1145. |
அண்டர்
நாயக ரெதிர்நின்று கூறு
மளவினா லஞ்சி, யஞ்சலி கூப்பிக்,
"கொண்ட விற்றையென் பூசனை யின்னுங்
குறைநி ரம்பிடக் கொள்க"வென் றருள,
வண்டு வார்குழன் மலைமகள் கமல
வதன நோக்கி,யம் மலர்க்கணெற் றியின்மேல்
முண்ட நீற்றர்"நின் பூசனை யென்று
முடிவ தில்லைநம் பா"லென மொழிய, 68 |
1145. (இ-ள்.)
வெளிப்படை. தேவதேவருடைய எதிரேநின்று
சொல்கின்ற அளவினால், அஞ்சிக், கைகளைக் கூப்பிக்கொண்டு,
"தேவரீர் ஏற்றுக்கொண்ட, எனது இன்றையநாளின் பூசனையில்
இன்னும் எஞ்சிநின்ற பகுதியினையும் நிரம்பச் செய்வதனை
ஏற்றுக்கொள்ளுதல் வேண்டும்" என்று விண்ணப்பித்தருள,
வண்டுகள் மொய்த்த வார்குழலையுடைய மலைமகளின்
தாமரைபோன்ற திருமுகத்தைப் பார்த்து, அந்த மலர்போன்ற
கண்ணினையுடைய திருநெற்றியின்மேல் திரிபுண்டரமாகத் தரித்த
திருநீற்றினையுடைய பெருமானார் "நம்மிடத்து உனது பூசனை
என்றைக்கும் முடிவதில்லை" என்று மொழிய, 68
1145. (வி-ரை.)
எதிர்நின்று கூறும் அளவினால் அஞ்சி
- அவர் எதிரேநின்று வேறு மறுமொழி சொல்லப் புகுவதனால்
அஞ்சி.
கொண்ட
- ஏற்றுக்கொண்ட. இதுவரை செய்த பூசையின்
பகுதியை ஏற்றுக் கொண்டமை, அவர் கோலங்காட்டி
வெளிப்பட்டருளியதனாலும், வரங்கொள்க என்றருளியதனாலும்
அறியவந்தமையால் கொண்ட என்றார். இவ்வாறன்றி
கொண்ட
- நான் மேற்கொண்ட என்றுரைப்பினு மமையும்.
இன்னும்
குறைநிரம்பிடக் கொள்க - வரங் கேட்டுப்
பெறுதலினும், பூசை முட்டில்லாது நிறைவேறுவதனையே
பெரிதும் விரும்புவர் பெரியோர் என்ற குறிப்பும் காண்க.
நின்பூசனை
என்றும் முடிவது இல்லை நம்பால் - நீயும்
நானும் நித்தியர்கள்; நீ பெற்றெடுத்த உயிர்களின் வாழ்வு கருதிப்
பூசை செய்கின்றாய்; அந்த உயிர்களும் நித்தியர்கள்; அவர்களின்
பொருட்டு இப்பூசையின் பயனாய் நாமிருவரும் செய்யும் திருவருளும்
நித்தியமாய் நிகழ்வது; ஆதலின் உன் பூசையும் முடிவில்லாது
என்றைக்கும் நிகழத்தக்கது என்றபடி. இக்கருத்துப்பற்றியே
மேல்வரும் பாட்டில் இத்திருவருளினை ஏற்று, "மாறி லாதவிப்
பூசனை என்றும் மன்ன எம்பிரான் மகிழ்ந்துகொண் டருளி" என்று
அம்மையார் கேட்கும் வரங்களுள் முதலாவதாக இதனைக்
கேட்டருளியதும் காண்க.
குறை
நிரம்பிடக் கொள்ளுதலாவது பூசையின் எஞ்சிய
குறைப்பகுதி நிரம்புமாறு செய்து முடிக்க அதனை ஏற்றுக்
கொள்ளுதல். குறையாயிருத்தல் முற்றுப்பெற.
அம்மலர்க்கண்
நெற்றி - அந்தக் கமலம் போன்ற
கண்ணினையுடைய நெற்றி. நெற்றிக்கண் நெருப்பாதலாற் றாமரை
போன்ற சிவப்பு நிறமும், மேனோக்கிக் குவிந்திருத்தலால் தாமரை
போன்ற வடிவும் உடைமையால் அம்மலர்க்கண்
என்றார்.
மெய்யும் உருவும்பற்றி வந்த உவமம். "எரியாய தாமரைமே
லியங்கினாரும்" (தாண்டகம் - இடைமருது - 7) என்றது காண்க.
அந்தந் கமலம் என்று அகரம் முன்னறிசுட்டு. நோக்கிய
என்று
பெயரெச்சமாகக் கொண்டுரைப்பாருமுண்டு.
முண்டம்
- திரிபுண்டரமாகிய. "திருநீற்று முண்டத்தொளித்
தழைப்பு" (508) "முண்டவேதியர்" (547) "திருமுண்டம் தீட்டமாட்டாது
அஞ்சுவார்" (திருவாசகம் - அச்சப்பத்து - 9) முதலியவை காண்க.
அன்பினாலஞ்சி-
என்பதும் பாடம். 68
|