1147.
விடையின் மேலவர் மலைமகள் வேண்ட,
     விரும்பு பூசனை மேவிவீற் றிருந்தே,
யிடைய றாவறம் வளர்க்கும்வித் தாக
     விகப ரத்திரு நாழிநெல் லளித்துக்,
கடைய ராகியு முயர்ந்தவ ராயுங்
     காஞ்சி வாழ்பவர் தாஞ்செய்தீ வினையுந்
தடைப டாதுமெய்ந் நெறியடை வதற்காந்
     தவங்க ளாகவு முவந்தருள் செய்தார்.
 70

     (இ-ள்.) வெளிப்படை. மலைமகள் இவ்வாறு வேண்ட,
விடையினைஊர்ந்து வருபவராகிய சிவபெருமான் அவர் விரும்பிய
பூசனையின் கண்ணே பொருந்தி வீற்றிருந்து, அறங்களையெல்லாம்
எக்காலத்தும், இடையறாது வளர்க்கும் வித்தாக
இகபரங்களுக்குரித்தான இருநாழி நெல்லை அளித்துக்,
கடையவர்களாகியும் உயர்ந்தவராகியும் காஞ்சிமா நகரத்தில்
வாழ்கின்றவர்கள் செய்கின்ற தீவினைகளும் தடையின்றி
மெய்ந்நெறியினை அடைவதற்குத் துணைசெய்யும் மாதவங்களாகப்
பலிக்கவும் மகிழ்ந்து வரங்கொ
டுத்தருளினார்.

     (வி-ரை.) விரும்பு பூசனை மேவி வீற்றிருந்தே -
அம்மையார் விரும்பிச் செய்த பூசனையினுள் அமர்ந்து இருந்தே.
"முதிர்ந்த பற்று முற்றச்சூழ், கோள மதனினுண்ணிறைந்து குறித்த
பூசை கொள்கின்றார்" (சண்டீசர் - புரா - 36) என்றது காண்க.
இது அம்மையார் வேண்டிய முதலாவது வரத்தினை
அளித்தவகை.

     இடையறா....அளித்து - இது அம்மையார் வேண்டிய
இரண்டாவது வரத்தினை அளித்தவகை. எல்லா அறங்களையும் நான்
இப்பதியில் செய்தல் வேண்டும் எனக் கேட்டருளினாராதலின், எல்லா
அறங்களையும் வளர்த்தற்கு வித்தாக - மூலமாக - இரு நாழி
நெல்லை அளித்தனர் என்க. இகபரத்து இருநாழி -இகத்தைப்பற்றிய
அறங்களுக்கு ஒரு நாழியும், பரத்தைப்பற்றிய வறங்களுக்கு
ஒருநாழியும் ஆக இருநாழி நெல் அளித்தனர் என்பது. பரத்துக்குப்
படைப்பும், இகத்துக்கு உணவும் நெல்லினைக்கொண்டே
அமைதலால் எல்லா அறங்களையும் செய்தல் வேண்டிய
அம்மையார்க்கு அறவனார்நெல் அளித்தனர். வித்தினால் விளைவு
பெருகி யுணவாகி உலகங்காக்குமிதனை உணவின் வித்து என்னாது
அறம் வளர்க்கும் வித்து என்ற கருத்துமிது. உயிர்கள் உணவுண்டு
வாழ்வதெல்லாம் அறத்தின் பொருட்டே என்பதும்குறிப்பு.
"உனக்காண்டு தோறும், நல்வாய்மை யறம் வளர்க்கும் வித்தாநெல்
லிருநாழி தருகேமந்த, நெல்லாலே யிகபரத்து முயிர்ப் பைங்கூழ்
தழைகவென நிறுவல் செய்தார்" (தழுவக்குழைந்த படலம் - 426)
என்று காஞ்சிப்புராணம் இதனை விரித்துரைத்தது.

     கடையராகியும்....தவங்களாகவும்- இது அம்மையார்
வேண்டிய மூன்றாவது வரத்தினை அப்பனார் அளித்தவகை.
கடையராகியும் உயர்ந்தவராகியும் - கடைமையும், உயர்வும்
குலம், கல்வி, ஒழுக்கம், அறிவு முதலிய எல்லாவகையானும் கொள்க.
"நலமில ராக நலமதுண் டாக நாடவர் நாடறி கின்ற, குலமில ராகக்
குலமதுண் டாகத் தவம்புரி குலச்சிறை" (புறநீர்மை - திருவாலவாய் -
6) என்ற ஆளுடையபிள்ளையார் திருவாக்குக் காண்க.தாம்செய்யும்
தீவினையும்
- உம்மை, காஞ்சி வாழ்வோர் தீவினை செய்யார்;தவறி
ஒருவேளை செய்யநேரினும் என்பது குறித்தது. என்னை?
"தீயவென்பன கனவினு நினைவிலாச் சிந்தைத், தூய மாந்தர்வாழ்
தொண்டைநாட் டியல்பு" (1124) என நாடு முழுமைக்கும் கூறிய
பொதுவுரை, சிறப்பாகக் காஞ்சித்திருநகரத்தும் உரியதாகும். ஆயின்
காஞ்சி வாழ்பவர் தீவினை செய்யுமா றென்னையோ? எனின்,
மெய்ம்மறந்து செய்தல், பிறர்சார்புபற்றிச் செய்தல், தம் வசமிழந்து
செய்தல், சிவச்சார் பில்லாப் புறச் சமயத்தோர் - புறநாட்டினர்
இங்குவந்து செய்தல் முதலாயின நிகழ்தற் கிடமுண்டாமாதலின்,
அவர்கள்மேல் வைத்த கருணையினால் அத்தீவினையும் மாதவப்
பயன் றரவேண்டினர் என்க. "நன்றியில் சமயத்தினுள்ளோர்"
(திருஞான - புரா - 1084), "தேற்ற மில்சமண் சாக்கியத் திண்ணரிச்
செய்கை, யேற்ற தன்றென வெடுத்துரைப்பார்" (மேற்படி 1090)
என்றவை முதலியன இங்கு நினைவு கூர்தற்பாலன. "அருளப்பெறவும்"
(1146) என்ற உம்மையின் குறிப்பும் இது.

     தீவினையும் - மெய்ந்நெறி யடைவதற்கு ஆம்
தவங்களாகவும்
- தீவினை நல்வினையாகாது என்ற நியதி
பிழையாமல் மெய்ந்நெறி யடைவதற்காக முயலும் சாதனமாகிய
தவங்களாயின என்க.

     விடையின் மேலவர் - "விடையின்மேல் வருவானை"(சீகாமரம்
-வன்பார்த்தான் பனங்காட்டூர் - 1) என்ற ஆளுடைய நம்பிகள்
தேவாரம் இங்கு நினைவுகூர்தற்பாலது. வரந்தர வருவார் இறைவர்
விடையினை ஊர்ந்துவந்தனர் என்ற குறிப்புமாம். அறந்தர வருவார்
அறவுருவாகிய விடையின்மேல் வந்தார் என்ற குறிப்புமாம்.

     முன் பாட்டிற் கேட்ட மூன்று வரங்களையும் ஒருங்கே
கொடுத்ததனை இப்பாட்டில் அடுத்துக் கூறியது இறைவனது
அருட்பெருக்கின் விரைவு குறித்தது. "நாவாய் அசைத்த ஒலிஒலி
மாறிய தில்லையப்பாற், றீயா யெரிந்து பொடியாய்க் கழிந்ததிரிபுரமே"
(திருவிருத்தம் - பொது) என்ற அப்பர் சுவாமிகள் தேவாரம் காண்க.

     யார்க்கும் வித்தாக - ஆக்கும் வித்தாக - என்பனவும்
பாடங்கள். 70