1139.
|
நாத
ரும்பெரு விருப்பொடு நயந்து
நங்கை யர்ச்சனை செய்யுமப் பொழுதிற்
காதல் மிக்கதோர் திருவிளை யாட்டிற்
கனங்கு ழைக்கருள் புரிந்திட வேண்டி
யோத மார்கட லேழுமொன் றாகி
யோங்கி வானமு முட்படப் பரந்து
மீது செல்வது போல்வரக் கம்பை
வெள்ள மாந்திரு வுள்ளமுஞ் செய்தார். 62 |
(இ-ள்.)
வெளிப்படை.
பெரிய விருப்பத்தோடு மகிழ்ந்து
நங்கையார் தம்மைப் பூசை செய்யும் அப்பொழுது, ஏகம்பநாதரும் அவரிடத்துக் காதல் உடையதொரு
திருவிளையாட்டின் மூலம்
கனத்த குழைகளை அணிந்த அவர்க்கு அருள் செய்யும்பொருட்டு,
ஓதப்பெருக்குடைய ஏழுகடல்களும் ஒன்றாகப் பொங்கி வானமும்
உள்ளடங்குமாறு மேலே உயர்ந்து செல்வது போலக் கம்பையாற்றில்
வெள்ளம் பெருகி வருமாறு திருவுள்ளஞ் செய்தருளினார்.
(வி-ரை.)
பெருவியப்பொடு நயந்து - என மீண்டுமுரைத்தது
உள்ளன்பின் இன்றியமையாத சிறப்பினை வற்புறுத்தும் பொருட்டு.
நங்கை
- நாதர் - நங்கை - நாயகன் (1129) என்றவிடத்
துரைத்தவை பார்க்க.
திருவிளையாட்டில்
அருள்புரிந்திட வேண்டி - என்று
கூட்டுக. இல் - ஆல் என்ற மூன்றனுருபுப் பொருளில் வந்த உருபு
மயக்கம். விளையாட்டின் மூலம் என்க. "ஆட்பாலவர்க் கருளும்
வண்ணமும் ஆதிமாண்பும், கேட்பான்புகில் அளவில்லை
கிளக்கவேண்டா" (திருப்பாசுரம் - 4) என்று ஆளுடைய பிள்ளையார்
ஆணையிட்டருளியபடி இறைவன் அருள்புரியும் வகை
இன்னதென்பதுஎவர்க்கும் தெரிய வராது. இங்கு அம்மையாருக்கு ஒரு
திருவிளையாட்டின் மூலம் அருள்புரியத் திருவுள்ளங் கொண்டனர்
என்க.
திருவுள்ளமும்
செய்தார் - திருவிளையாட்டில் அருள்புரிய
வுள்ளஞ் செய்ததனால் வெள்ளமாம் திருவுள்ளமும் என உம்மை
சிறப்பும்மை.
காதன்மிக்க
ஓர் திருவிளையாட்டில் - என்றது
அவ்விளையாட்டு அம்மையாருக்கு அருள்புரிவதாகவும், அவர்பால்
தாம் கொண்டுள்ள காதலின் மிகுந்ததாகவும் உள்ளதென்பது.
ஆறுபெருக அம்மையார் தம்மைத் தழுவிக்கொள்ளுமாறு
செய்வதனைக் காதன்மிக்க என்றார். ஓர்
- ஒப்பற்ற - தனித்த
என்க. "விழைந்த கொள்கையினார்" (1141), "வளைத்தழும்புடன்
முலைச்சுவ டணிந்தார்" (1143) என்று பின்னர்க் கூறுவனவுங் காண்க.
ஆனால் இதனைப்
பசுக்களாகிய தேவர் முதலியோர் கொள்ளும்
பாசத் தொடர்பாகிய காதலோடொக்க எண்ணி இடர்ப்படுதல்
சிவாபராதமாம். என்னை? இக்காதல் உயிர்களை ஈடேற்றும் பாருட்டே
சத்தியுடன்கூடி நிற்கும் தத்துவ நிலையினையே குறிப்பதாம். இதன்
விளைவினை "உம்ப ரேமுதல் யோனிக ளெல்லாம் உயிரும்
யாக்கையும் உருகியொன் றாகி" (1142) எனப்பின்னர் ஆசிரியர்.
எடுத்துக் காட்டுவதும் காண்க."உலகறியத் தீவேளா தொழிந்தனனேல்
உலகனைத்துங், கலைநவின்ற பொருள்களெல்லாங் கலங்கிடுங்காண்
சாழலோ", "பெண்பாலுகந்திலனேற்
பேதா யிருநிலத்தோர், விண்பாலி
யோகெய்தி வீடுவர் காண் சாழலோ" என்று மணிவாசகப்பெருமானார்
அறிவுறுத்தியருளியவையுங் காண்க. உயிர்கள் காதல் கொள்வது
தாந்தாம் உய்வதன் பொருட்டும், இறைவன் காதல்மிக்கவோர்
திருவிளையாட்டினை மேற்கொள்வது உயிர்களின் பொருட்டும் என
அறிக.
ஓதமாகடல்
- என்பதும் பாடம். 62
|