1144. கோதி லாவமு தனையவண் முலைக்குக்
     குழைந்த தம்மண வாளநற் கோலம்
மாது வாழவே காட்டிமு னின்று
     "வரங்கள் வேண்டுவ கொள்க"வென் றருள
வேத காரண ராயவே கம்பர்
     விரைம லர்ச்செய்ய தாமரைக் கழற்கீ
ழேத நீங்கிய பூசனை முடிந்த
     தின்மை தானறி விப்பதற் கிறைஞ்சி,
67

     1144. (இ-ள்.) வெளிப்படை. குற்றத்தை நீக்கும்
அமுதம்போன்ற அம்மையாரது திருமுலைக்குக் குழைந்த தமது நல்ல
மணவாளத் திருக்கோலத்தை அம்மையார் வாழவே காட்டி, முன்னே
நின்று, இறைவனார் "வேண்டுவனவாகிய வரங்களைக் கொள்க"
என்றருளிச் செய்யக், குற்றம்நீங்கிய பூசனை இன்னமும்
முடிந்திலாமையை அறிவிப்பதற்காக வேதகாரணராகிய
திருவேகம்பருடைய வாசனையுடைய செந்தாமரை போன்ற
திருவடிகளின்கீழ் வணங்கி, 67

     1144. (வி-ரை.) கோது இலா அமுது அனையவள் - அமுது
- ஒருவாறு சாதலை நீக்குவது. கோது - இங்கு இறத்தல்
பிறத்தல்களுக்குக் காரணமாகிய மூலமலங் குறித்து நின்றது. அமுது
என வாளா கூறின் அது உவமையாகாதென்பார் கோதிலா அமுது
என்றார். இலா - இல்லையாகச் செய்கின்ற. "பிறப்பொழிப்பாள்" என
இக்கருத்தையே 1146-ல் விரித்துக்கூறுதல் காண்க.

     மணவாள நல் கோலம் - கணவராகிய நல்ல கோலம். நல்
என்ற அடைமொழி இக்கோலங் கொண்டதனால் உயிர்கள் யாவையும் நன்மைபெற்று உய்யச் செய்வது குறித்தது.

     மாது வாழவே - மாது வாழ்தல் என்றது அவர் பெற்றெடுத்து வளர்க்கும் உயிர்கள் யாவையும் வாழும்பொருட்டுஎன்ற கருத்தினை
உள்அடக்கி நின்றது. "ஆகம விதியெலாஞ்செய்தா, ளுயிர்கள்யாவையு
மீன்றவெம் பிராட்டி" (1137) என்ற கருத்தும் காண்க.

     காட்டி முன்நின்று - சிவலிங்கத் திருமேனியினுள்
மறைந்துநின்ற நிலையினின்றும் வெளிப்பட்டுக் கயிலையில்வீற்றிருந்த
திருக்கோலத்தைக் காட்டி என்க. முன்னர் "வந்து தோன்றினார்"(1134)
என்ற சிவலிங்கத் திருமேனியைத்தோற்றுவித்தல் குறித்தது.

     ஏதம் நீங்கிய பூசனை- மந்திரம், சாதனம் முதலிய
எவ்வாற்றானும் குறைவின்றி நிகழும் பூசை.

     பூசனை முடிந்த தின்மைதான் அறிவிப்பதற்கு- நாதனார்
அருளியபடி வரங் கேட்பதற்குரிய காலம், பூசைமுடிநத்
நிலையாமாதலின் அம்முடிபு இன்னும்நிகழவில்லை என்று
அறிவிப்பதற்காக. வரங் கேட்க வேண்டில் பூசைமுடிபிற் கேட்டல்
வேண்டுமென்ற மரபினை உட்கொண்டு அதனை அறிவிக்க
என்பதாம். பூசையினிடையில்
கம்பையாறு பெருகவும், தாம்
இறைவரைத் தழுவவும், அவர் அதற்குக் குழைந்து வளைச்சுவடும்
முலைச்சுவடும் அணிந்த கோலங் கொண்டு தோன்றவும்
கூடியதனால் பூசனை முடியாது நின்றதென்பது.

     இறைஞ்சி - "வரங் கொள்க" என்றருளிய இறைவர்பால்,
வரங்கொள்ளாது மற்றும் இதனை அறிவிக்கப்புகுதலாலும்,
அவரறியாததொன்றைத் தாம் அறிவிக்கப் புகுதல்போல இது
நிற்குமாதலாலும், இறைவரிடத்தும் பெரியோரிடத்தும் எதனையும்
விண்ணப்பம் செய்யவேண்டில் வணங்கிப் பின் கூறுதல்
மரபாதலாலும் இறைஞ்சினார் என்க. பின்னரும் "அஞ்சி
அஞ்சலிகூப்பி" (1145) என்பது காண்க. 67