1135. கண்ட போதிலப் பெருந்தவப் பயனாங்
     கம்ப மேவிய தம்பெரு மானை
வண்டு லாங்குழற் கற்றைமுன் றாழ
     வணங்கி வந்தெழு மாசைமுன் பொங்கக்
கொண்ட காதலின் விருப்பள வின்றிக்
     குறித்த பூசனைக் கொள்கைமேற் கொண்டு
தொண்டை யங்கனி வாயுமை நங்கை
     தூய வர்ச்சனை தொடங்குதல் புரிவாள்,
58

     1135. (இ-ள்.) வெளிப்படை. அவ்வாறு தோன்றிடக்
கண்டபோது கோவைப்பழம் போன்ற அழகிய வாயினையுடைய
அம்மையார் தாம் செய்த பெருந்தவத்தின் பயனாகிய ஏகம்பத்தில்
பொருந்திய தமது பெருமானை, வண்டுகள் மொய்த்த வார்ந்து
கட்டிய கூந்தல் முன்னே தாழும்படி வணங்கி உள்ளே
வந்தெழுகின்ற ஆசையானது மேன்மேல் பொங்க, மேற்கொண்ட
பெருங்காதலினால் உளதாகும் விருப்பம் அளவில்லாததாகத், தாம்
குறித்த பூசனையின் கொள்கையினை மேற்கொண்டு, அந்தத் தூய
அர்ச்சனையைத் தொடங்குவாராகி, 58

     1135. (வி-ரை.) கண்டபோதில் - தோன்றிடக்கண்ட
அப்பொழுதில்.
 பெருந்தவப்பயனாம் - "மறைய நின்றுளன்
மாமணிச் சோதியான், உறவு கோனட் டுணர்வு கயிற்றினான்,
முறுக வாங்கிக் கடையமுன் னிற்குமே" (பொதுக்குறுந்தொகை)
என்ற அப்பர்சுவாமிகள்திருவாக்கின்படி பெருந்தவத்தின்
பயனாக வெளிப்பட்டருளினர் இறைவர் என்பது.

     கம்பம் - திருஏகம்பம். இறைவனது மாவடி இருக்கை.

     வண்டுலாங்குழற் கற்றை முன் தாழ வணங்கி
-பெண்களுக்குரிய விதிப்படி ஐந்தங்கங்களும் நிலந்தோய
(பஞ்சாங்க நமஸ்காரம்) வணங்கும்போது குழற்கற்றை
முன்னே தாழ்ந்தது என்க.

     ஆசை - காதல் - விருப்பம் என்பவை ஒன்றினொன்று
மேன்மேல் அதிகரிக்கு நிலைபற்றி 751-லும், பிறாண்டும்
முன்னுரைத்தவை பார்க்க.

     பூசனை கொள்கை - பூசை செய்யும் முயற்சியினை.கொள்கை
- கொள்ளுதல், கொள்கையினை. இரண்டனுருபு தொக்கது.

     புரிவாள் - கொம்பனார்கள் - அணைய - அடியிணை ஒதுங்கி
- மலர் கொய்தாள் - என மேல்வரும் பாட்டுடன் கூட்டி முடிக்க. 58