1140. அண்ண லாரருள் வெள்ளத்தை நோக்கி
     யங்க யற்கண்ணி தம்பெரு மான்மேல்,
விண்ணெ லாங்கொள வரும்பெரு வெள்ள
     மீது வந்துறு மெனவெருக் கொண்டே
உண்ணி லாவிய பதைப்புறு காத
     லுடன்றிருக் கையாற் றடுத்துநில் லாமை
தண்ணி லாமலர் வேணியி னாரைத்
     தழுவிக் கொண்டன டன்னையே யொப்பாள்.
63

     (இ-ள்.) வெளிப்படை. பெருமையுடைய பெருமானார் அருளிய
வெள்ளத்தை அழகிய கயல்போலும் கண்களையுடைய அம்மையார்
நோக்கி, வானமும் உட்பட மேல் வளர்ந்துவரும் பெருவெள்ளமானது
மேல்வந்து அடரும் எனப்பயந்தே, தமது திருவுள்ளத்திற் பொருந்திய
பதைப்புடன் கூடிய காதலோடு, திருக்கையினால் அதனை
மேல்வராதபடி தடுக்கவும் அது நில்லாதபடியால், தமக்குத்தாமே
ஒப்பாராயின அம்மையார் குளிர்ந்த சந்திரன் மலர்தற்கிடமாகிய
சடையுடைய இறைவரைத் தழுவிக்கொண்டனர்.

     (வி-ரை.) அருள் வெள்ளம் - அருளிய வெள்ளம் எனவும்,
அருளாகிய வெள்ளம் எனவும் பொருள்பட நின்றது.

     அங்கயற்கண்ணி நோக்கி என்க. நோக்குதல் -ஊன்றிப்
பார்த்தல். இது கண்ணின் செயலாதலின் அங்கயற்கண்ணி என்ற
சிறப்பாற் கூறினார். இதனால் அவர் நோக்கியது, மீன் தன்
சினைகளின்மேற் கருணை நோக்கம் வைத்து அவற்றை
முட்டையாகியசிறைகளினின்றும் விடுவிப்பது போல, இங்கு
உயிர்களை வீடு செய்தலினை உட்கொண்டதாம் என்பதும்
குறித்தபடியாயிற்று.

     மீதுறும் என்ன - தாம் பூசிக்கும் இறைவரது திருமேனியின்மீது
பொருந்தி அடர்த்துச் செல்லும் என்று எண்ணி.

     வெருக்கொள்ளுதல் பயமுடையராதல். இவ்வாறுஅம்மையாரை
வெருட்டுதற்காகவே இறைவனார் திருவிளையாடல் செய்தனர்
என்பதனை, "வெள்ளங்காட்டி வெருட்டிட வஞ்சி வெருவி யோடித்
தழுவ வெளிப்பட்ட, கள்ளக் கம்பனை" (தக்கேசி - 10) என்று
ஆளுடையநம்பிகள் இத்தலத்தேவாரத்தில் அறிவுறுத்தியது காண்க.

     உள் நிலாவிய பதைப்புறு காதலுடன் - பூசையின் வைத்த
காதல் முன் கூறப்பட்டது. அக்காதலே இப்போதுபதைப்புற்றதற்கும்,
தழுவிக்
கொண்டதற்கும் காரணமாயிற்றென்பது.

     தன்னையே ஒப்பாள் - "பெண்ணினல்லவள்" (1128); மேலும்
இறைவர் தனக்குவமை யில்லாத தலைவராதலால் அவரதுதேவியாரும்
ஒப்பாரும் மிக்காரும் இல்லாத தலைவியாவார்என்பதாம்.தன்னையே
ஒப்பாள்
என்பது சுட்டுப் பெயர்.

     தடுத்தும் நில்லாமை - வெள்ளத்தைக் கையினால் தடுத்த
செயல் தாம் உலக காரணமாகிய சத்தியுடையராதலால் தாமே
அதனைத் தடுத்து நிறுத்தும் ஆற்றலுடையார் என்ற கருத்து பற்றியது.
ஆனால் அது அதனால் தடைபட்டு நில்லாமை இறைவரது
அருளினாலாயது என்பார் அண்ணலார் அருள் வெள்ளம்
என்று முதலிற் கூறியது காண்க.

     தடுக்க நில்லாமை - என்பதும் பாடம். 63