1134.
|
நெஞ்ச
மீசனைக் காண்பதே விரும்பி
நிரந்த ரந்திரு வாக்கினி னிகழ்வ
தஞ்செ ழுத்துமே யாகவா ளுடைய
வம்மை செம்மலர்க் கைகுவித் திறைஞ்சித்
தஞ்ச மாகிய வருந்தவம் புரியத்
தரிப்ப ரேயவ டனிப்பெருங் கணவர்
வஞ்ச நீக்கிய மாவின் மூலத்தின்
வந்து தோன்றினார் மலைமகள் காண.
57 |
(இ-ள்.)
வெளிப்படை. ஆளுடைய அம்மையார் தமது
நெஞ்சம் இறைவனைக் காண்பதனையே விரும்பத்,
திருவாக்கினில் எப்பொழுதும் நிகழ்வது திருவைந்
தெழுத்துக்களேயாகச், செந்தாமரைபோலும் கைகளைக் குவித்து
வணங்கி, ஆதரவாகிய அரிய தவத்தினைச் செய்ய, அவரது
தனிப்பெருங் கணவர் தரிப்பரோ? தரியாதவராகிக் குற்றம் நீக்கிய
மாமரத்தினடியில் மலைமகளார் காணும்படி வந்து சிவலிங்கத்
திருமேனி தாங்கி வெளிப்பட்டனர்.
(வி-ரை.)
நெஞ்சம் - என்றதனால் மனமும், திருவாக்கு
என்றதனால் வாக்கும், கைகுவித்து என்றதனால் மெய்யும் ஆக
முக்கரணங்களின் ஒழுக்கமும் ஒன்றித்து நிகழும் தவம்கூறப்பட்டது.
வஞ்சம் - தோன்றாது மறைந்த வஞ்சம் என்றலுமாம். வஞ்சம்
-
பொய். பொய்ந்நீக்கிய உண்மை வடிவான என்றலும்பொருந்தும்.
வஞ்சம்
நீக்கிய மாவின் மூலம் - மா மாமரம். வேத
உருவாகிய மாமரமாதலின் ஆன்மாக்களின் குற்றம்போக்கியது
என்பார் வஞ்சம் நீக்கிய என்றார். வேதம்
பொதுவகையால்எல்லாத்
தெய்வங்களையும் கூறினும் சிறப்புவகையால் சிவபெருமானைத்
திருவுருத்திரத்தின் மூலம் தனது இருதயமாகிய மூலத்து
மறைத்து
வைத்திருக்கின்றது என்பர். மாவின்மூலம்
- மாமரத்தின் வேர் வேத
இருதயம் என்றதும்குறிப்பு. 1034, 1037-ல் உரைத்தவை பார்க்க.
ஆதலின் அவ்வாறுவேத மூலத்தில் மறைந்து திருவிளையாட்டால்
எதிர்ப்படாதொழிந்தஇறைவர்தவத்தின் மூலம் வந்து தோன்றினார்
என்ற குறிப்பும் காண்க. விரும்பி -
செயவெனெச்சத்திரிபு.
கை
குவித்தருளி - என்பதும் பாடம். 57
|