1138. |
கரந்த
ரும்பய னிதுவென வுணர்ந்து
கம்ப மேவிய வும்பர்நா யகர்பா
னிரந்த காதல்செ யுள்ளத்த ளாகி
நீடு நன்மைக ளியாவையும் பெருக
வரந்த ரும்பொரு ளாமலை வல்லி
மாறி லாவகை மலர்ந்தபே ரன்பாற்
சிரம்ப ணிந்தெழு பூசைநா டோறுந்
திருவு ளங்கொளப் பெருகிய தன்றே. 61
|
(இ-ள்.)
வெளிப்படை. உயிர்களுக்கு வரம் கொடுக்கும்
பொருளாகிய மலை வல்லியார், கைகளைப் பெற்றதனாலுண்டாகிய
பயன் சிவபூசை செய்தலேயாகும் என்று உணர்ந்து,
திருஏகாம்பரத்தில் எழுந்தருளிய தேவதேவரிடத்துப் பரந்த
விருப்பத்தைச் செய்கின்ற திருவுள்ளத்தினை உடையவராகி, நீடும்
நன்மைகள் எல்லாம் பெருக, ஒப்பற்ற வகை விரிந்தெழுந்த
பேரன்பினால், தலையினால் வணங்கி எழுந்து செய்கின்ற பூசை
நாள்தோறும் சிவபெருமானது திருவுள்ளத்துக்கு ஏற்கும்படி அன்றே
பெருகியது.
(வி-ரை.)
கரம் தரும் பயன் இது - உயிர்களுக்கு இறைவன் கைகளைத் தந்தது சிவபூசை
செய்து தம்மை அடையும்
பொருட்டேயாம் என்பது துணிபு. "வாழ்த்த வாயும் நினைக்க
மடநெஞ்சும், தாழ்த்தச் சென்னியும் தந்த தலைவன்", "வணங்கத்
தலைவைத்து வார்கழல்வாய் வாழ்த்த வைத்து", "கண்ணாரக் கண்டு
மென் கையாரக் கூப்பியும்", "கடி மாமலர்
தூவிநின்று....கைகாள்
கூப்பித் தொழீர்" முதலிய திருவாக்குக்கள் காண்க.
"தேடித்தொழாதகை மண்திணிந்த, கல்லாம்" (பொன் - அந் - 2)
என்று இதனை எதிர்மறை முகத்தால் வற்புறுத்தியருளினார் எங்கள்
கழறிற்றறிவார் நாயனார்.
இது
- சிவபூசை செய்தல். உணர்ந்து
- தெளிந்த உணர்ச்சியிற்
கொண்டு
நிரந்த
காதல் உள்ளத்தளாகி - படிமுறையால் மேல் மேல்
வளர்ந்த அன்பு.
நீடு
நன்மைகள் யாவையும் பெருகச் - சிரம்பணிந்தெழு
பூசை என்று கூட்டுக. அம்மையார் செய்த பூசையின்
குறிக்கோளாவது உயிர்கள் எவைக்கும் நீடு நன்மைகள் எல்லாம்
பெருகுவதேயாகும் என்பதாம். "உலகை யாளுடையாள்" (1127),
"பெண்ணினல்லவள்" (1128), "போகமார்த்த பூண்முலையினாள்"
(1129), "உலகனைத்தையு மீன்றாள்" (1132), "மன்னுலகத் துயிர்
தழைப்ப" (1133), "உயிர்கள் யாவையும் ஈன்ற எம்பிராட்டி" (1137),
என்று முன் கூறியவை எல்லாம் இக்கருத்தை வற்புறுத்துவன என்க.
நீடு
நன்மைகள் - சிவனையடையும் தன்மை செய்வன
- தருவன. பெருக உயிர்களுக்கு வரம் தரும் எனக்
கூட்டியுரைப்பாரும் உண்டு.
வரந்தரும்
பொருளாம் மலைவல்லி - உயிர்களுக்கு
என்பது வருவித்துரைக்க. வரமாவது - உயிர்கள்
சிவபெருமானை
அடைந்து இன்பமுறச் செய்தல். அம்மையார் மாயாசத்தியை
யுடையராதலின் அது கொண்டு உயிர்களுக்கு ஏற்ற உடம்பும்
கரணங்களும் தந்து, அவை இறைவனை அறிந்து பூசித்து,
அவைகளும் அவரை அனுபவித்து இன்பமடையும்படி செய்கின்றார்.
அம்மையாரும் உயிர்களும் இறைவனை அனுபவிக்கும் நாயகிக
ளாவர். இறைவன் ஆன்ம நாயகன். உயிர்கள் நாயகிகளாக
இன்பமனுபவிக்கச் செய்விப்பவர் அம்மையாரே யாவர் என்பது
கருத்து.
மாறிலாவகை
மலர்ந்த பேரன்பு - மாறு - ஒப்பு. "மாறிலா
மகிழ்ச்சியின் மலர்ந்தார்" (252) என்றது காண்க. அன்பு மலர்ந்தபின்
மாறுதலின்றி அதிக மணம் செய்யும் என்ற குறிப்பும் காண்க. கரம்
தரும் பயன் இது என உணர்தலும், யாவரும் நன்மையடையும்படி
எண்ணுதலும், ஒப்பற்று மேன்மேல் வளரும் அன்புடைமையும்
பூசைக்கு இன்றியமையாதன. அன்பு மலர்தலாவது விரிந்து மேன்மேற்
பெருகுதல். 61
|