1141. மலைக்கு லக்கொடி பரிவுறு பயத்தால்
     மாவின் மேவிய தேவர்நா யகரை
முலைக்கு வட்டொடு வளைக்கையா னெருக்கி
     முறுகு காதலா லிறுகிடத் தழுவச்
சிலைத்த னித்திரு நுதற்றிரு முலைக்குஞ்
     செந்த ளிர்க்கரங் களுக்குமெத் தெனவே
கொலைக்க ளிற்றுரி புனைந்ததம் மேனி
     குழைந்து காட்டினார் விழைந்த கொள்
                             கையினார்.
64

     (இ-ள்.) வெளிப்படை. மலையரசன் மகளாராகிய அம்மையார்
அன்பின் மிகுதியினால் கொண்ட பயத்தினால், மாமரத்தின்
மூலத்தில் முளைத்த தேவர் நாயகரை முலையாகிய மலையினோடு
வளையணிந்த கைகளினால் நெருக்கி முதிரும் ஆசையினால் இறுகத்
தழுவத், திருவிளையாட்டை விரும்பிய கொள்கையினையுடைய
சிவபெருமான், வில்போன்ற ஒப்பற்ற நுதலினையுடைய அவரது
திருத்தனங்களுக்கும், சிவந்த தளிர்போன்ற திருக்கரங்களுக்கும்
மெத்தென்றிருக்கும்படி, கொலைபுரியும் கொடிய யானையின்
தோலைப்போர்த்த தமது வலிய மேனியினைக் குழைந்து
காட்டினார்.

      (வி-ரை.) மலைக்குலக்கொடி - குலக்கொடி - குலம் -
நன்மையும் சிறப்பும் குறித்து நின்றது; சிறந்தகொடி. "குலமகள்"
முதலிய ஆட்சிகள் காண்க. கொடி - கொடி போன்றவர்.

     பரிவுறு பயத்தால் - பயத்திற்குக் காரணம் கூறியவாறு.மேலும் "முறுகு காதலால்" என்பது காண்க. முன்பாட்டில்"பதைப்புறு காதல்"
(1140) என்றதும் கருதுக. இச்செயல்களின் உண்டாகிய அன்பினை
வற்புறுத்தும்பொருட்டு மீண்டும் கூறியபடியாம்.

     முலைக்குவடு - முலையாகிய மலை; உருவகம். குவடு -
குவடுபோன்ற முலை என உவமத் தொகையாக உரைப்பினுமாம்.

     சிலைத்தனித் திருநுதல் - சிலைநுதல். சிலைபோன்ற
நூதலினையுடையார். அன்மொழித் தொகை. சிலைநுதலுடைமை
பெண்களின் பொது வியல்பாயினும் பெண்ணினல்லவளாகிய
அம்மையாரின் நுதல் ஒப்பில்லாத தனிச்சிறப்புடையதென்பதாம். சிவனது அருட்செல்வத்தை அளிப்பதென்பதும் குறிக்கத் தனி -
திரு-என்ற அடைமொழிகளை ஏற்குமாறு இடைப்பிறவரலாய்
வைத்தோதினார்.

     தளிர்க்கரங்கள் - பூசித்தற்பொருட்டுத் தளிர்களை
ஏந்தியபடியே நின்ற கரங்கள் என்ற குறிப்பும் காண்க.
செழுந்தளிர்
என்பது பாடமாயின் செழித்த என்க.

     மெத்தெனவே குழைந்து காட்டினார் என்று கூட்டுக.
மெத்தெனல் - கடினத் தன்மையின்றி மெதுவாயிருத்தல். ஏகாரம்
தேற்றம். அதன் பொருட்டே என்க.

      கொலைக் களிற்று உரி புனைந்த தம்மேனி -என்பதனால்,
யானையுரி வன்மையுடையது; அதனைப் போர்த்தலால் அவர் மேனி
அதனினும் வன்மையாயது; ஆயினும் அது வலிமை நீங்கி
மென்மையுடையதாக என்பதாம்.

      மேனியும் - என்று சிறப்பும்மை தொக்கதென்று
கொள்ளுதலுமாம்.

      விழைந்த கொள்கையினார் - மேனி குழைந்து
காட்டியதற்குக் காரணம் கூறியபடி. 64