1130.

தேவ தேவனு மதுதிரு வுள்ளஞ்
     செய்து "தென்றிசை மிக்கசெய் தவத்தால்;
யாவ ருந்தனை யடைவது, மண்மே
     லென்று முள்ளது காஞ்சி;மற் றதனுள்
மாவ மர்ந்தநம் மிருக்கையி லணைந்து
     மன்னு பூசனை மகிழ்ந்துசெய் வா"யென்
றேவ, வெம்பெரு மாட்டியும் பிரியா
     விசைவு கொண்டெழுந் தருளுதற்
                           கிசைந்தாள்.
53

     1130. (இ-ள்.) வெளிப்படை. தேவ தேவராகிய சிவபெருமானும் அதனைத் திருவுள்ளத்திற் கொண்டு, " தெற்குத் திசையானது செய்த மிக்க தவப்பயனால்,யாவரும் தன்னிடம் வந்து அடையத்தக்கதும்,
நிலவுலகத்தில் என்றும் அழியாது நிலைபெற்றிருப்பதும் காஞ்சிமா
நகரமாகும்;
அதனுள், மாமரத்தினடியில் நாம் விரும்பி
எழுந்தருளியிருக்கும் இருக்கையில் சென்று அணைந்து நிலைபெற்ற
பூசையினை மகிழ்ந்து செய்வாயாக!" என்று ஆணையிட்டருள,
எம்பெருமாட்டியும் நாயகரை விட்டுப்பிரியக்கூடாத நிலைமையில்
விடை கொண்டு அங்கு நின்றும் எழுந்தருளுவதற்கு உடன்பட்டனர்.
53
 

     1130. (வி-ரை.) தேவதேவன் - தேவர்களுக்கெல்லாம்
தலைவராகிய பெருந்தேவர் - சிவபெருமான். தேவர்கள்
இறந்து பிறக்கின்றவர்கள். தேவதேவராகிய இவர் இறவாதவர்;
பிறவாதவர்.

     தென்திசை செய் மிக்க புண்ணியம் என்க. "மாதவஞ்
செய்த தென்றிசை" (35) என்றவிடத் துரைத்தவை பார்க்க.
தென்றிசை தவஞ்செய்தமையால் அம்பிகை தன்னிடத்தமர்ந்து
காஞ்சியிற் றவஞ் செய்தருளப்பெற்றது.

     காஞ்சி - (1) க + அஞ்சி = - பிரமம்; அஞ்சுதல் -
விரும்புதல்; (2) - பிரமன்; பிரமதேவனால் விரும்பப்பட்டது.
"எம்மான் அயன்றனைப் படைத்து வேத, மோதுவித் தருளி
னோக்கி யுலகெலாம் படையென் றேவும், போதிது
பார்த்திவ்வாறு படையெனப் புகன்று வைத்தான், ஈதென லாகுங்
காஞ்சி" என்ற காஞ்சிப்புராணங் காண்க. (3) - தலை.
தலைமை பெற்றது. (4) க - அஞ்சி - பேரின்பந் தருவது; (5)
நிலமகட்குக் காஞ்சி என்னும் உந்தித்தானத்தை
ஒத்தது -
என்றிவ்வாறு காரணப்பொருள்கள்பலவும் பொருந்தப் பெயர்
வழங்கப்படுவது. காஞ்சிப்புராணம் - திருவேகம்பப்படலம் 34
- 35 - 36 பாட்டுக்கள் பார்க்க.

     மா அமர்ந்த நம் இருக்கை - மா - மாமரம். அமர்தல்
- விரும்புதல். "ஆயினவற் றுயர்காசி காஞ்சியெனு மிரண்டதிக
மறிவான் மிக்கோ, ராயினவை யிரண்டுள்ளுஞ் சாலநமக்
கினியநக ரணிநீர்க் காஞ்சி"
(காஞ்சிப்புரா - தழுவக் - 48)
என்றது காண்க. இருக்கை - எழுந்தருளியிருக்குமிடம். "மாவின்
மூலத்தில் வந்து தோன்றினார்" (1134),"மாவடி வைகுஞ் செவ்வேள்" (கந்தபுராணம்).

     இந்த மாமரம் நான்கு மறைகளின் உருவமுடையது.
நால்வகையான கனிகளைத் தருவது. இம்மரம் இன்றும்
நாம் கண்டு வணங்கத்தக்கதாய்த் தழைத்து ஓங்கி
விளங்குதல் நமது பேறேயாகும். வேதங்களே இந்த மாவாய்
ஓங்கியன என்பது "தாவ ரும்பழ மாமறை தம்பிரா னருளால்,
மேவ ருந்தனிச் சூதமாய்...ஓங்கிய தன்றே"
(திருவேகம்பப்படலம் - 4) என்ற காஞ்சிப்புராணத்தால்
அறியப்படும்.

     மன்னுபூசனை - "நின் பூசனை யென்றும் முடிவ
தில்லைநம் பால்" (1145) என்றபடி என்றைக்கும்
முடிதலில்லாது சத்தியமாய் நிகழும் பூசை.

     மன்னுதல் - நிலைபெறுதல். பூசிக்கும் உயிர்களும்,
பூசிக்கப்படும் இறைவனும் நித்தியர்கள். "என்றுநீ அன்றுநான்;
நின்னடிமை யல்லவோ?" (தாயுமானார்) என்றபடி முத்திநிலையிலும்
உயிர்கள் சிவனுக்கு அடிமை செய்வன. அவ்வாறு உயிர்கள்
நித்தியமாய் இறைவனைப் பூசித்து உய்யும்பொருட்டு இறைவியார்
தாம் நிலைத்தபூசையினைச் செய்கின்றார் என்பதும் குறிப்பு.
இப்பொருளில் மன்னு என்பதற்கு மன்னுவிக்கும் -
உயிர்களை நிலைபேறு பெறுவிக்கும் என்றுரைத்துக்கொள்க.

     பிரியா இசைவு கொண்டு - பிரியமாட்டாதவராயும்,
இறைவரது ஏவுதலின் படி கயிலையினின்றும் பிரிந்து
காஞ்சி செல்வதற்கு உடன்பட்டு, "தாழ்ந்துதாழ்ந்
தெழுந்துநின்று, கொம்பரி னொல்கிப் பல்காற் புறவிடை
கொண்டு" என்ற காஞ்சிபுராணமும் காண்க.

     எழுந்தருளுதற்கு - கயிலையினின்றும் செல்வதற்கு. 53