என்றும்
மன்ன- "என்றும் முடிவதில்லை" (1145) என
முன்னர் அருளினாராதலின் அவ்வாறு முடிவில்லாத இப்பூசனை
நிலைத்திருக்கும்படி என்க.
எம்பிரான்
- எம்பிரானே! அண்மை விளி. எம்பிரானே!-
தேவரீர் - கொண்டு அருளி - அருள் செய்யவேண்டும் என்று
கூட்டிமுடிக்க.
ஈறு
இலாத இப்பதி- "ஈறுசேர் பொழுதினு மிறுதி யின்றியே,
மாறிலா திருந்திடும் வளங்கொள் காஞ்சி" என்றுகந்தபுராண
முடையார் இச்சொல்லையும் பொருளையும் விரித்தமைத்த
ஆட்சியினையும்காண்க.
இப்பதியினுள்
எல்லா அறமும் யான் செயவேண்டும் -
உலக நாயகராகிய சிவபெருமானுடன் கூடித் தாம் நடத்தும்
இல்லறத்தினால் எல்லா உயிர்களையும் காத்தல் கடனாதலானும்,
உலகத்தில் இல்லற வாழ்வுடைய தம் மக்களுக்கு வழிகாட்டுதல்
தமது கடனாதலானும் இவ்வாறு வரங்கேட்டனர் என்ற குறிப்பும்
பெறப்படும். "மனையறம் பெருக்குங் கருணையினால்" (1148) என்றது
காண்க. "இல்வாழ்வா னென்பா னியல்புடைய மூவர்க்கு,நல்லாற்றி
னின்ற துணை", "துறந்தார்க்குந் துவ்வா தவர்க்கு மிறந்தார்க்கு,
மில்வாழ்வா னென்பான் றுணை", "தென்புலத்தார் தெய்வம்
விருந்தொக்க றானென்றாங், கைம்புலத்தாறோம்ப றலை" (திருக்குறள்)
என்று வரும் அறநூல் விதிகள் காண்க. இப்பதியினுள்-
முத்தித்தலங்களாகிய ஏழனுள்ளே சிறந்ததாகிய இந்தப் பதியினுள்
என்பது குறிப்பு.
செய்
வேறு வினை - என்க. வேறு -
நூல்களாலும்
ஆன்றோராசாரத்தானும் விதித்தவற்றுக்கு வேறாக - மாறாக.
திருவடிப்
பிழைத்தல் - சிவநிந்தை, அடியார் நிந்தை,
வேதசிவாகமநிந்தை முதலாயின. இவை சிவாபராதங்கள் எனப்படும்
தீர்வில்லாத குற்றங்களாகி, இவற்றைச் செய்தோரைத் தக்கன் போலத்
தலையிழத்தல் முதலிய கொடுந்தண்டனைகளுக்கும், கொடு
நரகவேதனைக்கும் உள்ளாக்கும் என்பது உண்மை நூற்றுணிபு.
இவை உய்தியில் குற்றமெனப்படும். ஆதலின் திருவடிப்
பிழைத்தலொழிய என்று இவற்றை விலக்கி, ஏனையவாகிய வேறு
செய்வினை என்றார். ஒழிய-
நீங்கலாக. "பிழைப்ப னாகிலுந்
திருவடிப் பிழையேன்" என்று ஆளுடைய நம்பிகள்
காட்டியருளியதும் காண்க.
வேறுவினை
வேண்டின செயினும்- என்று கூட்டுக.
வேண்டிய - விதிவிலக்குக்களை எண்ணாது தம்
கருத்துக்கிசைந்தவற்றையே செய்தாலும்.
மாதவப்பயன்
கொடுத்தருளப் பெறவும். "செய்வோர்
செய்திப் பயன் விளைக்கும்செய்" என்றபடி செய்வினைக்குத்
தக்கபயன் தருதல் என்பது வினைப்பகுதியின் பொது
நியதியேயாயினும், இப்பதியில் தேவரீரது அருள் விசேடத்தால்
செய்வினைகள் எத்தன்மையனவே யாயினும் எல்லா
வினைகளுக்கும் மாதவப் பயனையே கொடுத்தருள வேண்டுமென்றதாம்.
பிறப்பு
ஒழிப்பாள்- உயிர்களின் பிறப்பினை
ஒழிப்பவராகியவர். யாவர்க்கும் தாயாதலின் தமது பிள்ளைகளின்
பொருட்டு இவ்வாறுவரங் கேட்டருளினர் என்று குறிக்க
இத்தன்மையாற் கூறினார்.
இங்ஙனம் அம்மையார்
இறைவனிடத்து உயிர்களின்பொருட்டுக்
கேட்ட வரங்கள் மூன்றாகும் : அவை (1) தமது சிவபூசனை என்றும்
மன்ன, அதனை இறைவன் ஏற்றுக்கொண்டருளுதலும்; (2)
காஞ்சிப்பதியில் தாம் எல்லா அறங்களையும் செய்ய அருளுதலும்; (3) காஞ்சியில் வாழ்வோர்,
சிவாபராதம் நீங்கலாக, வேறு எவ்வினை
செய்யினும் மாதவப்பயன் கொடுத்தருளுதலும் என்பனவாம். 69