1133. அங்கு மண்ணுல கத்துயிர் தழைப்ப
     வளவி லின்பத்தி னருட்கரு விருத்தித்
திங்க டங்கிய புரிசடை யார்க்குத்
     திருந்து பூசனை விரும்பினள் செய்ய,
வெங்கு நாடவுந், திருவிளை யாட்டா
     லேக மாமுத லெதிர்ப்படா தொழியப்
பொங்கு மாதவஞ் செய்துகாண் பதற்கே
     புரிவு செய்தனள் பொன்மலை வல்லி.   56

     1133. (இ-ள்.) வெளிப்படை. அவ்விடத்தில், இந்த
மண்ணுலகத்தில் உள்ள எல்லா உயிர்களும் தழைக்கும்பொருட்டு,
அளவில்லாத இன்பத்தினையுடைய அருளையே திருவுள்ளத்திற்
கொண்டு, சந்திரன் தங்கிய புரித்த சடையினராகிய
சிவபெருமானுக்குத்திருந்து பூசனைகளைச் செய்ய விரும்பினராகி,
(அவரது இருக்கையை) எவ்விடத்தும்தேடவும் ஒப்பற்ற
பெருமுதல்வராகிய சிவபெருமான், திருவிளையாட்டால், எதிர்ப்
படாது மறைந்திருக்கவே, பொங்கும் மாதவத்தினைத் செய்து
அவரைக் காண்பதற்கே, பொன்மலை வல்லியாராகிய
உமையம்மையார் விருப்பம்கொண்டனர். 56
   

     1133. (வி-ரை.) அங்கு - அந்தப்பிலத்தில்.மன்னுலகத்து
- உயிர்தழைப்ப
- தநு - கரண - புவன - போகங்களை
உயிர்கள் பெறக் கொடுத்தலால் அவை கன்மம் புசித்துச்
சிவனைப் பூசித்துப் பந்தநீங்கி இன்பமடைய.

     அளவுஇல் இன்பத்தின் அருள்கரு இருத்தி - அளவுஇல்
இன்பம்
- எல்லையில்லாத இன்பம். இன்பத்தின் அருள் -
இன்பந்தருதற் கமைந்த அருள். அருட்கரு - செயல்களெல்லாம்
உயிர்கள் மேல்வைத்த அருள்காரணமாக நிகழ்தலின் அது கரு
எனப்பட்டது. கரு - கருத்து என்ற பொருளில் வந்தது.

     செய்ய விரும்பினள் எங்கும் நாடவும் - என்க.
விரும்பினள் - விரும்பினளாகி - முற்றெச்சம். பூசித்தற்
பொருட்டு இறைவனது திருவுருவத்தை நாடவும் எனச்
செயப்படுபொருள் வருவிக்க. "மாவமர்ந்த நம் மிருக்கையில்
மகிழ்ந்து - பூசனை செய்வாய்" (1130) என்று இறைவர்
அருளினாராதலின் பூசை செய்ய அவரது திருவுருவத்தை
நாடினார் என்க. இவ்வாறன்றி அருட்கரு என்றது அருளைத்
தன்னிடத்தே கொண்ட சிவலிங்கமாகிய குறியென்று உரை
கொண்டு அருட்கரு விருத்தி அதனிற் பூசனைசெய்ய என்று
கூட்டி யுரைப்பாருமுண்டு.

     திருவிளையாட்டால் ஏகமாமுதல் எதிர்ப்படாது ஒழிய
- எதிர்ப்படா தொழிதல் - மறைந்திருத்தல்; எதிர்ப்படுதல்
என்பது விளங்குதல் என்ற பொருளில் வந்தது. ஏகமாமுதல் -
தனிப்பெரு முதல்வர்; தனித்தலைவர். மா - மாமரம் என்று
கொண்டு, ஏகம் -மா - முதல் - ஏகாம்பரநாதர் என்றலுமாம்.
திருவிளையாட்டு - தோன்றலும் மறைதலும் இறைவனது
திருவிளையாட்டுக்களேயாம் என்பது. அன்பரிடத்துச் சிவத்தை
விளங்க விளைவிக்கச்செய்வது; விளைஆட்டு.

     பொங்குமாதவம் செய்து காண்பதற்கு - இறைவன்
தவத்திற்கே யிரங்கி வெளிப்படுவர் என்று நூல்கள் கூறும்
உண்மை கருதியது. ஏகாரம் தேற்றம்.

     புரிவு செய்தல் - புரிதல் - விரும்புதல். இறைவனோடு
பிரிக்கப்படாத ஒன்றாகிய அருட்சத்தியாகிய அம்மையார்
வேறாகிப் பூசை செய்பவரும், அவர் பூசை ஏற்பவரும் ஆக
இரண்டாகி வெளிப்பட்டும், பின்னர் அம்மையார் தழுவ
வொன்றாகியும்காணுமாறு ஒருபொருளே ஒன்றாகவும்
இரண்டாகவும் காண்பது இத்தலத்து விஞ்சைகளுள் ஒன்றாம்
என்று காஞ்சிப்புராணம் சிறப்பித்துக் கூறும். "சத்தியு
ளாதியோர் தையல்பங்கன்" (ஆளுடையபிள்ளையார் - தேவா -
இராமனதீச்சரம்).

     அனைத்துயிர் தழைப்ப - என்பதும் பாடம். 56