1128.
|
எண்ணி
லாகம மியம்பிய விறைவர்தாம் விரும்பும்
உண்மை யாவது பூசனை யெனவுரைத் தருள
அண்ண லார்தமை யருச்சனை புரியவா தரித்தாள்
பெண்ணி னல்லவ ளாயின பெருந்தவக் கொழுந்து. 51 |
(இ-ள்.)
வெளிப்படை. எண்ணில் ஆகமங்களையெல்லாம்
சொல்லி யருளிய சிவபெருமான் தாம் விரும்புகின்ற உண்மையாவது
பூசனையேயாகும் என்று சொல்லியருள, (அதனைத் திருவுள்ளங்
கொண்டவராய்ப்) பெண்ணாகியவர்களுள் எல்லாம் நல்லவராய்ப்
பெருந்தவக் கொழுந்து போல்வராகிய உமையம்மையார்
அண்ணலாரைப் பூசை செய்வதற்கு விருப்பங் கொண்டனர்.
(வி-ரை.) எண்
நில் ஆகமம் - அளவுபடுத்தி நிறுத்தப்பட்ட
ஆகமங்கள்; மூலாகமங்கள் 28-ம், உபாகமங்கள் 207-ம் ஆகிய
இவை. மூலாகமங்கள் ஒவ்வொன்றும் அனேக கோடி
கிரந்தங்களையுடையன. "எண்ணி லிருபத்தெண்கோடி நூறாயிரம்"
(பாயிரம் - 58), "எண்ணி லெழுபது கோடி நூறாயிரம்" (மேற்படி
- 60) என்ற திருமூலர் திருமந்திரங்களில் எண்ணில் -
எண்ணிக்கையில் என்ற பொருளில் வந்தபடி இங்கும் அப்பொருள்
கொண்டுரைக்கப்பட்டது.
எண் நில்
- எண்ணத்தினுள் - கருத்தினுள்ளே - நிற்கத்
தக்க என்றுரைப்பினுமமையும். அனேக கோடி கிரந்தங்களை
உடைமையால் எண்ணில் எண்ணில்லாத என்ற
பொருள்பட
உரைத்தனர் என்பாருமுண்டு.
ஆகமம் -
ஆ - க - ம - என்றவை முறையே சத்தும்,
சதசத்தும், அசத்துமாகிய பதி பசு பாசம் என்ற முப்பொருள்களையும்
தெரிவிப்பன; எனவே முப்பொருள்களை நிச்சயஞ் செய்து காட்டி
உயிர்களை உய்விப்பன ஆகமம் என்பதாம்.
ஆதரித்தல்
- விரும்புதல். பெண்ணின் நல்லவள் - தமது
நாயகன் விரும்பியதனையே தாமும் விரும்பிச் செய்தல் பெண்மை
நலமுடையார்க்கு இலக்கணமாதலின், இறைவர், பூசனையே தாம்
விரும்புவது என்றுரைத்தருளத், தாமும் அவ்வாறு பூசித்தலையே
விரும்பினார் என்பதாயிற்று. இதுபற்றி இங்கு இத்தன்மையாற்
கூறினார்.
"ஆதரித்து வழிபடப்
பெற்ற" என்ற நம்பிகள் தேவாரங்
காண்க.
பெருந்தவக் கொழுந்து
- பெரிய தவத்தின் கொழுந்து
போல்வார் என்றது, தவத்தினின் விளைந்து இனியும் தவஞ்செய்து
முற்றும் நிலையும், மேலும் தவத்தை உலகத்தில் விளைவித்துத்தரும்
நிலையும் குறித்தது.
கேட்டருளினாள்
- என்றதனால் கற்றனர் என்பதும்,
உள்ளவாறு என்றதனாற் கசடற என்பதும்,
ஆகமத்திறனெலாம்
என்றதனால் கற்பவை என்பதும், அருச்சனை புரிய ஆதரித்தாள்
என்பதனால் அதற்குத்தகநிற்றல்
என்பதும் குறிப்பாற்
பெறப்பட்டமையும், "கற்றதனா லாய பயனென்கொல் வலாறிவ,
னற்றா டொழாஅ ரெனின்" என்றதும் காண்க.
"ஐம்பத்தோரக்கரி" என்றபடி ஐம்பத்தோரெழுத்
துருவமுடையவராய் விளங்கும் அம்மையார் விரும்பியவதனைச்
சொல்லும் இத்திருப்பாட்டு 51-வது பாட்டாக அமைந்த தெய்விக
அமைப்பும் காண்க. ஒலிக் கூட்டத்தினிலையினுள் (நாதத்தினுள்)
விளங்குபவர் சிவபெருமான் என்ற உண்மையும், எழுத்தறியும் பயன்
சிவபூசையே யென்ற உண்மையும் குறிப்பிற் பெறப்பட்டமையும்
காண்க. 661 உரை பார்க்க.
ஆகமம் அருளிய
- என்பதும் பாடம். 51
|