1137. |
கொய்த
பன்மலர் கம்பைமா நதியிற்
குலவு மஞ்சன நிலவுமெய்ப் பூச்சு
நெய்த ருங்கொழுந் தூபதீ பங்கள்
நிறைந்த சிந்தையி னீடிய வன்பின்
மெய்த ரும்படி வேண்டின வெல்லாம்
வேண்டும் போதினி லுதவமெய்ப் பூசை
யெய்த வாகம விதியெலாஞ் செய்தா
ளுயிர்க ளியாவையு மீன்றவெம் பிராட்டி. 60 |
(இ-ள்.)
வெளிப்படை. கொய்த பல மலர்களும், கம்பைமா
நதியினது நீரினால் குலவும் திருமஞ்சன நீரும், நிலவும்
மெய்ப்பூச்சும், நெய்யினையுடைய செழிய தூபதீபங்களும், முதலாக ஆசை நிறைவாகிய சிந்தையில்
நீடிப் பெருகும் அன்புடன்
உண்மையான பூசைப் படித்தரங்களுக்கு வேண்டிய சாதனங்களை
யெல்லாம் அம்மையார் வேண்டியபோது சேடியர்கள் எடுத்து ஏந்த,
மெய்ம்மையான பூசையினைப் பொருந்த ஆகமங்களில் விதித்த
எல்லாவற்றையும், உலகங்களை யெல்லாம் பெற்றெடுத்த
எம்பிராட்டியார் வழுவாமற் செய்தனர்.
(வி-ரை.)
கொய்த - முன்பாட்டிற் கூறியபடி கொய்த.
விதிப்படி கொய்த என்பது குறிப்பு.
மலர்
- மஞ்சனம் - மெய்ப்பூச்சு - தூப - தீபங்கள் -
என்ற இவை ஐந்தும் சிவ பூசைக்கு இன்றியமையாத சாதனங்கள்
என்பது குறிக்க இவற்றை எடுத்து விதந்தோதினார். "நறைமலிதரு மளறொடுமுகை நகுமலர்புகை
மிகுவளரொளி, நிறைபுனல்
கொடுதனைநினை வொடுநியதமும் வழிபடு மடியவர்" (நட்டபாடை -
சிவபுரம் - 4 - ஆளுடையபிள்ளையார்.) இவற்றுள் மூன்றை விடுத்து
இரண்டு கூட்டிப் "பத்திரம் புஷ்பம் பலம் தோயம்" என்பர் வடவர்.
"புண்ணியஞ் செய்வார்க்குப் பூவுண்டு நீருண்டு" என்று இதனை
இன்னுஞ் சுருக்கி யமைத்துக்காட்டினர் திருமூலதேவ நாயனார்.
கம்பைமா
நதியிற் குலவுமஞ்சனம் - கம்பையாறு -
காஞ்சிபுரத்தின் ஆறு. இப்பொது அது நிலத்தின்கீழ் ஓடுவதென்பர்.
ஆற்றுநீர் திருமஞ்சனத்திற்குச் சிறந்தது; ஆதலின் நதியிற்
குலவு
என்றார். மஞ்சனம் - திருமேனியாட்டுதற்குரிய
நீர். "கம்பைக்
கரையே கம்பம்" (இந்தளம் - 5 - ஆளுடையபிள்ளையார்.)
நிலவு
மெய்ப்பூச்சு - மெய்ப்பூச்சு - சந்தனம்; மரபு வழக்கு.
நிலவு - என்றது திருமேனியிற் பொருந்தி நிறைதல் குறித்தது.
நெய்தரும்
கொழும் தூப தீபங்கள் - நெய்தரும் தூபம்
- நெய்தரும் தீபம் என்று தனித்தனி இயைக்க. நெய்தரும்
தூபமாவது குங்கிலியம் முதலியவற்றோடு நெய்யினையும்
கூட்டியமைக்கும் தூபப் புகைப்பண்டம். கொழும் தீபம் -
செழிப்பான ஒளிவிடும் தீபம். நெய்விளக்குக்குச் சிறப்பாயுரிய ஒளி
குறித்தது. "விளக்கினாற் பெற்ற வின்ப மெழுக்கினார் பதிற்றி யாகுந்,
துளக்கினன் மலர்தொ டுத்தாற் றூயவிண் ணேற லாகும்,
விளக்கிட்டார் பேறு சொல்லின் மெய்ந்நெறி ஞானமாகும்,
அளப்பில கீதஞ் சொன்னார்க் கடிகடா மருளு மாறே" (தனித்திரு
நேரிசை) என்று அப்பர்சுவாமிகள்இவற்றின் பயனை நன்கெடுத்
தருளியிருத்தல் காண்க.
நிறைந்த
சிந்தையில் நீடிய அன்பு - சிந்தையின் நிறைவும்
அன்பின் பெருக்கும் சிவபூசைக்கு மூலாதாரமாய் டிப்படையாகியவை.
மெய்தரும் படி - படி - பூசைப் படித்தரம்.
வேண்டும் போதினில்
உதவ - பூசைச் சாதனங்களை உரிய காலத்தில் உரியவகையில்
எடுத்தேந்த. உதவுதல் - எடுத்து ஏந்துதல். உதவ என்பதற்குச்சேடியர்
என்ற எழுவாய் வருவிக்க.
ஆகமவிதி யெலாம்
எய்தச் செய்தாள். மெய்தரும் -
ஆகமங்களில் விதித்த என்றலுமாம். 60
|