1151.
அந்த மின்றிநல் லறம்புரிந் தளிக்கு
     மம்மை தன்றிருக் காமக்கோட் டத்தில்
வந்து சந்திர சூரியர் மீது
     வழிக்கொ ளாததன் மருங்குபோ தலினாற்
சந்த மாதிர மயங்கியெம் மருங்குஞ்
     சாயை மாறிய தன்றிசை மயக்க
மிந்த மாநிலத் தவரெலாங் காண
     வென்று முள்ளதொன் றிங்குமங் குளதால். 74

     (இ-ள்.) வெளிப்படை. நல்ல அறங்களையெல்லாம்
எல்லையின்றிச் செய்து உயிர்களைக் காப்பாற்றும் அம்மையாருடைய
திருக்காமக் கோட்டத்தில் சந்திர சூரியர்கள் வந்து அதன் மேலால்
வான வழியில் நேர் செல்லாது பக்கத்தில் ஒதுங்கிப் பாகின்றபடியால்,
நேர் திக்குக்கள் மாறுபட்டு, அதனால் எவ்விடத்தும் நிழல்கள்
மாறியிருக்கின்றதனாலாகிய திசைமயக்கம், இந்தப் பெரிய
நிலவுலகத்தார்களெல்லாரும் காணும்படி எந்நாளும் உள்ளது; அது
இக்காலத்தும் உள்ளது.

     (வி-ரை.) அறம் அந்தமின்றிப் புரிந்து என்று கூட்டுக.
"எல்லா அறமும் யான் செயவேண்டும்" (1146) எனவும், "இடையறா
அறம்" (1147) எனவும், "அறம் புரக்கும்" (1148) எனவும்,
"நல்லறமன்னவே மன்னும்" (1149) எனவும் முன் உரைத்தவாற்றால்
என்றும் முடிவில்லாதபடி அறஞ் செய்கின்றார் என்பதாம்.

     அறம் புரிந்து அந்தம் இன்றி அளிக்கும் - என்று கூட்டி,
அறங்களைச் செய்து அதனால் உயிர்களை அழிவில்லாமற்
காக்கின்ற என்றுரைப்பாருமுண்டு.
சந்திர சூரியர் வந்து
அதன்மீது வழிக் கொளாது மருங்கு போதலினால்
என்க.
வந்து
- தத்தம் வான வீதியில் வந்து. மீது - நேர் மேலே. வழிக்
கொள்ளுதல்
- தத்தமக்குரிய வானவீதி வழியிற் போதல். மருங்கு
- சுற்றுப் பக்கம். மருங்கு போதல் - வலம்வருதல் போலச் சுற்றிப்
போதல் என்ற குறிப்பும் காண்க.

     சந்த மாதிரம் - வடக்கு கிழக்கு தெற்கு மேற்கு என்ற நேர்
திக்குக்கள். சந்தம் - அழகிய - நல்ல - என்றுரைப்பாருமுண்டு.

     மாதிரம் மயங்கிச் - சாயை மாறியதன் - காரணமாய்உளதாகும்
திசை மயக்கம் என்க. திசை மயக்கம் - திசை தெரியாது மக்கள்
மயங்கும் மயக்கத்தினைத் திசையின் மேலேற்றிக்கூறப்பட்டது.

     இன்றும் உளது - இன்றைக்கும் யாரும் நேரில்
அனுபவிக்கும்படி உள்ளது. இன்றும் அங்குச் சென்று
கூர்ந்துணர்வோர் இதனைக் கண்கூடாகக் காணலாம்.

     அளிக்கும் அன்னை - என்பதும் பாடம். 74