1129.

நங்கை யுண்ணிறை காதலை நோக்கி
     நாய கன்றிரு வுள்ளத்து மகிழ்ந்தே
யங்க ணெய்திய முறுவலுந் தோன்ற, "வடுத்த
     தென்கொனின் பா"லென வினவ,
"விங்கு நாத!நீ மொழிந்தவா கமத்தி
     னியல்பி னாலுனை யருச்சனை புரியப்
பொங்கு கின்றதென் னாசை"யென் றிறைஞ்சிப்
     போக மார்த்தபூண் முலையினாள் போற்ற,
52

     1129. (இ-ள்.) வெளிப்படை. நங்கையாருடைய உள்ளத்தில்
நிறைந்த விருப்பத்தினை நோக்கி, நாயகனார் தமது திருவுள்ளத்தில்
மகிழ்ச்சி கொண்டே, அங்கண் பொருந்திய புன்முறுவலும் தோன்ற
"உன்னுடைய உள்ளத்தினுள் பொருந்தியது என்ன?" என்று கேட்க,
"நாதரே! தேவரீர் இங்கு மொழிந்தருளிய ஆகமத்தின்
முறைமைப்படியே உம்மைப் பூசிக்க எனது ஆசை பொங்குகின்றது"
என்று சொல்லிப், போகமார்த்த பூண்முலையாராகிய அம்மையார்
வணங்கித் துதிக்க. 52
   

     1129. (வி-ரை.) நங்கை - பெண்ணினல்லாருக்கு வழங்கும்
சிறப்புப்பெயர். நாயகன் - தலைவன் என்றும், நங்கைக்கு நாயகன் -
கணவன் - என்றும் இருபொருளும் பட நின்றது.

     அங்கண் எய்திய முறுவல் - அங்கண்மையினால் -
அருளினால் - பொருந்திய புன்சிரிப்பு. அங்கண் - அவ்விடத்து -
அப்பொழுது என்றுரைத்தலுமாம்.

     நீ மொழிந்த ஆகமத்தின் இயல்பு - "ஆகமத் திறனெலாம்"
(1127) என்றது காண்க. இயல்பு - விதித்த முறைமை. இயல்பு -
சிவபூசை செய்தலே உயிர்களுக்கு அடுத்த இயற்கை - தன்மை; பிற
எல்லாம் மாறுபட்ட தன்மை என்பது குறிப்பு. வாயின் தன்மை
வாய்மை என்றதுபோல.

     என் ஆசை பொங்குகின்றது - பொங்குதல் - உள்
அடங்காது மேற்கிளம்புதல். மேன்மேலும் அதிகரித்தல்.

     போகமார்த்த பூண்முலையினாள் - "போகமார்த்த
பூண்முலையாள்" (திருநள்ளாறு - 1) என்ற ஆளுடையபிள்ளையாரது
தேவார ஆட்சி போற்றப்பட்டது காண்க. (1) சைவத்தின் முடிந்த
உண்மையாவது சிவபூசை என்று காட்டும் இந்த இடத்தில்
சைவத்தாபனத்துக்கு உதவிபுரிந்து உலகத்துக்கு எடுத்துக் காட்டிய
இத்திருப்பதிகத்தினை நினைவுகூர்தற்பொருட்டு இதனை
எடுத்தாண்டனர்; (2) அம்மையாரின் அருட்டிருமேனியாகிய
பெண்மையுருவக் குறிப்புப்பெறக் கூறியதும் கருத்து; (3) பரம் அபரம்
என்னும் இரண்டு ஞானநிலயங்களே அம்மையாரது இரண்டு
தனங்களாக உரைக்கப்படும். இந்த இருவகை ஞானங்களே சிவபோக
விளைவுதருவன என்பது குறிக்கவும் இங்கு இத்தன்மையாற் கூறினார்.

     முறுவல் - தமது உபதேசப்பயனை உலகத்துயிர்கள்
பறப்போகும் நிலையினுக்கு மகிழ்ந்தனர் என்ற குறிப்பும் காண்க.

     அருச்சனை புரிதல் - பூசித்தலுக்கு விதித்த எல்லா அங்கமும்
செய்தல். 52