1136.
(வி-ரை.) ஆகமத்துண்மையே தலைநின்று -
ஆகமநெறியிலே உறைத்து நின்று.
அர்ச்சனை
புரிவதற்கு - அர்ச்சித்தலுக்காக, புரிவதற்குப்
- பூக்கொய்யப் - பூம்பிடகை கொண்டணைய என்க. அருச்சனை
புரிவதற்கு ஆன மலர் என்று கூட்டியுரைப்பதுமாம். அருச்சனை
- பூசை.
இயல்பில்வாழ்
திருச்சேடியர் - அம்மையாருடன்வந்ததனால்
தம்மியல்பாலே வாழ்வடைந்து நின்ற சேடியர்
- தோழியர். இவர்கள்
அநிந்திதை - கமலினி என்ற இருவர்களும்,இலக்குமி, சரசுவதி,
இந்திராணி முதலியோரும் ஆவர்.
பூம்பிடகை
- திருப்பூங்கூடை. (மூன்று கூடைகளில்
நிரப்பிவைத்த காரணத்தால் புத்தனது நூல்களுக்குத்
திரிபிடகம்என்ற பெயர் வழங்குவது காண்க.)
அடியிணை
ஒதுங்கி - தளிரடிகளானதால் மெல்ல நடந்து
என்க. சிறு கற்களுக்கு ஒதுங்கி என்பாருமுண்டு.
அம்பிகா
வனம் - அம்மையார் தாமே உளதாக்கிய
நந்தனவனம் ஆதலின் இப்பெயர்பெற்றது. சிவபூசைக்குத் தாமே
நந்தனவனமமைத்தும், அதில் தாமே ஏற்ற பூக்களைக் கொய்தும்
பூசித்தல் வேண்டும் என்பது சிறந்த விதி. அம்பிகை பூக்கொய்யப்
பேறுபெற்றதனால் இப்பெயர் பெற்றதென்றலுமாம்.
ஆன
- உண்டாயின என்க. ஆன - சிவபூசைக்கான
- ஏற்ற - விதித்த - என்றலுமாம்.
ஆன
- தூ - நறும் - புது - மலர் என்ற நான்கு
அடைமொழிகளாலும் பூசைக்கு அம்மையார் எடுத்த மலர்களின்
சிறப்பைக் கூறினார். மலர்கள் நான்கு வகைப்படுதலும் குறிப்பு.
இவைபற்றி முருக நாயனார் புராணத்திலுரைத்தவை நினைவுகூர்க.59