1149.
| அலகி
னீடவத் தறப்பெருஞ் செல்வி
யண்ட மாந்திரு மனைக்கிடுந் தீப
முலகில் வந்துறு பயனறி விக்க
வோங்கு நாண்மலர் மூன்றுட னொன்று
நிலவ வாண்டினுக் கொருமுறை செய்யு
நீடு தொன்மையா னிறைந்தபே ருலக
மலர்பெ ருந்திருக் காமக்கோட் டத்து
வைத்த நல்லற மன்னவே மன்னும். 72
|
(இ-ள்.)
வெளிப்படை. அளவில்லாத நீண்ட தவத்தினைச்
செய்யும் அறப்பெருஞ்செல்வியராகிய அம்மையார், பிரமாண்டமாகிய
தமது திருமனைக்கு இடும்பெரு விளக்குக்களாகிய முச்சுடர்களுமே,
அவ்வம்மையார் உலகில் வந்ததனாலுறும் பயனை அறிவிக்கும்படி
வந்தாற்போல, ஓங்குகின்ற புதிய நீலமலர்கள் மூன்றுடன்
கூடியதாகிய ஒரு பூ நிலவும்படியாக ஒரு ஆண்டுக்கு ஒருமுறை
மலர்கின்ற நீடிய பழைமையினால், நிறைந்த உலகத்தில் விளங்கும்
பெரிய திருக்காமக்கோட்டத்தில் வைத்த நல்லறங்கள்
நிலைபெறும்படியாக வீற்றிருந்தருளுவர்.
(வி-ரை.)
தீபம் - அறிவிக்க - மலர் மூன்றுடன் ஒன்று-
ஆண்டினுக் கொருமுறை - நிலவச்செய்யும் - தொன்மையால்,
உலகம் - மலர் - காமக்கோட்டத்து வைத்த அறம் மன்னச்
-செல்வி - மன்னும் என்று கூட்டி உரைத்துக் கொள்க.
அரும்பெருஞ்
செல்வி - காஞ்சியில் அறப்பெருஞ்
செல்வித்தெரு என்றொரு வீதியுண்டு. அஃது இப்போது
அரப்பணஞ் சேரித்தெரு என்று மருவிவழங்குகின்றது.
"தருமத்தின் செல்வி"என்பது தேவியின் திருநாமங்களுள்
ஒன்றாக நிகண்டுகளில் பேசப்படும்.
அண்டமாம்
திருமனைக்கு இடும் தீபம் - அண்டத்
தொகுதிகளெல்லாம் கூடிய கூட்டம் பிரமாண்டம் எனப்படும்.
தீபம் - சூரியன் - சந்திரன் - அக்கினி என்ற முச்சுடர்களும்
அண்டங்களுக்கு ஒளிசெய்யும் பேரொளிப் பொருள்களாதலின்
தீபங்களெனப்பட்டன. தீபம்போல்வதனைத்
தீபம் என்று
கூறினார்.
ஆண்டினுக்கு
ஒருமுறை நாண்மலர் மூன்றுடன் ஒன்று
நிலவச் செய்யும் நீடு தொன்மை - என்க. ஓர் ஆண்டினுக்கு
ஒருமுறை ஒரு தாளில் மூன்று நீலமலர்களையுடையதொரு பூவை
மலரச்செய்யும் என்பதாம். இது, முச்சுடர்களும் வந்து இங்குப்
பிராட்டியார் உலக நலம்பற்றிப் போந்து தவஞ்செய்து
கொண்டிருக்கின்றதன் பயனை உலகத்தார்க்கு அறிவிப்பது
போன்றிருந்தது என்க. மலர் - நீலமலர். "தோன்று மலர்த்
தீபச்சுடர்" என்று இரட்டையர் உலாவில் இதனைப் பாராட்டினர்.
இதன் விரிவு காஞ்சிப் புராணத்தினுட் காண்க. 72
|