1132. துன்னு பல்லுயிர் வானவர் முதலாச்
     சூழ்ந்து டன்செலக் காஞ்சியி லணையத்
தன்னை நேர்வரும் பதுமமா நாகந்
     தம்பி ராட்டிதா டலைமிசை வைத்தே
"யன்னை யாயுல கனைத்தையு மீன்றா!
     யடிய னேனுறை பிலமத னிடையே
மன்னு கோயில்கொண் டருளுவா" யென்ன,
     மலைம டந்தைமற் றதற்கருள் புரிந்து,
55

     1132. (இ-ள்.) வெளிப்படை. நெருங்கிய பலவுயிர்களும்
தேவர்களும் முதலாகத் தம்மைச் சூழ்ந்துடன் செல்ல, அம்மையார்
காஞ்சியில் அணைய, ஒப்பற்ற பதுமன் என்னும் மாநாகமானது
தம்பெருமாட்டியின் திருவடிகளைத் தலையின்மேற் சூடிக்கொண்டு,
"உலகங்களை யெல்லாம் தாயேயாகி ஈன்றருளிய அம்மையே!
அடியேன் உறைகின்ற பிலத்தினிடை நிலைபெற்ற திருக்கோயில்
கொண்டு எழுந்தருளியிருக்கவேண்டும்" என்று வேண்ட,
அதற்கு அருள்புரிந்து இசைந்து, 55

     1132. (வி-ரை.) துன்னுபல் உயிர்.......உடன் செல - அவரது பூசையினாற் பயன்பெறும் உயிர்களின்மேல் வைத்த கருணையினைத்
திருவுள்ளத்துக் கொண்டே அம்மையார் போதுகின்றாராதலின்
அப்பயனைப் பெறும் பல உயிர்களும் உடன் போந்தன என்க.

     இதனைக் காஞ்சிப்புராணம் - தழுவக்குழைந்த படலம் -112 -
121 பாட்டுக்களிற் சிறப்பித்துக் கூறுதல் காண்க.

     பதும மாநாகம் - திசைக்கொன்றாக எட்டுத் திக்குக்களினும்
அமையும் பெரிய எட்டு நாகங்களுள் ஒன்று. அவை, வாசுகி -
அனந்தன்- தக்கன் - சங்கபாலன் - குளிகன் - பதுமன் -
காபதுமன் - கார்க்கோடகன் என்பன. அவற்றுள் பதுமன் என்ற
மாநாகம் காஞ்சியில் பிலத்தில் குடிகொண்டிருந்தது எனவும்,
அந்தப் பிலத்தில் எழுந்தருளியிருக்கும்படி அது அம்மையாரை
வேண்டிற்று எனவும் கொள்க. இந்தப் பிலம் திருக்காமக்
கோட்டத்தில் உள்ளது.

     மலைமடந்தை - கயிலையினின்றும் போந்த அம்மையார்
மலையரசனுக்கு மகளாராகி அவனுக்கு அருள்புரிந்து இங்கு
அணைகின்றார் என்ற குறிப்புப்பட இங்கு இப்பெயராற் கூறினார்.
பொன்மலைவல்லி என மேல்வரும் பாட்டிற் கூறிய கருத்துமிது.

     அன்னையாய் உலகனைத்தையும் ஈன்றாய்! என்றது
அவ்வுயிர்களின்மீது கொண்ட கருணையினால் அங்கு வந்தனர்
என்றும், அதனால் அவை தம்மைச் சூழ வந்தன என்றும்
குறிப்புப்பட உரைத்ததாம். உலகை ஈனுதலாவது
கருவறையிலகப்பட்டகண்ணில்லாக் குழவிபோல ஆணவத்தால்
அறிவிழந்து கேவலத்திற் கிடந்தவுயிர்களுக்குக் கலை முதலிய
மாயாகாரியங்களால் அறிவைத் தோற்றுவித்தல். "அம்மையோ
டப்பனாகி" (சித்தி - பாயி) உரை பார்க்க. மன்னுயிர் தழைப்ப
- (1133) என்ற கருத்துமது. உயிர்தழைத்தல் - உயிர்கள்
மலக்கட்டு நீங்கி அறிவு விரியப்பெறுதல்.

     அருள் புரிந்து - இசைந்து அந்தப் பிலத்திற்றங்கி என்க.
அருள்புரிந்து - கரு இருத்தி - விரும்பினள் - புரிவுசெய்தனள்
எனவரும் பாட்டுடன் கூட்டி முடித்துக் கொள்க.