1143. பூதி யாகிய புனிதநீ றாடிப்
     பொங்கு கங்கைதோய் முடிச்சடை புனைந்து
காதில் வெண்குழை கண்டிகை தாழக்
     கலந்த யோகத்தின் மருவிய கருத்தால்
ஆதி தேவனா ராயுமா தவஞ்செ
     யவ்வரங் கொலோ வகிலமீன் றளித்த
மாது மெய்ப்பயன் கொடுப்பவே கொண்டு
     வளைத்த ழும்புடன் முலைச்சுவ டணிந்தார்.
66

     (இ-ள்.) வெளிப்படை. சிறந்த செல்வமாகிய தூய
திருநீற்றினைத் திருமேனி நிறைய அணிந்து, பொங்கிவரும்
கங்கைநதி தோய்ந்த சடையினை முடியாகக் கட்டிக்கொண்டு,
காதில் வெள்ளிய சங்கக் குழையும் உருத்திராக்கக் கண்டிகையும்
தாழஅணிந்து, கூடிய யோகத்திற் (கூட்டத்திற்) கருத்து வைத்ததனால்
ஆதிதேவராகிய சிவபெருமான், அறிவோர்களால் ஆராயத்தக்க
மாதவம் செய்யும் அந்த மேன்மைதானோ? எல்லாவுலகங்களையும்
பெற்றெடுத்த அம்மையார் மெய்ப்பயன் கொடுப்பவே அதனைக்
கொண்டு அவரது திருமேனியின் அடையாளங்களாகிய
வளைத்தழும்புடன் முலைச்சுவடும் அணிந்து கொண்டனர்.

     (வி-ரை.) பூதி - விபூதி சிறந்த செல்வம். திருநீறே
எல்லாவற்றினும் சிறந்த செல்வமாகும். "பூதி : பூதிரைசுவரியம்
"என்பது வேதம். இறைவர் நீறணிந்ததனைப் "பஸ்மோத்தூளித
சர்வாங்கம்" என்று வேதம் துதிக்கும்.

     கடைமுடி புனைந்து - என்க. சடையினை முடியாக மேல்
முடித்துக்கட்டி.

     குழையும் கண்டிகையும் தாழ - என்க. எண்ணும்மைகள்
தொக்கன. காதிலும் உருத்திராக்கம் அணிவது உண்டு.தாழ அணிந்து
என்னும் பொருளைத் தருதலால் தாழ என்பதுஉபசார வழக்கு.

     வெண்குழை - சங்கக்குழை. தூய்மை குறித்தது. கண்டிகை
- கண்டத்தில் தரிப்பது.

     கலந்த யோகத்தின் மருவிய கருத்தால் மாதவம் செய்
அவ்வரம் - கலந்த யோகம்
- அம்மையாருடன் கூடியநிலை.
"இளங்கொம் பனாளோ டிணைந்தும் பிணைந்தும்"
(ஆளுடையபிள்ளையார் தேவாரம்) என்றபடி பிரிந்திருந்த தாம்,
முன்னர்க்கூடியிருந்த அக்கூட்டத்தினில் பொருந்திய கருத்தினால்
தவஞ்செய் என்க. தவஞ் செய்வதுபோ லிருந்தமைக்குக் காரணங்
கற்பித்தவாறு.

     ஆயுமாதவம் - அறிஞர் இத்தவக் கோலத்தின் காரணத்தை
ஆராய நின்றது என்க. இறைவனார் அளக்க வந்த மாதவம் என்று
கூட்டி யுரைத்தலுமாம்.

     நீறுபுசுதல் - சடைமுடி புனைதல் - குழையும் கண்டிகையும்
தாழ
அணிதல் - தனியிருத்தல் முதலிய இவை தவக்கோலங்கள். அம்மையார் தவஞ்செய்து அதன்பயனாக இறைவனைப் பெற்றுத்
தழுவிக்கொண்டனராக, அவ்வாறு தழுவப் பெறுவதற்கு
அப்பனாரும் தவம்செய்து அந்தப்பயன் பெற்றனரோ என்
சொல்லும்படி.

     அவ்வரங்கொலோ - ஓகாரம் ஐயப்பொருள் தந்து நின்றது.
வரம் - மேன்மை குறித்தது. "நங்கையென் னோற்றான் கொல்லோ
நம்பியைத் திளைத்தற் கென்பார், மங்கையை மணப்பா னென்னோ
வள்ளலு நோற்றா னென்பார்" (திருமண - 120) என்ற
திருவிளையாடற் புராணமும், இவ்வாறு வருவன பிறவும் காண்க.

     மெய்ப்பயன் - மெய் திருமேனி; திருமேனி தீண்டித்
தழுவும்பயன். மெய் - உண்மை; மாதவத்துக்குரிய உண்மையான
பயன்என்ற பொருள் குறிப்பதும் காண்க. உண்மைப் பயனாவது
-
இருவரும்கூடி உயிர்களுக்குச் செய்யும் திருவருள்.

     அணிந்தார் - அணியாக என்றைக்கும் மேற் கொண்டனர்.
"துடிகொணேரிடையாள் சுரிகுழன் மடந்தை துணைமுலைக்
கண்கடோய் சுவடு, போடிகொள்வான் றழலிற் புள்ளிபோ விரண்டு
பொங்கொளி தங்குமார் பின்னே" (அருட்பத்து - 5) என்ற
திருவாசகமும், "கொழும்பவளச் செங்கனிவாய்க் காமக்கோட்டி
கொங்கையிணை யமர்பொருது கோலங் கெண்ட தழும்புளவே"
(அதிகை - அடையாளத் திருத்தாண்டகம் - 10) என்ற தேவாரமும்
காண்க.

     "காமனை முனிந்து நெடுஞ்சடை தரித்துக் கவின்றகல்
லாடைமேற் புனைந்து, யாமெலாம் வழுத்துந் துறவியென் றிருந்து
மொருத்திதன் னிளமுலைச் சுவடு, தோமுறக் கொண்டா ரெனச்சிறை யிடல்போற் சுடர்மனக் குறையுளே கம்பத், தோமெனும் பொருளை யடக்கி யாநந்த முறுநர்வா ழிடம்பல வுளவால்" என்று காஞ்சிப்
புராணத்தே எமது மாதவச் சிவஞான யோகிகள் இக்கருத்தையே
அழகுற விரித்துப் புனைந்தமை இங்கு நினைவு கூர்க. 66