுகாசனத்தில் நேரே எழுந்தருளியிருத்தல்.
அருள்செய -
உபதேசிக்க. "நீமொழிந்த ஆகமம்" (1129)
என்றது காண்க.
தெள்ளு வாய்மை
- இதுவே பொருள் என்று கண்டு
தெளிந்த உண்மை.
தெள்ளு வாய்மையின்
ஆகமத்திறன் எலாம் - "ஈசானஸ்
ஸர்வ வித்யானாம்" (வேதம்) என்றபடி எல்லாக் கலைகளுக்கும்
ஈசானனே முதல்வராவார். அவ்விறைவர் உயிர்களின்
பக்குவபேதத்துக்கேற்ப அனந்தபேதமான சாத்திரங்களையும்
சொல்லி யருளினர். அவற்றுள்ளே "வேதநூல் சைவநூல்
என்றிரண்டே நூல்கள்", "வேதமோ டாகமம் மெய்யா மிறைவனூல்"
என்று முடித்தனர் அறிந்தோர். அவ்விரண்டனுள்ளும் வேதம்
பொதுநூல். அது, அன்னம் பிரமம் - விஷ்ணுபிரமம் - என்பன
முதலாக உயிர்களின் திறத்துக்கேற்றவாறு பல படியும் கூறிச்
செல்லும் நூலாகும். ஆகமம், அவ்வாறன்றி
முடிந்த நிலையாகச்
சத்திநிபாதமுடையவர்களுக்குச் "சிவனே முழுமுதற் கடவுள்" என்று
தெளிந்த உண்மையினை எடுத்துக் கூறும். "சத்தி யப்பொருட்
டெளிவெலாஞ் சத்திநிபாதர்க், குய்த்து ணர்த்திய தாகம
மென்பர்நூ லுணர்ந்தோர்" என்ற திருவிளையாடற் புராணங் காண்க.
"வேதமென்னும் பாதவம் வளர்த்தனை - அதனிற்படுபயன்
பலவே.....ஓரும் வேதாந்தமென் றுச்சியிற் பழுத்த, ஆரா வின்ப
வருங்கனி பிழிந்து, சாரங் கொண்ட சைவசித்தாந்தத் தேனமுது"
என்று சுவைபடப் பாராட்டினர் குமரகுருபர சுவாமிகள்.
இவ்வாகமங்கள் 28 என்ப. அவற்றுள் (மகாசதாசிவமூர்த்தியின்
ஈசான முகத்தின் உள்ள) ஈசான முகத்தில் எட்டும், ஏனைத் தற்புருட
முதலிய நான்கு முகங்களினும் ஐயைந்தாக இருபதும் ஆக 28
ஆகமங்களும் வெளிப்பட்டன என்ப. இவற்றுள்ளே சிவபேதம்
பத்தும்,உருத்திரபேதம் பதினெட்டுமாம். சிவபேதம் பத்தையும்
ஒருவரிடத்தொருவராக மும்மூன்று பேராய் அணுசதா
சிவருட்டலைவராகிய பிரணவர் முதல் முப்பதின்மரும்,
உருத்திரபேதம் பதினெட்டையும் ஒருவரிடத்தொருவராக
ஒவ்வோராகமத்துக் கிவ்விரண்டு பேராக அநாதி ருத்திரர் முதல்
முப்பத்தறுவரும் இவ்வாறு அறுபத்தறுவர் இவ்வாகமங்களைக்
கேட்டனர் என்ப. "அஞ்சன மேனி யரிவையோர் பாகத்தன்,
அஞ்சொடிருபத்து மூன்றுள வாகமம், அஞ்சலி கூப்பி யறுபத்
தறுவரும், அஞ்சு முகத்திலரும்பொருள் கேட்டதே" (பாயிரம்
- 57) என்ற திருமூலர் திருமந்திரமும் காண்க. "அறுபத் தறுவர்
பிரணவ ராதி, அறிவுறக் கேட்டாரா கமம்" (சைவசமய நெறி 337).
திறன்எலாம் -
ஆகமங்கள், உபாகமங்கள் ஆகிய
எல்லாமும், முற்றும்மை தொக்கது. திறன் -
நெறி - வழி.
உள்ளவாறு -
ஐயந்திரிபறக் கேட்டனள் என்பதாம்.
உலகை ஆளுடையாள்
கேட்டருளினாள் - என்றதனால்
தம் பொருட்டன்றி உலகத்துயிர்களின் நன்மையின்பொருட்டுக்
கேட்டனர் என்பது குறிப்பு. கேட்டு அருளினாள் என்ற
குறிப்பும்
அது. இக்கருத்துப்பற்றியே உலகையாளுடையாளாதலின் கேட்டனள்
என்று உடம்பொடு புணர்த்தி ஓதியதும் என்க.
வெள்ளிமால்வரைக்
கயிலை - இமயமலை ஒரு காலத்துக்
கடலினுள்ளே இருந்தது என்றும், நில அண்டத்தி னகத்துள்ள
மிக்க வெப்பத்தின் செயல்களால் உளதாகும் நிலப்புரட்சியில்
மேற்கிளம்பியதென்றும், அது கடலகத்துள் இருந்ததற்குரிய
அடையாளங்கள் அதிற் காணப்படுகின்றன என்றும், மேற்குத்
தொடர்ச்சிமலை என்கிற (Western Ghats) மலைகள் இதனினும்
மிகப் பழைமையுடையன என்றும் நில நூலோர் கொள்கின்றனர்.
மேற்குத் தொடர்மலையின் ஒரு பகுதி கோயமுத்தூர்ச் சில்லாவின்
மேலைச் சிதம்பரம் என்னும் திருப்பேரூரின் (தேவார வைப்புத்தலம்)
மேற்கே வெள்ளிமலை என்ற பெயரால் இன்றும் வழங்கும் ஒரு
உயர்ந்த மலை உண்டு. அது கயிலாயமேயாம் என்று
பேரூர்ப்புராணம் எடுத்துரைக்கும்.
திறனெலாம் தெளிய
- என்பதும் பாடம். 50