1150. தீங்கு தீர்க்குநற் றீர்த்தங்கள் போற்றுஞ்
     சிறப்பி னாற்றிருக் காமக்கோட் டத்தின்
பாங்கு மூன்றுல கத்தினுள் ளோரும்
     பரவு தீர்த்தமாம் பைம்புனற் கேணி,
வாங்கு தெண்டிரை வேலைமே கலைசூழ்
     வைய கந்தனக் கெய்திய படியா
யோங்கு தன்வடி வாய்நிகழ்ந் தென்று
     முள்ள தொன்றுல காணியென் றுளதால். 73

     (இ-ள்.) திருக்காமக் கோட்டத்தின் பாங்கு...கேணி -
திருக்காமக் கோட்டத்தின் பக்கத்தில் மேல் நடு கீழ் என்னும்
மூன்றுலகத்திலுள்ளவர்களும் துதிக்கும் தீர்த்தமாகிய குளிர்ந்த
நீரையுடைய ஒரு தடாகம்; வாங்கு தெண்திரை...படிவாய் -
வளைந்த தெள்ளிய அலை வீசுகின்ற கடலாகிய மேகலையாற்
சூழப்பட்ட நிலவுலகத்தார்க்கு வீட்டுநிலை யடைவதற்கு ஏற்ற
படிகளையுடைய ஏணிபோன்று; ஓங்கு தன் வடிவாய்........உள்ளது -
உயர்ந்த நீர் வடிவாகவே நிறைவுற்று எக்காலத்தும் உள்ளதாய்;
தீங்கு தீர்க்கும்......சிறப்பினால் - தம்முள் மூழ்குகின்றவர்களின்
பாவங்களையெல்லாம் போக்கும் நல்ல தீர்த்தங்கள் எல்லாம்
போற்றுகின்ற சிறப்பினாலே; உலகாணி என்று ஒன்று உளது -
உலகாணி என்று பெயர்பெற்ற தீர்த்தம் ஒன்று உள்ளது. ஆல் -
அசை.

      (வி-ரை.) இப்பாட்டால் உலகாணித் தீர்த்தச் சிறப்புக்
கூறப்பட்டது.
உலகாணித் தீர்த்தம் என்று ஒன்று உள்ளது; அதுமற்ற
எல்லாத் தீர்த்தங்களும் போற்றும் சிறப்புடையது; மூவுலகத்தவர்களும்
பரவும் பெருமையுடையது; நிலவுலகத்துள்ளோர் முத்திநெறி
யடைவதற்கு ஏணி போன்றது; நீரின் வடிவாய் நிகழ்வது என்க.

     தீங்கு தீர்க்கும் நல்தீர்த்தங்கள் போற்றும் சிறப்பாவது
- தம்முள் மூழ்கினோரது பாவங்களைப்போக்கி அவற்றைத் தாம்
ஏற்றுக்கொள்ளும் தீர்த்தங்கள் அவ்வாறு ஏற்றுக்கொண்ட தமது
பாவங்களைப் போக்கிக்கொள்ள இதனுள் வந்து மூழ்கி வந்திக்கும்
சிறப்பாகும். திருக்குடமூக்கில் மகாமகத் தீர்த்தத்தின் வரலாற்றைத்
"தாவி முதற் காவிரிநல் யமுனை கங்கை சரசுவதிபொற் றாமரைபுட்
கரணி தெண்ணீர்க், கோவியொடு குமரிவரு தீர்த்தஞ் சூழ்ந்த
குடந்தைக்கீழ்க் கோட்டத்தெங் கூத்த னாரே" (திருத்தாண்டகம் -
10) என்றும் "பூமருவு கங்கைமுதற் புனிதமாம் பெருந்தீர்த்த,
மாமகந்தா னாடுதற்கு வந்துவழி படுங்கோயில்" "(திருஞான - புரா -
409) என்றும் விரித்துரைத்த திருவாக்குக்களை இங்கு நினைவு கூர்க.

     தீர்த்தம் - தூய்மை - பரிசுத்தம். தூய்மை செய்வதனால்
நீருக்குத் தீர்த்தம் என்று பெயர் வழங்குவதாயிற்று. அக்காரணம்
பற்றியே சிவபெருமானுக்குத் தீர்த்தன் என்று பெயர் வழங்கும்.
"ஆர்த்த பிறவித் துயர்கெடநா மார்த்தாடுந், தீர்த்தன்" (திருவெம்
- 12 திருவாசகம்); "தீர்த்தனைச்சிவனை" (கோயில்) குறுந்தொகை;
காண்க.

     தெண்திரைவேலை மேகலை சூழ் வையம் -
அலைகளையுடைய கடலானது நிலமகளுக்கு மேகலை போல
விளங்குவது. வேலை மேகலை - உருவகம். "எழு கோவை
மேகலை;எண் கோவை காஞ்சி."

     எய்திய படியாய் - படி - ஏணி. படிகளையுடையது. படி -
ஆகுபெயர். ஆய்- உவமஉருபு; "ஆள்வா ரிலிமா டாவேனோ?"
(திருவாசகம்) என்றாற்போல.

     படியாய் ஓங்கு தன் வடிவாய் - என்றது மேலேற்றும் சாதனமாகிய ஏணியின் தன்மை பெற்று உள்ளதாயினும் வடிவத்தால்
கீழ் நோக்கிய கேணியின் உருவமாகவே உள்ளது என்றதாம்.
படியாயும் - சிறப்பும்மை தொக்கது. "மேனோக்கிய மரமும் கீழ்
நோக்கிய கிணறும்" என்ற பழங் கல்வெட்டுக்களின் வாசகம்
நினைவுகூரத் தக்கது. தன் வடிவு - நீராகிய - கேணியில் அமைந்த
தீர்த்தமாகிய - தனது வடிவம். இதற்கு இவ்வாறன்றி அம்மையாரின்
வடிவு என்றுரைப்பாருமுண்டு. இப்பொருட்கு ஐம்பூதங்களும் சிவனது
அட்டமூர்த்தங்களுள் அடங்கி, அம்மையின் வடிவமாவன என்ற
உண்மை ஆளுடையபிள்ளையார் திருவாலவாயில் அருளிய
கனல்வாதத் திருப்பதிகங்களுட்குறிக்கப்பட்டது நினைவு கூரத்தக்கது.

     ஒன்று - ஒப்பற்ற தனிச் சிறப்புடையது என்ற குறிப்புமாம்.

     உலகாணி - தீர்த்தத்தின் பெயர். அம்மையார் இதன்கரையின்
பாங்கர் அறச்சாலையாக்கித் தவம் புரிந்தனர் என்பது காஞ்சிப்
புராணத்தாலறியப்படும். இதனையே காமக் கோட்டத்தின் பாங்கு
என்றார். "மூவருந் தம்முட் கூடன் முதலிய வேறுபாட்டான்,
மேவருங் கரணம் யாக்கை விடயமா தார மெல்லாம், ஆவகை
வரங்கள் பெற்ற வத்திறத் துலக முற்றும், பாவுதன் வடிவா யோங்கு
முலகாணிக் கரையின் பாங்கர்"
(தழுவக் குழைந்த படலம் - 136)
என்பது காஞ்சிப் புராணம் - உலகம் தன் வடிவாய்விளங்கப்பெற்றது
உலகாணி என்பர். சக்கரதீர்த்தம் - நேமித்தடம் - என்றும்
வழங்குவர். (கந்தபுரா)

     சிறப்பினாள் - பாங்கின் - வடிவாய் நிறைந்து - என்பனவும் பாடங்கள். 73