Periya puranam
1148.







எண்ண ரும்பெரு வரங்கண்முன் பெற், றங்
     கெம்பி ராட்டிதம் பிரான்மகிழ்ந் தருள
மண்ணின் மேல்வழி பாடுசெய் தருளி,
     மனைய றம்பெருக் குங்கரு ணையினா
னண்ணு மன்னுயிர் யாவையும் பல்க
     நாடு காதலி னீடிய வாழ்க்கைப்
புண்ணி யத்திருக் காமக்கோட் டத்துப்
     பொலிய முப்பதோ டிரண்டறம் புரக்கும்.  71

     (இ-ள்.) வெளிப்படை. இவ்வாறு எண்ணுதற்கும் அரியவாயின
பெரிய வரங்களைப் பெற்றனராகி, அங்கு எமது பெருமாட்டியார்,
தமது பெருமான் மகிழ்ந்தருளும்படி இவ்வுலகத்திற் பூசை செய்து
அப்பயனை உயிர்களுக்கு அருளியதோடு, இல்லற ஒழுக்கத்தை
உலகிற் பெருகச் செய்யும் கருணையினால், நிலைபெற்ற உயிர்கள்
எல்லாம் பெருகுமாறு விரும்பிய காதலினால், நீடிய
வாழ்க்கைக்குரியதாகிய புண்ணியத் திருக்காமக்கோட்டத்தில்
எழுந்தருளியிருந்து, முப்பத்திரண்டு அறங்களையும் வளர்க்கின்றார்.

     (வி-ரை.) எண்ணரும் பெருவரங்கள் - வேறு எவராலும்
நினைத்தற்கும் அரியனவாகிய மேலே சொல்லிய மூன்று பெரிய
வரங்கள். எண் - எண்ணத்தகும் என்று கொண்டு மூன்று
வரங்களுக்கும் மூன்று அடைமொழிகளாகத் தந்தனர் என்றலுமாம்.

     மண்ணின்மேல் வழிபாடு செய்து அருளி- தாம் கேட்ட
முதலாவது வரத்தினை ஏற்றுக்கொண்டு செலுத்தியநிலை கூறப்பட்டது. காமாட்சி அம்மையார் காஞ்சிபுரம் திருக்காமக்கோட்டத்தில்
எழுந்தருளியிருந்து சிவபூசையினை நித்தியமாகச் செய்து
கொண்டிருக்கின்றார் என்பது. அருளி - அப்பூசையின் பயனை
உயிர்களுக்கு அருளி. "என்று மேத்தி வழிபடப் பெற்ற" (தக்கேசி
-கச்சி) என்ற நம்பிகள் தேவாரமும், "பூசனை என்றும் முடிவதில்லை
நம்பால்" (1145).

     மனையறம்...புரக்கும் - இதனால் அம்மையார் தாம் வேண்டிப்
பெற்ற இரண்டாவது வரத்தினைக் கொண்டு செலுத்திய நிலை
கூறப்பட்டது.

     நண்ணும் மன்உயிர் - நண்ணும் - வினைக்கீடாய்ப்
பிறவியில் வருகின்ற. மன் உயிர் - நிலைபெற்ற - அழிவில்லாத -
உயிர். உயிர்க்கு அழிவில்லை என்பதுசாத்திரமுடிபு.

     நீடியவாழ்க்கைப் புண்ணியம் - நிலைத்த இருப்பிடமாகக்
கொண்ட புண்ணியம் பெற்ற. புண்ணியம் - புண்ணியத்தைத்
தருகின்ற- புண்ணிய உருவாகிய - காமக் கோட்டம் என்றலுமாம்.

     திருக்காமக்கோட்டம் - காமாட்சியம்மையார்எழுந்தருளியிருக்கும் பிலத்துவாரமாகிய திருக்கோயில். காமக்கோட்டம் என்ற பெயர் போந்த காரணம் பலவகைகளாலும் காஞ்சிப்புராணத்தினுள் எடுத்துரைக்கப்பட்டது. அதனை

"ஒருமுறை யங்கட் காமமாந் தரும முஞற்றுநர் தமக்குமத்
தருமந் தருபயன் கோடி யாதலிற் கரடத் தடத்திழி கடாம்படு
                                           கலுழிப்
பெருவரை வதனப் பிள்ளையைக் குகனைப் பெற்றவ
                                  ளமர்பில மதுதான்
கருதரு காமக்கோடியென் றுலகிற் காரணப்
                              பெயரினால் வயங்கும்"  
(33)

"அன்றியுங் காமக் கிறையவர் தனத ரனையவர்க் கோடியர்
                                           தரலா
லென்றுமோ ரியல்பி னெங்கணும் விரவி யெவற்றினுங்
                              கடந்தபே ரொளியைக்
குன்றுறழ்கொம்மைக்குவி முலைத்தடத்தாற் குழைத்தருள்
                              கருணையெம் பிராட்டி
நன்றுவீற் றிருக்கும் பேரொளிப் பிலத்திற் கப்பெயர்
                              நாட்டலு மாமால்"  
(34)

"இன்னுமிப் புவனப் பரப்பினிற் காம மென்பன மனைவியர்
                                            மக்கள்
பொன்னணி யிருக்கை பூண்முதற் பலவாம் பூந்தளி ரணிநலங்
                                          கவற்றுந்
தன்னடி வணங்கி யிரந்தவர் தமக்குத் தடங்கிரி பயந்தபே
                                            ராட்டி
யன்னவை கோடி யளித்திட லானு மப்பெய செய்துமங்
                                     கதுவே"
   (35)

"அல்லதூஉங் கவைத்தாட் கரும்பகட் டூர்தி யடுதொழிற்
                               கூற்றினைக் குமைத்த
கொல்லையேற் றண்ண னுதல்விழிச் செந்தீக் கோட்படு
                                மொருதனிக் கருப்பு
வில்லியை விளையாட் டியற்கையிற் கோடி காமரா
                              விழித்துணைக் கடையா
வல்லியங் கோதை யாங்களித் திடலா லப்பெயர்
                            பூண்டது மாமால்.
"
      (36)

"மற்றுமா ருயிர்சேர் நாற்பொருட் பயனில் வகுத்தமூன் றாவது
                                            காமம்;
பற்றுகா மத்திற் கோடியா முடிவிற் பயில்வது வீடுபே றாகுங்;
உற்றவர் தமக்கு வீடுபே றளிக்கு முண்மையி னாலுமப்
                                      பெயராற்
சொற்றிடப்
படுமா லுலகெலா மீன்றா ளமர்ந்தருள் சுடரொளி
                                         விமானம்"
  (37)

"பின்னரு மொன்று ககரமே யகர மகரமாய்ப் பிரிதகு மூன்று
மன்னவே றுகைக்கு மயனரி யீச னாயமுத் தேவரைப் பகரும்;
இன்னவர் தம்மை யுகந்தொறுங் கோடி முறையெழில்
                            விழிகளிற் படைத்தாண்

மின்னிடைப் பிராட்டி யென்பதனாலு மப்பெயர் விளங்குமென்
                                     பதுவே"
  (38)

"வேறுமொன் றாங்கட் காவெனப் படுவாள் வெண்மல ராட்டிமா
                                             வென்பா
ளூறுதேங் கமலப் பொகுட்டாணை யணங்கா மூங்குவ ரிருவரு
                                             முகிலை
மாறுகொ ளைம்பா லுமைவிழிக் கோடி தன்னிடை வருமுறை
                                    யானு
மேலுமத்
திருப்பே ரெம்பெருமாட்டிக்கென்றெடுத்தியம்புவருணர்ந்தோர்"
(39)

"விந்துவின் வயங்கி யம்மைவீற் றிருக்கும் வியன்றிருச் சக்கர
                                              வடிவா
மந்தவான் பிலந்தா னியம்பிய காம மனைத்திற் மாதர மாகிப்
பந்தமில் காமக் கோட்டமென் றொருபேர் பரித்திடு;
                                     மற்றெவற் றினுக்கு
முந்திய பீட மாதலி னாதி பீடமு மொழிந்திடப் படுமால்"   (40)

என்ற வீராட்டகாசப் படலப் பாட்டுக்களாற் காண்க.

     இக்கோயில் காஞ்சிபுரத்தினடுவில் விளங்கும் தனியாலயம்.
சிவபெருமான்றிருக்கோயில்களிற் சென்று வழிபடுதலின்றி வேறெந்தக்
கோயிலினும் சென்று வழிபடுதலில்லாத மரபுடைய எந்தம்
பெருமக்களாகிய சைவ சமய பரமாசாரியர் மூவரும் முறையே சென்று
வணங்கி வழிபட்ட பெருமையுடையது. "தையலாளுல குய்ய வைத்த,
காரி ரும்பொழிற் கச்சி மூதூர்க் காமக்கோட்டமுண் டாக
நீர்போய்,
ஊரிடும் பிச்சை கொள்வ தென்னே யோண காந்தன் றளியுளீரே"
(இந்தளம் - 6) என்ற நம்பிகள் தேவாரமும், பிறவும் காண்க. இது
காமகோடி பீடமென்றும் - ஆதிபீடம் என்றும் பெயர் வழங்கப்
பெறுவது. இக்கோயில் ஒன்றொழியக் காஞ்சிபுரத்தினெல்லையில்
திருஏகம்ப முதலாக உள்ள எந்தச் சிவாலயத்தினும் அம்மையாரது
சன்னதி அமைக்கப்பெறாத பெருமை ஈண்டுச் சிந்திக்கத்தக்கது.

     புரக்கும் - நித்தியமாக இன்றைக்கும் அறங்களை வளர்த்துக்
கொண்டிருக்கின்றார் என்பது. பொலிய என்றது, என்றும் எங்கும்
அறம் புரப்பவர் அம்மையாரே யாயினும் திருக்காமக்கோட்டத்திற்
சிறக்க விளங்கும்படி புரக்கின்றனர் என்பதாம். 71